சென்னை, நவ. 2
“கலைமகள்- யூடியூப் சேனலை அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் மாதம் முதல் கொண்டு வரலாம் என்கிற எண்ணம் உள்ளது. இதேபோல் டெல்லியில் திருக்குறள் களஞ்சியம் நூலினை வெளியிடும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஜனவரி மாதம் மூன்றாம் வாரம் கலைமகளின் 94வது ஆண்டு விழாவை சென்னையில் சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளனர். விழாவில் மூன்று தமிழ் ஆளுமைகள் பாராட்டப்படுவதுடன் “கலை மகள்” பற்றிய ஆவணப்படம் ஒன்றையும் வெளியிட எண்ணி உள்ளோம்” என்று பதிப்பாளர் பி டி திருவேங்கட ராஜன் ஒரு அறிவிப்பை, ‘கலைமகள்’ தீபாவளி மலரில் வெளியிட்டு இருக்கிறார் (அன்புடன் ஒரு மடல்).
கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியனின் தலைமையில் வெற்றிகரமாக செயல்படும் ஆசிரியர் குழுவின் கை வண்ணத்தில் வழக்கம்போல வழவழப்பான தாளில் 228 பக்கங்கள் (விளம்பரங்களையும் உள்ளடக்கி). விலை ரூ. 200.
ஆசிரியரின் வணக்கத்தோடு ஓர் கடிதம். சாரதா பீடத்தின் பாரதி தீர்த்த சுவாமிகளின் அருளுரை, தொடர்ந்து “ஓம் நமோ நாராயணா… ” 8 எழுத்து மந்திரத்தை உலகறியச் செய்த வைணவ மகான் ஸ்ரீ ராமானுஜர், உலகிலேயே மிக உயரமான 216 அடி உயர “சமத்துவ சிலை” மகான் ஸ்ரீ ராமானுஜர் பற்றிய கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியனின் கட்டுரை, வித்யாதானம் சர்வதானத பிரதானம்: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அருளாசி -ஆன்மீக மனத்தோடு பக்கங்கள் புரள்கிறது.
எழுத்துலக பிரபலங்கள் மாலன், தேவி பாலா, இந்திரா சௌந்தர்ராஜன், மீ. விசுவநாதன், ராஜேஷ் குமார், டாக்டர் ஜோ ஜாய்ஸ் திலகம், ஜெயா ஸ்ரீனிவாசன், பிரபு சங்கர், இந்திர நீலன் சுரேஷ், லதா சரவணன், வித்யா சுப்ரமணியம், ஷை லஜா, ஜே செல்லம் ஜெரினா, ஏர்வாடி எஸ் ராதாகிருஷ்ணன், அமுதா பாலகிருஷ்ணன், ஆர் நாகராஜன் (மயிலை ஆர்ஆர் சபாவின் செயலாளர்), லதா ரகுநாதன் ஆகியோரின் சிறுகதைகள் (இவர்களில் 10க்கு 7 படைப்பாளிகள் கலைமகளின் ஆஸ்தானம்)
மாலன், ஷோபனா ரவி, விஜயகிருஷ்ணன் (இருவரும் சென்னை தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்கள் – நெறியாளர்கள்), வானவில் கே. ரவி (ஷோபனா ரவி உள்ளத்தரசர்), இசைக்கவி ரமணன் (நடமாடும் பாரதியார் என்று அடைமொழிக்காரர்), ராஜலட்சுமி, சுரேஜமீ, இதயகீதம் ராமானுஜம் உள்ளிட்ட கவிஞர்களின் கவிதைகள் (இதிலும் பாதி பேர் ஆஸ்தானம்),
தீபாவளி பெருமை பற்றி டாக்டர் வெங்கடேஷ், மொரிஷியஸ் கோவில்களும் தமிழர்களும் பற்றி மாத்தளை சோமு, ஓம் பூ: பூலோகம்- ஜி கிருஷ்ணன் (அறிவியல்), நேபாளம் என்னும் இந்து ராஜ்ஜிய பயணம்- டாக்டர் ஜெ பாஸ்கர் (கூர்கா பாணியில் தலையில குல்லா), பண்பாடு உணர்ந்து பண்டிகை.- சுடர்க்கொடி கண்ணன், உயர்வு இல்லை- தென்னாட்டு ஏகாம்பரம், பண்டைத் தமிழரின் வணிகக் குழுக்கள்- கிருஷ்ணன் டி.எஸ்., தப்பி தங்களால் தான் தமிழர்களுக்கு பெருமையா-– பெ. சிதம்பரநாதன், பாரதத்தின் நீர் மேலாண்மை- அபவர்கானந்தா, கலைமகள் ஆசிரியருடன் ஒரு நாள் செங்கோட்டை ஸ்ரீராம், சான்றோர் மேடையின் சந்தனத் துளிகள் -முனைவர் வ வே சு, எல்லாம் இறைவன் காட்சியே- நல்லப்பெருமாள், வாசகரைக் கொன்றது யார்? -நரசிம்ஹன் விஜயன் (ஹைகோர்ட் வக்கீல்)- படைப்புகள் விறுவிறுப்பு கூட்டும் நடையில் ருசிகரம்!
