செய்திகள் வர்த்தகம்

எஸ்.ஆர்.எம். பட்டமளிப்பு விழா: 15,154 மாணவர்களுக்கு பட்டங்கள், 256 சாதனையாளர்களுக்கு பதக்கங்கள்

சென்னை, அக்.31-

எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் 17-வது பட்டமளிப்பு விழாவில் 15 ஆயிரத்து 154 மாணவ–மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் 17வது பட்டமளிப்பு விழா கல்வி நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள டி.பி.கணேசன் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் இணைவேந்தர் (கல்வி) பி.சத்தியநாராயணன் முன்னிலை வகித்தார். துணைவேந்தர் சி.முத்தமிழ்ச்செல்வன் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார்.

பட்டமளிப்பு விழாவுக்கு எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தின் நிறுவனரும், வேந்தருமான டி.ஆர்.பாரிவேந்தர் எம்.பி. தலைமை வகித்து, என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பம், மருத்துவம், சுகாதார அறிவியல், நிர்வாகம், அறிவியல் மற்றும் கலை படிப்புகளில் 15 ஆயிரத்து 154 மாணவ–மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் ஆராய்ச்சிப் படிப்பில் 176 பேருக்கும், தேர்வில் தரவரிசையில் முதல், 2 மற்றும் 3-ம் இடம் பிடித்த 256 மாணவ–மாணவிகளுக்கும் நேரடியாக பட்டங்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பாதுகாப்புத்துறை செயலாளர் ஜி.சதீஷ் ரெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக ஆன்லைன் மூலம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

அதில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில், ‘சமூக பொருளாதார வளர்ச்சியில் கல்வியின் பங்கு முக்கிய இடத்தை வகிக்கிறது. அதிலும் தரமான கல்வியானது மாபெரும் மாற்றத்துக்கு வழிவகுக்கும். புதிய கல்விக் கொள்கை மூலம் தரமான கல்வி வழங்கப்படும் நிலை உருவாகியுள்ளது. அதேபோன்று புதிய தொழில் கொள்கை ‘ஸ்டார்ட் ஆப்’ மூலமாக அதிகளவில் தொழில்முனைவோர் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது’ என்றார்.

விழாவின் இறுதியில் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தில் தேர்வு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் சிறப்பிடம் பெற்றவருக்கு வழங்கப்படும் பச்சையம்மாள் பழனிமுத்து நன்கொடை நிறுவல் விருது, ஸ்வர்ணம் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி நன்கொடை நிறுவல் விருது எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு மாணவர் ஆதித்யாவுக்கு வழங்கப்பட்டது.

விழாவில், எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் பதிவாளர் எஸ்.பொன்னுசாமி, இணை துணைவேந்தர் (மருத்துவம்) லெப்டினென்ட் கர்னல் ஏ.ரவிக்குமார், இயக்குனர்கள், டீன்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *