சென்னை, மே 16–
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை இன்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் வெளியிட்டார். 93.80% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அறிவியலில் – 10838 பேரும், சமூக அறிவியலில் – 10256 பேரும் 100க்கு 100 எடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவர்கள் எழுதிய பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளியிடப்பட்டன. அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து ஒரு நாள் முன்னதாக வெளியான பிளஸ்-2 பொதுத் தேர்வில் 95.03 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
இதேபோல் மார்ச் மாதம் 28-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 15-ந் தேதி வரை நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை 4 லட்சத்து 36 ஆயிரத்து 120 மாணவர்கள், 4 லட்சத்து 35 ஆயிரத்து 119 மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித் தேர்வர்கள், 272 சிறை கைதிகள் என மொத்தம் 8 லட்சத்து 71 ஆயிரத்து 239 பேர் எழுதினார்கள். தேர்விற்கு வருகை புரியாதவர்கள்: 15,652 பேர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில், 19-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகளும் 2 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்படும் என்று நேற்று முன்தினம் பள்ளி கல்வித்துறை அறிவித்தது.
காலை 9 மணிக்கு வெளியாகி உள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in மற்றும் www.tnresults.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இணையதளத்தில் மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக, பள்ளியில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்தி) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டன.
அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. மொத்தம் 93.80 % மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 4 லட்சத்து 35 ஆயிரத்து 119 மாணவிகளில் 4,17,183 பேர் (95.88%) தேர்ச்சி பெற்றுள்ளனர்; தேர்வு எழுதிய 4 லட்சத்து 36 ஆயிரத்து 120 மாணவர்களில் 4,00,078 பேர் (91.74%) தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல் இந்தாண்டும் மாணவர்களை விட 4.14 சதவீதம் மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பாடவாரியாக தேர்ச்சி விகிதம்:
தமிழ்: 98.09%
ஆங்கிலம்: 99.46%
கணிதம்: 96.57%
அறிவியல்: 97.90%
சமூக அறிவியல்: 98.49%
பாடவாரியாக 100க்கு 100 வாங்கிய மாணவர்கள் எண்ணிக்கை: தமிழ்: 8, ஆங்கிலம்: 346, கணிதம்: 1996, அறிவியல்: 10838, சமூக அறிவியல்: 10256 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 12,290 மாற்றுத் திறனாளி மாணவர்களில் 11,409 பேரும் (92.83%), சிறைவாசிகளில் 237 பேரில் 230 பேரும் (97.05%) பேரும், தனித்தேர்வர்கள் 23,769 பேரில் 9,616 பேர் (40.46%) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாற்று பாலினத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வெழுதினார், அவரும் வெற்றி பெற்றுள்ளார்.
அரசுப் பள்ளி
அரசு பள்ளிகளில் 91.26%, அரசு உதவிகள் பெறும் பள்ளிகளிலும் 93.63%, தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 97.99% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 167 அரசுப் பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. அரசுப் பள்ளிகளில் அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற முதல் ஐந்து மாவட்டங்களிலும் சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி மாவட்டங்களே இடம்பெற்றுள்ளன.
சான்றிதழ் பதிவிறக்கம்
10ஆம் வகுப்பு மாணவர்கள் 19–ந் தேதி திங்கள் கிழமை முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம் எனவும் தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூலை 4 முதல் துணைத்தேர்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
தேர்ச்சி விகிதத்தின்படி, சிவகங்கை 98.31% முதலிடம் பிடித்துள்ளது. விருதுநகர் 97.45%, தூத்துக்குடி – 96.76%, கன்னியாகுமரி – 96.66%, திருச்சி –96.61%, கோவை –-96.47%, பெரம்பலூர்- – 96.46%, அரியலூர்- – 96.38%, தர்மபுரி – -96.31%, கரூர் –-96.24% ஆகிய மாவட்டங்கள் முதல் 10 இடத்தில் உள்ளன. அதற்கு அடுத்தப்படியாக ஈரோடு – 96.00%, தஞ்சாவூர்– 95.57%, திருவாரூர்–95.27%, தென்காசி– 95.26%, விழுப்புரம்–95.09%, காஞ்சிபுரம்– 94.85%, திருப்பூர்– 94.84%, கிருஷ்ணகிரி– 94.64%, நாமக்கல்– 94.52%, கடலூர்– 94.51%, திருநெல்வேலி– 94.16%, மதுரை– 93.93%, மயிலாடுதுறை– 93.90%, ராமநாதபுரம்– 93.75%, புதுக்கோட்டை–93.53%, திண்டுக்கல்– 93.28%, ஊட்டி–93.26%, திருவண்ணாமலை– 93.10%, திருப்பத்தூர்– 92.86%, சேலம்– 92.17%, நாகப்பட்டினம்– 91.94%, தேனி– 91.58%, ராணிப்பேட்டை– 91.30%, சென்னை –90.73%, செங்கல்பட்டு– 89.82%, திருவள்ளூர்– 89.60%, கள்ளக்குறிச்சி– 86.91%, கடைசியாக வேலூர் – 85.44% எடுத்துள்ளது. காரைக்கால்– 93.60%, புதுச்சேரி – 97.37%.