செய்திகள்

‘எல்லோர்க்கும் எல்லாம் கொள்கைப்படி உரிமைகள் கிடைக்க, சுயமரியாதையைப் பாதுகாப்போம்’: ஸ்டாலின் சூளுரை

Makkal Kural Official

உலக மனித உரிமைகள் நாள்

சென்னை, டிச 9–

‘எல்லோர்க்கும் எல்லாம் கொள்கைப்படி அதனடிப்படையில் அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் கிடைக்க உறுதி செய்வோம்’ என்று முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்தார்.

“மனித உரிமைகள்” என்ற உள்ளார்ந்த அடிப்படைக் கொள்கை உலகம் முழுவதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். உலகில் படைக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் சமம் என்ற அடிப்படையிலும், மதிப்பு மற்றும் உரிமைகள் அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டும், அனைவரும் சகோதர மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்ற நோக்கிலும் “சர்வதேச மனித உரிமைகள் நாள்” ஆண்டுதோறும் டிசம்பர் 10 அன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

1948–ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஏற்றுக்கொண்டது; மனித உரிமைகளை நடைமுறைப்படுத்துவதில் பல நாடுகள் அடைந்த முன்னேற்றத்தினால்தான், மக்கள் சுதந்திரத்தை முழு அளவில் அனுபவிப்பதைத் தடுக்கும் தடைகள் அகற்றப்பட்டுள்ளன; பல நாடுகளில் இனவெறிச் சட்டங்கள் அகற்றப்பட்டுவிட்டன; பெண்களை இரண்டாம் தர நிலைக்குத் தள்ளும் சட்டங்கள் மற்றும் சமூக நடைமுறைகள் ஒழிக்கப்பட்டுவிட்டன; சிறுபான்மையினர் தங்கள் மத நம்பிக்கையை எந்தவித அச்சஉணர்வுமின்றி கடைபிடிக்கவும் வழி ஏற்பட்டுள்ளது.

1948-–ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை பன்னாட்டு மனித உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக்கொண்டதில் இந்தியாவின் பங்கு மகத்தானது. அப்பிரகடனத்தின்படி, இந்தியாவில் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 28.9.1993 அன்று நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின், சட்டப்பிரிவு 3, 21-–ன்படி, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டில், தி.மு.க. ஆட்சியில்தான் மனித உரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும் நிகழக்கூடாது எனும் எண்ணத்துடன் 17.4.1997 அன்று ஓய்வுபெற்ற நீதியரசர் ஒருவர் தலைமையில், “தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம்” எனும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

இவ்வாணையம் மனித உரிமைகளுக்காக பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. சட்டம், மனித உரிமைகள், கல்வி, உளவியல் மற்றும் குற்றவியல் ஆகியவற்றைத் தொடரும் மாணவர்கள், அவர்களின் பாடத் திட்டத்தின் ஒரு பகுதியான உள்பயிற்சி தொடர்பாக இந்த ஆணையத்திற்கு வருகின்றனர். இந்த மாணவர்கள், மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் இந்த ஆணையத்தின் செயல்பாட்டைப் பற்றிய தகவல்களை பரப்புவதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர்.

உன்னதமான திட்டங்கள்

இந்த ஆண்டிற்கான மனித உரிமைகள் நாள் கருப்பொருளாக (Theme) ஐக்கிய நாடுகள் சபையானது “நமது உரிமை, நமது எதிர்காலம் இப்போது” என்பதை அறிவித்துள்ளது. “எல்லோர்க்கும் எல்லாம்” என்ற அடிப்படையில், அனைத்துத் தரப்பினருக்குமான உன்னதமான திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வரும் எங்களது திராவிட மாடல் அரசு, மதம், இனம், மொழி, நிறம், அரசியல் பாகுபாடின்றி அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்திடுவதிலும் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை நிலைநாட்டிட, சுயமரியாதையைப் பாதுகாத்திட இந்த மனித உரிமைகள் நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *