தமிழக அரசு தகவல்
சென்னை, மார்ச் 30–-
அனைத்து நிறுவன ஊழியர்களுக்கும் ஏப்ரல் 19-ந் தேதி வாக்குப்பதிவு தினத்தன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து தொழிலாளர் ஆணையர் மற்றும் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனருக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:–-
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறவுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 135-பி பிரிவில், வாக்குப்பதிவு தினத்தன்று தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள், அதாவது கடைகள், நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்குமே வாக்களிக்க வழிவகை செய்வதற்காக, அன்று ஒருநாள் சம்பளத்துடன் விடுமுறை அளிப்பது அந்த சட்டப்படி அவசியமாகும்.
மேலும், இதன் மூலம் தொகுதிக்கு வெளியே பணியாற்றும் ஊழியர்கள், தங்கள் சொந்த தொகுதிக்குச் சென்று வாக்களிக்க முடியும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, நிறுவனங்கள், கடைகளில் தினக்கூலியாகவோ, தற்காலிக பணியாளர்களாகவோ பணியாற்றுவோரும், வாக்குப்பதிவு தினத்தன்று சம்பளத்துடன் விடுமுறை பெறும் தகுதியைப் பெற்றுள்ளனர்.
எனவே தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், பொது மற்றும் தனியார் துறைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பி.பி.ஓ. நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவன அதிபர்களும், ஏப்ரல் 19–-ந் தேதியன்று அனைத்துத் தொழிலாளிகளுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அளிக்கும்படி அவர்களுக்கு உத்தரவிட வேண்டும். இந்த உத்தரவை அனைத்து நிறுவனங்களும் பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறையை தொடங்க வேண்டும். இதுகுறித்த விளம்பரங்களை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.