செய்திகள் நாடும் நடப்பும்

‘ஏஐ’ விழிப்புணர்வு, புதிய தலைமுறையின் மனக் கோட்பாடுகள்

வளரும் துறையில் தமிழகம் சாதிக்க முதல்வர் திட்டம் என்ன?


நாடும் நடப்பும் – ஆர்.முத்துக்குமார்


கடந்த 40 நாட்களுக்கும் மேலாக சென்னையின் பெருமைமிகு அண்ணா பொறியியல் கல்வி வளாகத்தில் நடப்பு ஆண்டிற்கான பொறியியல் படிப்பிற்கான நேரடி கலந்தாய்வு தரவரிசைப்படி திருவிழாக் கோலம் கொண்டு நடந்து வருகிறது. அடுத்த வாரம் நிறைவு பெற இருக்கும் இந்த நிகழ்வில் பல ஆயிரம் மாணவர்கள் தங்கள் எதிர்கால கனவுகளுக்கு நல்ல வழிகாட்டியாக இத்திருவிழா இருப்பது தான் உண்மை.

ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களும், பெற்றோர்களும் பாடத்திட்டத்தை தேர்வு செய்யும் போது கணினித் துறையா? பாரம்பரிய பொறியியல் படிப்புகளான மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் பிரிவா? என்று குழம்பியபடி பல்வேறு நபர்களிடம் ஆலோசனை பெற்று ஓர் உறுதியான இறுதி முடிவை எடுப்பார்கள்!

இம்முறை அந்த விவாதத்தில் புதியதாய் நுழைந்து இருக்கும் ஓர் சொல் ‘செயற்கை நுண்ணறிவு’! அதாவது ஏஐ, AI (artificial intelligence) ஆகும்.

உலகமே இன்று அதிகமாக உச்சரிக்கும் இந்த மிக பிரபலமான வார்த்தைகளின் சக்தி சாமானியனுக்கும் மெல்ல புரிய ஆரம்பித்து விட்டது.

விஞ்ஞான கதைகளின் கருவாக இதுவரை இருந்த ‘ஏஐ’ இன்று எல்லோர் கையிலும் இருக்கும் மொபைல் போன்களிலும் உபயோகத்திற்கு வந்து விட்டது.

விரைவில், முன்பு விஞ்ஞானக் கதைகளில் வருவது போல் கடுமையான சீதோஷணப் பகுதிகளிலும், அசுர வேகத்திலும் துல்லியமாய் நொடிப் பொழுதையும் வீணாக்காமல் செயல்புரியும் திறனுடனும் தயாரிப்பு, திட்ட வடிவமைப்பு துறைகளில் நுழைந்து வருங்கால உற்பத்தியின் போக்கையே மாற்றும் வல்லமை அதற்கு இருப்பதை உணர முடிகிறது.

கட்டுரையை எழுதுவது, பல ஆயிரம் கோடி தகவல் திரட்டை கனப்பொழுதில் ஆராய்ந்து உரிய பதிலையோ, தீர்வையோ தரும்.

ஆக எப்படி 2000–ம் ஆண்டு துவக்கத்தில் y2k என்ற அச்சத்திற்கு இந்திய இளைஞர் படை உலகெங்கும் சிவப்பு கம்பள வரவேற்பை பெற்றனரோ, அதே வேகத்தில் செயற்கை நுண்ணறிவு நிபுணர்களுக்கும் சர்வதேச வேலைவாய்ப்பு துறையில் சிறப்பான இடம் காத்திருக்கிறது.

சட்டத்துறை முதல் அண்டசராசர விதிகள் வரை தன்னுள் கொண்டு உரிய தீர்வுகளைத் தரும் என்பதால் இன்றைய பொறியியல் மாணவர்கள் இத்தொழில்நுட்பங்களை பற்றிய படிப்பில் ஆர்வம் காட்டி வருவது சரியான முடிவாகும்.

‘‘நான் இனி சாதாரண பண்டைக்கால தொலைபேசியை மட்டும் உபயோகிப்பேன்’’ என்று கூறிட பூலோகவாசிகளால் சொல்ல முடியாத அளவிற்கு கடந்த 15 ஆண்டுகளில் நமது ஆறாம் விரலாய் மொபைல் போன் ஒட்டிக்கொண்டு விட்டது.

