சிறுகதை

ஏன் இப்படி பொய் சொல்ற ? | ராஜா செல்லமுத்து

ஒரு விழாவின் மண்டபத்தில் இரைச்சல் இன்னும் இன்னும் என்று அதிகமாகிக் கொண்டே இருந்தது.

விழாவை விட விருந்தினர்களின் இரைச்சல் மிகுந்தே இருந்தது.

நானும் நண்பர் ஒருவரும் சலித்தபடியே உட்கார்ந்திருந்தோம் . ஏன் இவ்வளவு சத்தமா பேசிட்டு இருக்காங்க.

“தெரியலையே”

“எல்லாம் பொழுது போக்குக்கு வந்து ஒக்காந்திருப்பானுக போல”

அதுக்கு பங்சன விட்டுட்டு இப்பிடியா பேசிட்டு இருப்பானுக. ஏன் வந்தோம் எதுக்கு வந்தோம்னு தெரியாமலே இப்பிடி பேசிட்டு இருக்கானுக. நம்மளையும் கேக்க விடாம அவனுகளும் கேக்காம என்று இருவரும் பேசிய படியே இருந்தோம்.

“டிரிங்…. டிரிங்…. என்ற ஒரு செல் போனிலிருந்து மணியடித்தது.

“ஹலோ…. என்றான் ஒருவன் பவ்யமாக.

“பரவாயில்லையே ரொம்ப பக்குவமான ஆளா இருப்பான் போல. ரொம்ப பக்குவமா பேசுறானே. ஆளுன்னா இப்படித்தாங்க இருக்கணும். பக்கத்தில ஒக்காந்திட்டு இருக்கிறவங்களுக்கு டிஸ்டர்ப் பண்ணக்கூடாதுன்னு எவ்வளவு அழகா பேசுறான். ஆகா, இவன் தாங்க உண்மையான மனுசன் என்று நானும் நாகராஜூம் பேசிக் கொண்டிருந்த போது

இப்ப நான் வளசரவாக்கத்தில் இருக்கேன் என்றான் செல் போனில் பேசியவன்

என்னது வளசரவாக்கமா?

ஓ, அது தான் இவ்வளவு மெதுவா பேசுறானா? ஆகா பயங்கரமான ஆளா இருப்பான் போல என்று இருவரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தோம்.

சார் இப்ப வளசரவாக்கம் அப்படியே போரூர் போயிட்டு, கஸ்டமரப் பாத்திட்டு வந்திருவேன் என்றான் மீண்டும்.

“நாகராஜ்”

“ம்”

“ரொம்ப பொய் சொல்றானே’’

” ஆமா ”

“சரி என்னதான் பேசுவான்னு பாப்பமே என்ற இருவரும் அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருந்தோம்.

‘‘ஓ.கே சார் முடிச்சிருவேன்; நீங்க வருத்தப்படாதீங்க’’ என்று ஆறுதல் வார்த்தைகளையும் சொல்லிக் கொண்டே இருந்தான். ஒரு பொய் சொல்றது மட்டுமில்லாம மேற்கொண்டும் பொய் சொல்லிட்டே போறானே என்று இருவரும் பேசிவிட்டு விழாவைக் கவனித்துக் கொண்டிருந்தோம்.

விழா ….கொஞ்சம் விறுவிறுப்பாகவே இருந்தது . மீண்டும் டிரிங் …. டிரிங்…. டிரிங்…டிரிங்… அவனின் செல் போன் சிணுங்கியது.

ஓ.கே சார் இப்ப தான் வளசரவாக்கத்தில் இருந்து கௌம்புறேன்’, என்றவனை மீண்டும் பார்த்தோம் .பொய் சொன்னாக்கூட பரவாயில்ல நாம ரெண்டு பெரும் ஒக்காந்திட்டு இருக்கோம். அது கூட தெரியாம அவன்பாட்டுக்கு அள்ளி விட்டுட்டு இருக்கான் பாரு.

‘இன்னும் என்னென்ன பேசுவான்னு பாப்போம் என்ற படியே பார்த்துக்கொண்டிருந்தோம். மேலும் மேலும் பொய்யாய்ப் பேசிக் கொண்டிருந்தான்.

நாகராஜூ

சொல்லுப்பா, …..இவ்வளவு தைரியமா ? இவ்வளவு ஆளுக இருக்கும்போது இப்படி பொய் சொல்றானே. தனியா இருந்தா என்னென்ன பேசுவான்’ என்று அவனை நாங்கள் பார்த்துக் கொண்டே இருந்தோம்.

அவன் பேசாமல் பொய்யை மேலும் மேலும் அடுக்கிக் கொண்டே போனான்.

’ “ஹலோ எங்க இருக்க?

“ம் ….. கே கே. நகர்ல

என்னது கே.கே நகர்லயா?

‘ஆமா’ என்று நான் அழுத்திச் சொன்ன போது

வீட்டுலயா? வெளியிலயா?

வீட்டுல தான் பெறகு என்னமோ பின்னால சத்தம் ஏதோ கேக்குதே என்றவனிடம் மிகுந்த சிரமப்பட்டுச் சமாளித்தேன். ஸாரிங்க ஒருபங்ஷன்ல இருக்கேன்

அப்பிடிச் சொல்லுங்க என்றவனின் பேச்சில் தம்பி தம்பி என்று என்னை நாகராஜ் கூப்பிட்டார். சொல்லுங்க நமக்கெல்லாம் இது வராது தம்பி .ஏன் இப்படி பொய் சொல்ற. உண்மைய மட்டுமே பேசு. இல்ல மாட்டிகிருவ என்று நாகராஜ் எச்சரித்தார்.

பொய் ஒரு மனிதனைத் தப்பிக்க வைக்கலாம். ஆனால் வாழ வைக்காது என்று தெரிந்து கொண்டேன். உண்மையை மட்டுமே என் நண்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *