முழு தகவல்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம்: துள்ளலிசை குரலோன்!

‘பாடும் நிலா பாலு’ என்று தமிழ் திரைப்பட இசைக் காதலர்களால் அன்பாக அழைக்கப்படுபவர் திரைப்பட பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். அப்போதைய சென்னை மாகாணத்தின் (தற்போதைய ஆந்திர மாநிலம்) நெல்லூர் மாவட்டத்தில் 1946 ஆம் ஆண்டு ஜூன் 4 ந்தேதி பிறந்தவர். இவருடைய தந்தை, எஸ் பி சம்பமூர்த்தி, தாய் சகுந்தலம்மா. எஸ்பிபிக்கு, உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள். காதலித்து திருமணம் செய்து கொண்ட எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மனைவி பெயர் சாவித்ரி, மகள் பல்லவி, மகன் எஸ். பி. பி. சரண்.

“ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்டவர் என்றாலும், எஸ். பி. பி. (S.P.B.) என்ற முன்னெழுத்துகளால் அன்பாக அழைக்கப்படுகிறார். 1966 ஆம் ஆண்டு ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து திரைப்படங்களில் பாடத் தொடங்கினார். உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான (40 ஆயிரம்) திரைப்பட பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார்.

விருதுகளை அலங்கரித்த எஸ்பிபி

இவர் திரைப்பட பின்னணி பாடகராக மட்டுமல்லாது, திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர். இந்திய அரசு இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 2011 ஆம் ஆண்டில் பத்மபூஷண் விருதும் வழங்கியது. இவருக்கு 2016 ஆம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். எஸ். பி. பி. முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. பிலிம்பேர் விருதினை ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார். ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறை பெற்றுள்ளார்.1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றிருக்கிறார்.

புகழ்பெற்ற தமிழ் திரைப்பட உச்சநாயகர்களான எம். ஜி. ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் என பல நடிகர்களுக்கு 1970களில் பின்னணி பாடியுள்ளார். தென்னிந்திய திரையிசையில் வெற்றி கூட்டணியாக இளையராஜா, எஸ். பி. பி., எஸ். ஜானகி கூட்டணி 1970களின் கடைசியில் உருவானது. இந்நிலையில், கமல், ரஜினி, விஜயகாந்த், சத்தியராஜ், கார்த்திக், பிரபு என அனைத்து முன்னணி கதாநாயகர்களுக்கும் புகழ்பெற்ற பாடல்களை பாடி அசத்தினார். அதனைத்தொடர்ந்து, தற்போதைய முன்னணி காதாநாயகர்களான விஜய், அஜீத் உள்ளிட்ட முன்னணி நாயகர்களுக்கும் பாடி வருகிறார் எஸ்பிபி.

ஏசுதாசுக்கு பாத பூஜை

எத்தனை உயரத்தை தொட்டாலும், பிரபல பாடகராக இருந்த கே.ஜே.ஏசுதாஸ் போல பாட முடியாது என்று, எப்போதும் அவரை தனது மானசீக குருவாக கொண்டாடுவார். அதன் வெளிப்பாடாக, சினிமா பின்னணி பாடகராகி 50 ஆண்டுகள் ஆனதையொட்டி, கனடா, மலேசியா, ரஷியா, இலங்கை, துபாய், அமெரிக்கா என உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகள் நடத்திவிட்டு சென்னை திரும்பியபோது, பின்னணி பாடகர் ஏசுதாசையும், அவரது மனைவி பிரபாவையும் மேடைக்கு அழைத்து அவர்களுக்கு, எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், அவரது மனைவி சாவித்ரியும் பாத பூஜை செய்து, கால்களில் விழுந்து வணங்கினார்கள்.

என் குரு ஜேசுதாஸ். அவருக்கு காணிக்கை செலுத்தும் விதமாக நான் பாத பூஜை செய்தேன். அவர் ஒரு ரிஷி, யோகி. அவருக்கு மாதிரி ஒரு குரல் கிடைப்பது பூர்வஜென்ம புண்ணியம் என்று உணர்ச்சி மேலிட கூறினார். அதனைத்தொடர்ந்து, ஏசுதாஸ் கூறும்போது,

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என் உடன்பிறந்த சகோதரரை போன்றவர். அவருக்கு சரஸ்வதியின் ஆசி இருக்கிறது. அவர் எனது சொந்த தம்பி. எங்கள் இருவருக்கும் சரஸ்வதியின் அருள் இருக்கிறது. நாங்கள் ஒருதாய் வயிற்றில் பிறக்காத சகோதரர்கள் என்றார்.

