சிறுகதை

ஏக்கம் – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

ஒவ்வொரு அதிகாலையும் ஆறுமுகம் எழுந்து நெடுஞ்சாலையில் போய் நின்று கொள்வான். போகிற வருகிற பேருந்துகளை எல்லாம் பார்த்து விட்டு வந்து தான் அவனுடைய அன்றாட வாழ்க்கை ஆரம்பம் ஆகும். சில நேரங்களில் இரவில் கூட நின்று கொள்வான். இப்படி ஒவ்வொரு முறையும் அவன் அதிகாலையில் எழுந்து நெடுஞ்சாலைக்கு போவதும் பின்பு வந்து குளித்துவிட்டு மற்ற அலுவல்களை செய்வதும் உடன் இருந்த நண்பர்களுக்கு வியப்பாக இருந்தது .

முதலில் இதைப் பற்றித் தெரியாத நண்பர்கள் ஏதோ காலையில் எழுந்து டீ, காபி சாப்பிட்டு விட்டு வருகிறான் போல என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஆறுமுகத்தின் செயல் .ஆச்சரியத்தைத் தந்தது.ஒரு நாள் ஆறுமுகத்திற்கு தெரியாமல் அவன் பின்னால் சென்றார்கள். தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டு போய் வருகிற பேருந்துகளையெல்லாம்உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

எதற்காக இவன்வார போற வண்டிய உற்றுப் பார்க்கிறான்.அந்தப் பேருந்துகளில் என்ன இருக்கிறது? என்று அறியாத நண்பர்கள் என்னதான் செய்கிறான்; பார்க்கலாம் என்று எண்ணி நின்று கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பேருந்தாக வர வர அத்தனையும் கழித்துக் கட்டிய ஆறுமுகம் பொள்ளாச்சி என்று பொரித்த பேருந்தைப் பார்த்ததும் அவர் மனதில் உற்சாகம் ஏற்பட்டது. அந்தப் பேருந்தை வைத்த கண் வாங்காமல் பார்த்தான். அந்த பேருந்தில் பின்னால் சிறிது நேரம் ஓடியும் சென்று கொண்டிருந்தவனைப் பார்த்து அவர்களுக்கு வியப்பாக இருந்தது.

” என்ன இது பஸ்ஸுக்கு பின்னாடி ஓடிக்கிட்டு இருக்கிறான்? என்று நினைத்தவர்கள் ஆறுமுகத்திடம் வந்தார்கள் .

“என்ன ஆறுமுகம், ஏன் ஒரு பஸ்ஸ பார்த்தது ஓடுற? என்றனர்.

அதை நண்பர்கள் பார்த்து விட்டார்களே? என்று வெட்கப்பட்ட ஆறுமுகம் தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு

” என்னை மன்னிச்சிடுங்க. எனக்கு எங்க ஊரு நியாபகம் வந்துகிட்டே இருக்கும் .அதனால தான் ஒவ்வொரு நாளும் எங்க ஊருக்கு போற பஸ் நான் பாத்துட்டு தான் வருவேன் . அந்த பஸ்ல இருந்து எங்க பொள்ளாச்சி காரங்க யாராவது வராங்களா ? இல்ல போறாங்களா? அப்படின்னு பார்க்கிறது வழக்கமான வச்சிருக்கேன் “என்றான் ஆறுமுகம்

” அடப்பாவி இப்படி ஒரு ஆசையா? என்று ஆச்சரியப்பட்டார்கள் நண்பர்கள் . இருந்தாலும் அவனின் ஈரம் கலந்த மனது அவர்களுக்கு வியப்பைத் தந்தது.

மறுநாள் காலை ஆறுமுகம் எழுந்து போவதற்கு முன்னால் இரண்டு மூன்று நண்பர்கள் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்தார்கள்.

” நம்ம ஊரு இது மதுரை பஸ். இந்த பஸ் திருநெல்வேலி போகுது. நம்மூர் பஸ் என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் போது பொள்ளாச்சி, பொள்ளாச்சி பஸ் வந்திருச்சு என்று ஆறுமுகமும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.

அதுவரை விரத்தியும் வேதனையுமாய் வாழ்ந்து கொண்டிருந்த அந்த நண்பர்கள் தங்கள் ஊரின் பேருந்தைப் பார்த்ததும் ஆச்சரியம். சந்தோஷம். அடுத்த அடுத்த நாளும் தங்கள் ஊர் பேருந்து பார்க்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள் ஆறுமுகமும் அவன் நண்பர்களும்.

#சிறுகதை

Loading

2 Replies to “ஏக்கம் – ராஜா செல்லமுத்து

  1. ஏக்கம். இது உண்மையான விஷயம். நான்கூடபத்திரிகை படிக்கும் போது முதலில் காஞ்சீபுரம், வேலூர், இந்த ஊர்செய்திகளைப்பார்ப்பேன்.பிறந்த மாவட்டம் காஞ்சீபுரம், அதே போல்.
    பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *