சென்னை, மே 30–
எவரஸ்ட் சிகரத்தில் 5,364 மீட்டர் உயரத்திற்கு மலையேற்றம் மேற்கொண்டு அடிவார முகாமை அடைந்த திருநெல்வேலியைச் சேர்ந்த பள்ளி மாணவி லலித் ரேணு ஸ்ரீதர் வெங்கடேஷ் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேற்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். லலித் ரேணு ஸ்ரீதர் வெங்கடேஷை பாராட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கேடயத்தை வழங்கி, மேலும் தொடர்ந்து பல சாதனைகளை படைக்க அவர் வாழ்த்து தெரிவித்தார்.
திருநெல்வேலியைச் சேர்ந்த 6 வயது பள்ளி மாணவி லலித் ரேணு ஸ்ரீதர் வெங்கடேஷ், தனது தந்தையார் ஸ்ரீதர் வெங்கடேஷ் உடன் சேர்ந்து மலையேற்றத்தில் ஆர்வம் கொண்டு மலையேற்ற பயிற்சி பெற்று வருகின்றார். அவர் 6,000 அடி உயரம் உடைய வெள்ளியங்கிரி மலை முதல் 30க்கும் மேற்பட்ட பல்வேறு மலைகளில் மலையேற்றம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, உட்பட மாணவியின் பெற்றோர், ஆசிரியர் கலந்து கொண்டனர்.
![]()





