சிறுகதை

எல்லோரும் வெற்றி பெறுவோம் – எம்.பாலகிருஷ்ணன்

மோகனுக்கு அன்றைய நாள் பெரிய திருநாள் போல் இருந்தது.

எல்லோரும் அன்று அவனைப் பற்றியே பேசத் தொடங்கினர். அவன் இன்று மாநில அளவில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கிறான். அவனையே அவனால் நம்ப முடியவில்லை. கை கால் ஓடவில்லை; பத்திரிக்கையில் செய்தியை பார்த்த உடனே எல்லையில்லா மகிழ்ச்சிகடலில் மூழ்கினான். அவனது பெற்றோர் அவனை உற்சாகத்தில் தூக்கிக் கொண்டாடினர். போனுக்கு மேல் போன்; வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்; அவனுடன் படித்த மாணவர்கள் ஆசிரியர்கள் மனதார வாழ்த்து மழை பொழிந்தனர். அதில் நனைந்து மோகன் திக்கு முக்காடிப்போனான்.

வானத்தில் பறக்கும் பறவைகளும் பிரகாசமாக ஜொலிக்கும் சூரியனும் மென்மையான தென்றல் காற்றும் பசுமையான மலைகளும் பசுஞ்சோலை மரங்களும் வாசமுள்ள பூக்களும் சேர்ந்து இயற்கையே அவனுக்கு வாழ்த்துக்கள் சொல்வது போல் உணர்ந்தான்.

மாநில அளவில் வெற்றி பெற்றதற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் வகுப்பு ஆசிரியர்கள் உற்றார் உறவினர்கள் வார்டு பிரதிநிதிகள் கல்வியாளர்கள் அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் உட்பட அவனைப் பாராட்டாதவர்களே இல்லை. இனிப்பு கொடுத்து அவனது பெற்றோர் கொண்டாடினர். அவன் குடியிருக்கும் தெருவில் மக்கள் அனைவரும் அவனது வீட்டில் குழுமியிலிருந்து வாழ்த்துக்கள் சொல்லிக் கொண்டனர். தமிழகம் முழுவதுமே அவன் பேசும் பொருளாகி விட்டான்

மோகனுடைய பெற்றோர் நடுத்தரமான குடும்பம். அவனது அப்பா தனியார் துறையில் பணிபுரிகிறார். அவன் தான் மூத்த பையன்; ஆரம்பத்திலிருந்து அவனது பெற்றோர்கள் படிப்பின் அருமையை பற்றியும் அதன் பெருமைகளைப் பற்றியும் கூறி வந்தனர். ஏழைகளுக்கு சொத்து படிப்பு தான். அதை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். இதில் அலட்சியம் காட்டினால் பிற்காலத்தில் கண்ணீர் விடும் நிலை ஏற்படும். சமூகத்தில் நாம் நல்ல மதிப்பும் மரியாதையும் நல்ல வேலையும் பெற்று இருந்தால் தான் நமக்கும் நாட்டுக்கும் பெருமை என்று மோகனுக்கு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் சொல்லி அவனை தைரியப்படுத்தி நம்பிக்கையூட்டினர்.

காலத்தையும் நேரத்தையும் வீணாக்காமல் படிப்பின் மீது முழு கவனத்தை செலுத்தி இந்த அளவுக்கு மாநில அளவில் தேர்ச்சி பெற அவனது பெற்றோர் முழு முயற்சி எடுத்ததை மோகன் நினைவு கூர்ந்தான்

அதோடு பள்ளி வகுப்பாசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் ஊக்கப்படுத்தினார்கள் என்பதையும் மோகன் மறக்கவில்லை. இந்த பொன்னான நாளில் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தான்.

அப்போது தலைமை ஆசிரியரிடம் இருந்து மோகனுக்கு போன் வந்தது.

ஏம்பா மோகா நீயும் உன் பெற்றோரும் உடனே பள்ளிக்கு வாங்க என்று மோகனை அழைத்தார்.

அவனும் பெற்றோருடன் பள்ளியின் தலைமை ஆசிரியரை பார்க்கச் சென்றான். அங்கு அவனுக்கு ஏகப்பட்ட மரியாதை வாழ்த்துக்கள்.

தலைமை ஆசிரியர் அவனைப் பார்த்து ,

‘‘மோகா நீ மாநில அளவில் தேர்ச்சி பெற்றுச்து சாதனை செய்ததால் நமது பள்ளியின் பெருமையை நாடே அறிய செய்து விட்டாய். உனக்கு நமது பள்ளியின் சார்பாக வாழ்த்துக்கள். உன்னை பாராட்டும் விதமாக நமது பள்ளியில் விழா எடுக்க வேண்டும். நீ ரெடியா இரு என்று தலைமை ஆசிரியர் கூறினார்

ஐயா முதலில் உங்களுக்கும் வகுப்பு ஆசிரியர்களுக்கும் நன்றி. நான் மாநில அளவுவில் தேர்ச்சி பெற்று வந்ததுக்கு காரணம் நீங்கள். நீங்க இல்லாம இவ்வளவு பெரிய வெற்றியை அடைந்திருக்க முடியாது. எல்லாருடைய ஒத்துழைப்பினால தான் நான் வெற்றி அடைந்தேன். நீங்க எனக்கு விழா எடுத்து பாராட்டணும்னு சொன்னது. ரொம்ப சந்தோசமா பெருமையாய் இருக்கு.

ஆனால் இதுல நான் ஒரு தாழ்மையுடன் ஒரு கருத்தை ஐயா கிட்ட சொல்ல விரும்புகிறேன். ஒருத்தருக்கு தோல்வி இன்னொருவருக்கு வெற்றி இதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஐயா எல்லோரும் வெற்றியுள்ள மாணவர்களாக நமது பள்ளியில் வரணும். பாதிப் பேர் நல்ல மார்க் எடுத்து பாதிப் பேர் சுமாரான மார்க் எடுத்து பாஸ் ஆகிறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு. எல்லோரும் நல்ல மார்க் எடுத்து முழு தேர்ச்சி ஆகணும்னு ஆசைப்படுறேன்.

தோல்வியடைஞ்ச மாணவர்கள் எவ்வளவு வேதனையுடன் இருப்பாங்க. நாம அவர்களையும் ஆறுதல் படுத்தும் விதமாக நல்ல மார்க் எடுத்து தேர்ச்சியாக்க நான் நாம எல்லோரும் சேர்ந்து ஏன் முயற்சி எடுக்கக் கூடாது? தோல்வி அடைஞ்ச மாணவர்கள் நல்ல மார்க் எடுத்தால் நம் பள்ளிக்கு தானே பெருமை. அதனால நானும் எல்லோரும் சேர்ந்து தோல்வியடைஞ்ச மாணவர்களை தேற்றி அவர்களை படிப்பில் வெற்றி பெறச் செய்து தலை நிமிர்ந்து வாழ வைக்கணும்னு விரும்புகிறேன். நூறு சதவீத நம்ம பள்ளி தேர்ச்சியாகும் வரை எனக்கு மட்டும் விழா எற்பாடு இப்போதைக்கு வேண்டாம் ஐயா. தோல்வி அடைஞ்ச மாணவர்களுக்கும் சேர்த்து எனக்கும் ஒரு நாள் விழா எடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்னு விரும்புகிறேன் என்று மோகன் கூற அவனை அப்படியே கட்டி அணைத்துக் கொண்டார் தலைமை ஆசிரியர்.

எல்லோரும் வெற்றி பெறுவோம் என்ற மோகனின் உயர்ந்த உள்ளத்தை எல்லோரும் பாராட்டினார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *