சென்னை, ஆக.14-
பூமி கண்காணிப்புக்கான இ.ஓ.எஸ்–08 செயற்கைக்கோளை எஸ்.எஸ்.எல்.வி–டி3 ராக்கெட் மூலம் வருகிற 16ம் தேதி இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளான இ.ஓ.எஸ்-08 என்ற செயற்கைக்கோளை வடிவமைத்து உள்ளது. இது, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, எஸ்.எஸ்.எல்.வி–டி3 ராக்கெட் மூலம் வருகிற 16ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.17 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.
இ.ஓ.எஸ்–08 செயற்கைக்கோளில் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்பராரெட் பேலோடு (இ.ஓ.ஐ.ஆர்.), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிபிளக்டோமெட்ரி பேலோட் (ஜ.என்.எஸ்.எஸ்.ஆர்) மற்றும் எஸ்.ஐ.சி. யுவி டோசிமீட்டர் ஆகிய ஆய்வு கருவிகள் இணைக்கப்பட்டு உள்ளன. 175.5 கிலோ எடை கொண்ட இந்த கருவிகளின் பணிக்காலம் ஒரு ஆண்டாகும்.
இந்த செயற்கைக்கோள் பூமியை 24 மணி நேரமும் புகைப்படம் எடுத்து கண்காணிக்கும். பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, தீ கண்டறிதல் போன்ற பயன்பாடுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.
இந்த ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கு முன்பாக இறுதி கட்டப்பணியான கவுண்டவுன் நாளை (வியாழக்கிழமை) தொடங்க உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.