மேலும் அறிய… https://tinyurl.com/yxhanbzy

சுற்றுச்சூழல் காதலர் எஸ்பிபி

2005 ஆம் ஆண்டில், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதித்திரட்டும் நிகழ்ச்சியில் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கலந்துகொண்டு பேசும் போது, ” இந்தப் புனிதமான நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சுனாமி ஏன் ஏற்பட்டது? இதற்குக் காரணம் யார்? மனிதர்களாகிய நாம்தான் காரணம். நாம் இயற்கையை, பஞ்ச பூதங்களை சற்றும் மதிக்காமல் சிறிதளவு கூட அக்கறையில்லாமல் மாசுபடுத்தி வருகிறோம். வாகனப் புகையால் காற்று மண்டலம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.

சாலையில் எச்சில் துப்புவது, கண்ட இடத்திலும் குப்பைக் கூளங்களை வீசுவது, பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது என்று பொறுப்பின்றி செயல்படுகிறோம். பேருந்து நிலையங்களில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் கோப்பைகள், பேப்பர்கள் என பொறுப்பின்றி நடந்து கொள்கிறோம். நாம் ஒருவர் குப்பை போடுவதால் இயற்கையே அழிந்துவிடுமா? என்று ஒவ்வொருவரும் நினைப்பதால்தான் இந்த நிலைமை. இப்படியே பலகோடி பேர் நினைக்கும் போது இயற்கைச் சூழ்நிலை பாதிக்கப்பட்டு சீற்றமாக மாறுகிறது. எனவே நாம் அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இனி வரும் தலைமுறையினருக்கு ஒரு பாதுகாப்பான சுகாதாரமான உலகை நாம் விட்டுச் செல்ல வேண்டும் என்று , கேட்டுக் கொண்டார்.

மேலும் அறிய… https://tinyurl.com/y34sdz95

வாடா போடா நண்பர்கள்

எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கும், இசைஞானி இளையராஜாவிற்குமான நட்பு 50 வருடங்களைக் கடந்தது. எஸ்.பி.பி. தமிழ்த் திரையுலகில் பாட வந்தது முதலே இளையராஜா மற்றும் அவரது சகோதரர்களுடன் மிக நெருங்கிய நட்பிலிருந்து வந்தார். என்ன தான் இடைப்பட்ட காலத்தில் இசை நண்பர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டாலும், அவர்களுக்கு இடையேயான நட்பும், அன்பும் எப்போதும் அவர்களுக்குள் இருக்கிறது .

கடந்த 2017 ஆம் ஆண்டு, இளையராஜா சார்பில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அதில், ‘இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறி செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத்தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும்’ என்று குறிப்பிட்டிருந்தது. இந்த செய்தியானது திரையுலகினர் மட்டுமல்ல, அவரது ரசிகர்களின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, இளையராஜா இசையமைத்த பாடல்களை இனி கச்சேரிகளில் பாடமாட்டேன் என்று எஸ்பிபி அறிவித்தார். இந்நிலையில், தனியார் இசை நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக எஸ்.பி.பாலசுப்ரமணியம் கலந்து கொண்டபோது, சிறுவன் ஒருவன், நினைவெல்லாம் நித்யா படத்தில் இடம்பெற்ற ‘ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்’ என்ற பாடலை பாடினான். இதைக் கேட்ட எஸ்.பி.பி.தன்னையும் மறந்து அழுதே விட்டார். இதனால் அந்த அரங்கிலிருந்த அனைவரும் ஒரு நிமிடம் உறைந்து போனார்கள்.

அப்போது பேசிய பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ‘ஒரு சம்திங் ஸ்பெஷல் இளையராஜாவிடம் எப்போதுமே உண்டு. அதைச் சொல்லாமல் போனால், பாராட்டாமல் இருந்தால், அதுவே ஒரு ஆதங்கமாகிவிடும். நோயாகிவிடும். நாம் நோயாளியாகிவிடுவோம். ’நினைவெல்லாம் நித்யா’ படத்தில் வந்த ‘ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்’ பாடலை இப்போதும் கேட்டிருப்பீர்கள். என்ன கம்போஸிங் கவனித்தீர்களா? ஒவ்வொரு வார்த்தைகளிலும் அப்படியொரு சங்கதியை, சின்னசின்ன சங்கதியைப் போட்டிருப்பார். ஒவ்வொரு இசைக்கருவியின் நுணுக்கங்களை அழகாகக் கையாண்டிருப்பார்.

