வர்த்தகம்

எல்.ஐ.சி. பாலிசி முதிர்வு பெற்றால் ஆவணங்களை எந்த கிளையிலும் தாக்கல் செய்து உரிமை கோரலாம்

சென்னை, மார்ச் 20–

கொரோனா பரவலைத் தடுக்க, பாலிசிதாரரின் எல்.ஐ.சி. பாலிசி முதிர்வு பெற்றால், அதற்கான ஆவணங்களை இதுவரை அது வாங்கிய கிளையில் தாக்கல் செய்வதற்கு பதிலாக இனி எந்த கிளையிலும் உரிமை கோரலாம் என்று எல்.ஐ.சி. தென்மண்டல மேலாளர் கே.கதிரேசன் தெரிவித்தார்.

தற்போதைய கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாலிசிதாரர்களின் இடர்பாடுகளை குறைக்க எல்.ஐ.சி. மற்றொரு மாபெரும் வசதியை கொண்டு வந்துள்ளது. கொரோனா காரணமாக மக்களின் நடமாட்டத்தில் தடைகள் கொண்டு வரப்பட்டுள்ளதால் பாலிசிதாரர்கள் அவர்களுடைய முதிர்வு உரிமங்களுக்கான ஆவணங்களை, சேவை செய்யும் கிளையில் மட்டுமல்லாது அவர்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள இந்தியாவில் உள்ள எந்த எல்.ஐ.சி. கிளையிலும் அளிக்கலாம் என்றார் கே.கதிரேசன்.

முதிர்வு உரிமங்களுக்கான ஆவணங்களை, சேவை செய்யும் கிளையில் மட்டுமல்லாது எல்.ஐ.சி.யின் 113 கோட்ட அலுவலகங்கள், 2048 கிளைகள், 1536 துணை அலுவலகங்கள், 74 வாடிக்கையாளர் சேவை அலுவலகங்கள் இவற்றில் எங்கு வேண்டுமானாலும் அளிக்கலாம்.

ஆனால், முதிர்வுத் தொகை வழங்குவதற்கான செயல்முறைகள் அனைத்தும் சேவை செய்யும் கிளைகளிலேயே நடைபெறும். அளிக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் எல்.ஐ.சி.யின் ஆல் இந்தியா நெட்வொர்க் மூலமாக டிஜிட்டலாக அனுப்பி வைக்கப்படும் என்றார் அவர்.

இவ்வேலையை செய்வதற்காக, அனைத்து அலுவலகங்களிலும் அதிகாரிகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பாலிசிதாரர் எந்தவொரு எல்.ஐ.சி. அலுவலகத்தையும் தொடர்பு கொண்டு அதற்குரிய அதிகாரியை அணுகி உதவி பெறலாம் என்றார்.

பாலிசிதாரர் ஒரு இடத்திலும், பாலிசி ஆவணங்கள் வேறொரு இடத்திலும் இருக்கும்பட்சத்தில், ஆவணங்களை தனித்தனியாக இரு வெவ்வேறு இடங்களில் சமர்ப்பிக்கலாம்.

சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்ட இந்த உடனடி வசதி இம்மாதம் 31–ந் தேதி வரை மட்டுமே.

எல்.ஐ.சி. பாலிசிதாரர்களை மதிப்புடன் நடத்துகிறது. மேலும் கோவிட் பெருந்தொற்று காலத்தில் எல்.ஐ.சி. யின் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முயற்சிகள் அவர்களுக்கான வேலைகளை எளிதாக்குவதை குறிக்கோளாகக் கொண்டுள்ளன. தற்போது எல்.ஐ.சி. நாடு முழுவதும் 29 கோடிக்கும் அதிகமான பாலிசிகளுக்கு சேவை அளித்து வருகிறது என்றார்.

இது பற்றி அறிய www.licindia.in வலைதளம் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *