சென்னை, ஜூன் 28-–
எழும்பூர் கோர்ட் வக்கீல்கள் சங்கத்தின் தேர்தலை வருகிற ஆகஸ்ட் 30-ந்தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை எழும்பூர் கோர்ட் வக்கீல்கள் சங்கத்தில் தொடர்ச்சியாக இருமுறை நிர்வாகிகளாக பொறுப்பு வகித்தவர்கள் மூன்றாவது முறையாக போட்டியிடக்கூடாது என்று தமிழ்நாடு- – புதுச்சேரி பார் கவுன்சில் கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, எழும்பூர் கோர்ட் வக்கீல்கள் சங்கத்தில் இருமுறை தலைவராக பதவி வகித்த எஸ்.சந்தன்பாபு என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், “எழும்பூர் கோர்ட்டு வக்கீல்கள் சங்க விதிகளின்படி, 3-வது முறை தேர்தலில் போட்டியிடக்கூடாது என்ற எந்தவொரு விதியும், நிபந்தனையும் இல்லை. அதனால், மனுதாரர் 3-வது முறையாக போட்டியிட எந்த தடையும் இல்லை. ஆனால், அதை தடுக்கும் விதமாக பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளதால், அதை ரத்து செய்யவேண்டும்” என்று வாதிடப்பட்டது.
பார் கவுன்சில் தரப்பில், “வக்கீல்கள் சங்கத்துக்கான தேர்தல் தொடர்பாக ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையிலேயே எழும்பூர் கோர்ட்டு வக்கீல் சங்கத்துக்கு அவ்வாறு உத்தரவிடப்பட்டது” என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
எழும்பூர் கோர்ட் வக்கீல்கள் சங்கம் சார்பில் ஆஜரான வக்கீல் எம்.புருஷோத்தமன், “இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற வேண்டிய தேர்தல் இன்னும் நடைபெறவில்லை. இதனால் பதவிக்காலம் முடிந்த பிறகும் பழைய நிர்வாகிகளே பதவி வகித்து வருகின்றனர். எனவே, தேர்தலை விரைவாக நடத்த உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
வக்கீல்கள் சங்கம் என்பதும் நீதித்துறையின் ஒரு அங்கம். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வக்கீல்கள் சங்கத்துக்கான தேர்தல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் சுமூகமாக நடத்தி, அவற்றை கண்காணிக்கும் பொறுப்பு தமிழ்நாடு- – புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு உள்ளது.
அதேபோல நீதித்துறையின் மாண்பு மற்றும் வக்கீல்களின் தொழில் கண்ணியத்தை காக்க வேண்டிய கடமையும் பார் கவுன்சிலுக்கு உள்ளது. ஒழுங்கீனத்தில் ஈடுபடும் வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பார் கவுன்சில், ஜனநாயக ரீதியில் வக்கீல் சங்கங்களுக்கான தேர்தலையும் அமைதியான முறையில் நடத்த வேண்டும். பதவிக்காலம் முடிந்த பின்னரும் சங்க நிர்வாகிகள் பதவியில் நீடிப்பதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. எனவே, கடந்த 2019-ம் ஆண்டு முதல் தேர்தல் நடத்தப்படாமல் உள்ள எழும்பூர் கோர்ட் வக்கீல்கள் சங்கத்துக்கான தேர்தலை, வருகிற ஆகஸ்டு 30-–ந் தேதிக்குள் நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை பார் கவுன்சில் எடுக்கவேண்டும். தேர்தலுக்கு உரிய பாதுகாப்பை போலீஸ் கமிஷனர் வழங்கவேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.