இப்படியொரு இசையை இளையராஜாவைத் தவிர, வேறு யாராவது கம்போஸ் செய்திருக்கிறார் என்று நீங்களே சொல்லுங்கள்.. அவையெல்லாம் இளையராஜாவுக்கு மட்டுமே தனி ஸ்பெஷல். இதையெல்லாம் பார்க்கும் போது, இளையராஜாவுக்கு எத்தனை முறை தேசிய விருது கொடுத்திருக்கவேண்டும் என யோசித்துப் பாருங்கள். இளையராஜா, இன்னும் பல சாதனைகள் புரியவேண்டும். இன்னும் இன்னும் பல இசைகளைத் தரவேண்டும். இளையராஜா நீடூழி வாழவேண்டும்’ என்று கண்ணீர் மல்க கூறினார்.

மேலும் அறிய… https://tinyurl.com/y6p6j4g4

மீண்டும் எஸ்பிபி-இளையராஜா

இளையராஜாவுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மீண்டும் சேர்ந்துள்ளது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளித்துள்ளது. இசைஞானி இளையராஜாவின் இசையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடிய பாடல் அனைத்துமே அருமை. அவர்களின் கூட்டணி என்றுமே வெற்றிக் கூட்டணி. இந்நிலையில் அவர்களுக்கு இடையே பாடல்களுக்கான ராயல்டி பிரச்சனை ஏற்பட்டு பிரிந்தனர். அதனைத்தொடர்ந்து, இளையராஜா இசையமைத்த பாடல்களை இனி பாட மாட்டேன். வேறு இசையமைப்பாளர்களின் பாடல்களையே பாடுவேன் என்று அறிவித்திருந்த நிலையில் இருவரும் மீண்டும் சேர வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் வைத்தனர்.

இந்நிலையில் இளையராஜா தடை விதித்தாலும் அவர் இசையமைத்த பாடல்களை தொடர்ந்து பாடுவேன் என்று 2019 ல் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். அதன் பின்னர், ஜூன் மாதம் 2ம் தேதி இவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்ற இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சியில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டார். இதனையடுத்து, இசை ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடினர்.

மேலும் அறிய… https://tinyurl.com/y6bd7ceh

திரும்பி வருவாய்: இளையராஜா

கொரோனா நோய்த்தொற்றால் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மிகவும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில், இசையமைப்பாளரும் எஸ்.பி.பி.யின் நெருங்கிய நண்பருமான இளையராஜா, எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து மிகவும் வேதனையடைந்ததால் தன்னுடைய எண்ணங்களை விடியோவாக வெளியிட்டு கூறியதாவது:-

பாலு, சீக்கிரமாக எழுந்து வா. உனக்காகக் காத்திருக்கிறேன். நம்முடைய வாழ்வு வெறும் சினிமாவோடு முடிந்து போவதில்லை. சினிமாவோடு தொடங்கியதுமில்லை. எங்கேயோ ஒரு மேடை கச்சேரிகளில் ஒன்று சேர்ந்து ஆரம்பித்த அந்த இசை நிகழ்ச்சி. அந்த இசை நமது வாழ்வாகவும் நமக்கு முக்கியமான வாழ்வுக்கு ஆதாரமாகவும் அமைந்தது.

அந்த மேடை கச்சேரிகளில் ஆரம்பித்தது நமது நட்பும் இசையும். இசை எப்படி சுவரங்களை விட்டு ஒன்றோடு ஒன்று பிரியாமல் இருக்கிறதோ, அதுபோல உன்னுடைய நட்பும் என்னுடைய நட்பும். நமது நட்பு எந்தக் காலத்திலும் பிரிந்தது இல்லை. நாம் சண்டை போட்டாலும் சரி. நமது இருவருக்குள்ளும் சண்டை இருந்தாலும் அது நட்பே, சண்டை இல்லாமல் போன போதும் அது நட்பே என்பதை நீயும் நன்றாக அறிவாய், நானும் நன்றாக அறிவேன்.

அதனால் இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன். நீ நிச்சயமாகத் திரும்பி வருவாய் என்று என் உள்ளுணர்வு சொல்லுகிறது. அது நிஜமாக நடக்கட்டும் என்று இறைவனை நான் பிரார்த்திக்கிறேன். பாலு சீக்கிரம் வா என்று பேசியது அனைவரையும் உருக்கும் விதமாக அமைந்தது.

மேலும் அறிய… https://tinyurl.com/yxqjs9l9

தொகுப்பு: மா. இளஞ்செழியன்.

செய்திப்பிரிவு: மக்கள் குரல் இணையதளக்குழு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *