சென்னை, ஆக.9–-
எஸ்.எஸ்.எல்.வி. -டி-3 ராக்கெட் மூலம் இ.ஓ.எஸ் -– 08 என்ற அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைகோளை வருகிற 15-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல். வி., ஜி.எஸ்.எல்.வி. மற்றும் சிறிய ரக செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்ப உதவும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து அவற்றில் செயற்கைகோள்களை பொருத்தி விண்ணில் ஏவி வருகிறது. அந்த வகையில் தற்போது புவி கண்காணிப்பிற்காக 175.5 கிலோ எடை கொண்ட அதிநவீன மேம்படுத்தப்பட்ட இ.ஓ.எஸ்- 08 என்ற செயற்கைகோளை விஞ்ஞானிகள் வடிவமைத்து உள்ளனர்.
இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் பல்வேறு கட்ட சோதனைகளை செய்து வருகின்றனர். இந்த செயற்கை கோளை எஸ்.எஸ்.எல்.வி- டி-3 ராக்கெட் மூலம் வருகிற 15-ம் தேதி காலை 9.17 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. குறைந்த எடை கொண்ட மைக்ரோ வகையை சேர்ந்த இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 475 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குறைந்த புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது. இதனுடைய ஆயுட்காலம் 1 ஆண்டுகள் ஆகும். இந்த செயற்கைகோளில், எலக்ட்ரோ ஆப்டிக்கல் இன்பிராரெட் பேலோடு (இ.ஓ.ஐ.ஆர்.), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிப்ளக்டோமெட்ரி பேலோட் (ஜி.என்.எஸ்.எஸ்.-ஆர்) மற்றும் எஸ்.ஐ சி யுவி டோசிமீட்டர் ஆகிய 3 ஆய்வு கருவிகளம் இதில் இடம் பெற்றுள்ளது.
புதிதாக வடிவமைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளின் திட்டத்தை மேம்படுத்தப்பட்ட இந்த ஏவுதல் மூலம் நிறைவேற்றப்படுகிறது. அத்துடன், இந்திய தொழில்துறை மற்றும் என்.எஸ்.ஐ.எல். நிறுவனத்தின் செயல்பாட்டு பணியையும் இந்த செயற்கைகோள் செயல்படுத்துகிறது. இந்த ராக்கெட்டுக்கான இறுதிக் கட்டப்பணியான கவுண்ட்டவுன் வருகிற 14-ம் தேதி தொடங்குகிறது.