திருநெல்வேலி, மார்ச் 17–
தமிழக அரசின் உ.வே.சா., விருது பெற்ற எழுத்தாளர் நாறும்பூநாதன் (வயது 66) நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
துாத்துக்குடி மாவட்டம் கழுகு மலையில் பிறந்து கோவில்பட்டி ஜி.வி.என். கல்லுாரியில் பயின்றவர் நாறும்பூநாதன். பாரத ஸ்டேட் வங்கியில் 33 ஆண்டுகள் பணியாற்றியவர். சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், இலக்கியக் கூட்டங்கள், வலைத்தள பணிகளில் சிறப்பாக செயல்பட்டார். ”கனவில் உதிர்ந்த பூ” எனும் அவரது நுால் கல்லுாரி ஒன்றில் பாடமாக உள்ளது.
”திருநெல்வேலி நீர் நிலம் மனிதர்கள்”, ”வேணுவன மனிதர்கள்”, ”கி.ரா. கடைசி நேர்காணல்” உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட நுால்களை எழுதியுள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க மாநில துணைச் செயலாளராக பங்காற்றியுள்ளார். தமிழக அரசின் 2022–ம் ஆண்டிற்கான உ.வே.சா., விருது பெற்றார். இவரது மனைவி சிவகாம சுந்தரி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஒரே மகன் ராமகிருஷ்ணன் இன்ஜினியராக கனடாவில் பணியாற்றுகிறார்.
எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:–
எழுத்தாளரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகியுமான நாறும்பூநாதன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
நாறும்பூநாதன் நெல்லை வட்டாரத்தை மையப்படுத்திய தனது இலக்கியப் படைப்புகளாலும், சமூகச் செயற்பாடுகளாலும் நன்கு அறியப்பட்ட முற்போக்கு இயக்க எழுத்தாளராக விளங்கியவர் ஆவார். நமது அரசு நடத்தும் பொருநை இலக்கியத் திருவிழாவிலும் அவர் மிக முக்கியப் பங்காற்றினார் என்பதை நன்றியோடு இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.
நாறும்பூநாதன் அவர்களது இலக்கியப் பங்களிப்புகள், சமூகச் செயற்பாடுகள், பள்ளி மாணவர்களிடையே இலக்கிய ஆர்வத்தைத் தூண்டுவதற்கான அவரது முன்னெடுப்புகள் ஆகிய தமிழ்ப் பணிகளைப் பாராட்டி 2022-–ம் ஆண்டுக்கான உ.வே.சா. விருதினை நமது அரசின் சார்பில் வழங்கியிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மண்ணின் இலக்கிய முகங்களில் ஒருவரான எழுத்தாளர் நாறும்பூநாதனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், அரசியல் – இலக்கியத் துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.