“இந்துவாக இருப்போம் இறுதிவரை என உறுதிமொழி எடுப்போம்” என கலைமாமணி ஜி. பாலசுப்பிரமணியனின் அழைப்பு “டூ இன் ஒன்”-( விளம்பரம் + கவிதை)
தீபாவளி மலர் என்றால் எந்த ஒரு இதழுக்கும் சினிமா இல்லாமலா? உண்டே- ஓஹோ ஓஹோ என்று ஒரு வாழ்க்கை: தந்தை 92 வயது சித்ராலயா கோபுவைப் பற்றி கலை வாரிசு காலச்சக்கரம் நரசிம்மா எழுதி இருக்கும் தந்தையின் அனுபவம், குரலை இரவல் கொடுத்த நூற்றாண்டு நாயகன் டி ஆர் மகாலிங்கம் பற்றி ஆஸ்திரேலியா நண்பர் சுந்தர தாஸ் கட்டுரைகள்- ருசிக்கும் புதுப்புது தகவல்கள்.
சியாமளாவைத் தெரியுமா?- இந்தியாவின் கோடை காலத் தலைநகர் சிம்லா, அதன் ஆதி பெயர் சியாமளா என்று வரலாற்றுச் சுவடு- தனக்கே உரிய நடையில் மனம் கவரும் விஎஸ்வி ரமணனின் எழுத்துக்கள்- அரசியல் பின்னணி வரலாற்றுப் பிரியர்களுக்கு பயனுள்ள படைப்பு.
ஓவியர்கள் வேதா, ஜமால், தமிழ், லோக ராஜ், ரோஹிணி ஆகியோரின் சித்திரங்களும் பேசும்.
–வீ. ராம்ஜீ
பெரிய புராணம் தனித்தமிழ் நூல்: தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனர் ஔவை அருள் கைவண்ணத்தில் எண்ணத்தில் நிற்கும் படைப்பு. சென்னை மாநகரத்தின் சிறப்புகளை பட்டியலிட்டபடி கட்டுரை ஆரம்பம். முதல் பாடலிலேயே தான் சொல்ல வந்த நாயன்மார்கள் எண்ணிக்கையைச் சுட்டிக்காட்டி விடுகிறார் சேக்கிழார் பெருமான். ஆம், பாடலில் 63 எழுத்துக்கள். அவர் பாட எடுத்துக் கொண்ட நாயன்மார்கள் 63 பேர் தானே. உலகலாம் என்பதில் உகரமும் அலகில் அகரமும் வணங்குவாம் என்பதில் மகரமும் வருவது ஒரு தனி சிறப்பல்லவா? பிரணவ மந்திரத்தையே நூல் விண்டுரைக்கிறது எனலாமே… பெரிய புராணத்துட் கூறப்படும் கார்காலம், பனிக்காலம், இளவேனில் முதலியவை பற்றி சேக்கிழார் கூறும் இடங்களில் அவரது வான நூற் புலமையும் அவ்வப்பருவ கால மாற்றங்களை அளந்து கூறும் அறிவு நுட்பத்தையும் நன்கு உணரலாம் என்று தெளிவுபட உரைத்திருக்கிறார். பெரியபுராணம் கன்னடம் வடமொழியில் கிரந்த எழுத்துக்களில் தெலுங்கில், ஆங்கிலத்தில் யார் யாரால் வெளியிடப்பட்டது என்று விரிவான தகவல்களும் அவை அருளின் ஆய்வில், அவரின் அதீத முனைப்பில் உதிர்ந்த முத்துக்கள். |