அதன் நன்மை தீமைகள் பற்றிய விவாதங்களுக்கு உரிய தீர்வு பெறப்பட நேரம் வரும் முன்பே, இதே அடுத்த யுக புரட்சியான ‘ஏஐ’ நம் அன்றாட வாழ்வில் நுழைந்து விட்டது.

செயற்கை நுண்ணறிவு என்பதை கணினியில் உள்ள ஓர் மென்பொருளோ, அது மனித இயந்திரங்களை இயக்கும், எண்ண ஓட்டங்களையும் கொண்ட மனித மனம் போலும் ஓரளவு தர்க்க ஞானம் கொண்டும் செயல்பட வைக்க முடியும்.

மனிதனின் ஆசைகள் கொண்டு செயல்படும் இந்த நுண்ணறிவு ஏற்படுத்த இருக்கும் பின் விளைவுகள் பெரும் சர்ச்சை பொருளாக மாறும் காலம் நெருங்கி விட்டது!

ஓர் அரசியல் தலைவருக்கு சக கட்சிக்காரர் தரும் ஆலோசனைகளை விட இதுபோன்ற நுண்ணறிவு ஒட்டுமொத்த தேசமே மேம்பட நல்ல ஆலோசனை தரும்! ஆக அடுத்த தலைமுறை தலைவர்களை தேர்வு செய்யும் திறன், தனித்துவ மேன்மை கொண்டதாக இருக்கும்.

இப்படி நம்மை நாமே நம்பாமல் இயந்திரமய சிந்தனைகளுக்கு எதுவரை செவி சாய்க்க வேண்டும்? இந்த வாதத்தை துவங்கும் நேரத்தில் இன்றைய பொறியியல் மாணவர்கள் அத்துறையில் புலமை பெற்று வழிகாட்டிகளாய் செயல்பட்டு கொண்டு இருப்பார்கள் அல்லவா?

கடந்த ஐந்து ஆண்டுகளில் நம் இளைஞர்களின் சுயகுறிப்பு வரைவுகளில் எனக்கு செயற்கை நுண்ணறிவு பற்றி தெரியும் என குறிப்பிடப்பட்டு வருவது 15 மடங்கு உயர்ந்துள்ளது.

இனி வரும் காலத்தில் அது எப்படி நாம் எனக்கு சமூக வலைதளங்களில் தகவல் அனுப்ப தெரியும் என்பதை எல்லாம் குறிப்பிடுவது கிடையாது அல்லவா? அது போல் எனக்கு ‘ஏஐ’ பற்றிய அடித்தளம் இருக்கிறது என்பது குறிப்பிடப்பட தேவையே இருக்காது!

இந்தக் காலக்கட்டத்தில் தமிழகம் இத்துறையில் சாதிக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்மாதிரி முயற்சிகளை துவக்க தயக்கம் காட்டக்கூடாது.

இம்முறை கலந்தாய்வில் 11 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லையாம், அது ஏன்?

தமிழகத்தில் உள்ள 442 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 780 இடங்கள் நிரப்பப்பட்டு இருக்கிறது, அதில் 11 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவிகித சேர்க்கை இருப்பது ஏன்?

68 கல்லூரிகளில் 95 சதவிகிதமும், 11 கல்லூரிகளில் ஒருவர் கூட சேராதது ஏன்?

இந்த கேள்விகளுக்கு நிபுணர்களின் விளக்கத்தை பெற வேண்டும், அதுமட்டுமின்றி இதே பொறியியல் மாணவர்களை இந்த தகவல் திரட்டை மேலும் பல கோணங்களில் சிந்தித்து காரணங்களை விவரிக்க வைத்தால் அது அவர்களுக்கும் நல்ல அனுபவப் பாடமாக இருக்கும்.

இதை கொண்டு மாநில AI கல்வி அறிவின் திறனை உலகமே பார்த்து புரிந்து கொள்ள வைக்கலாம். மேலும் அம்மாணவர்களின் சிந்தனா திறன் எல்லா தரப்பு கல்லூரிகளுக்கும் அடுத்த கல்வி ஆண்டில் எடுக்க வேண்டிய முயற்சிகளுக்கும் திசைகாட்டியாக இருக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *