செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத் தேர்வு: கல்வித்துறை

சென்னை, ஜூலை.22-

பொதுத்தேர்வை எதிர்கொள்ள தயார்ப்படுத்தும் வகையில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத் தேர்வு நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில், கடந்த கல்வியாண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ்–அப் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து நோய்த்தொற்று குறையாமல் இருந்ததால், கடந்த கல்வியாண்டு தேர்வு எழுதாமலேயே மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகளும் இதுவரை ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, வாட்ஸ்–அப் வாயிலாகவே நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 பொதுத்தேர்வை நடத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.

உயர்கல்வி சேர்க்கைக்கு அவசியமான பிளஸ்–2 மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடுவதிலும் கல்வித்துறை ஆலோசனை நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 பொதுத்தேர்வை மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் வகையிலும், ஏதேனும் காரணத்தால் பொதுத்தேர்வு நடத்தமுடியாமல் போனால் அதை சமாளிக்கும் வகையிலும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 மாணவர்களுக்கு பள்ளிகளில் ஒவ்வொரு மாதமும் அலகுத் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதன்படி கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், அந்த மாவட்ட பள்ளிகளுக்கு இதன் அடிப்படையில் அலகுத் தேர்வு நடத்துவது குறித்த சுற்றறிக்கையை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *