செய்திகள் நாடும் நடப்பும் முழு தகவல்

எல்லையில் 7வது நாளாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: இந்தியா பதிலடி

Makkal Kural Official

பாகிஸ்தானுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை

ஸ்ரீநகர், மே 1–

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டிருக்கும் பதட்டத்தைத் தணிக்கும் நோக்கில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடனும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடனும் தொலைபேசியில் பேசினார்.

இந்த சூழலில், எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து 7வது நாளாக அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

கடந்த 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம், அந்த நாட்டு உளவுத் துறைக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மோடி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த சூழலில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி, கடற்படை தளபதி தினேஷ் கே திரிபாதி, விமானப்படை தளபதி அமர் பிரீத் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

ராணுவம் குவிப்பு

இக்கூட்டத்தில், பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. எந்த இடங்களில், எவ்வாறு தாக்குதல் நடத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் முப்படைகளுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு பதிலடி கொடுப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்திய எல்லையில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவை தயார் நிலையில் உள்ளன. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதட்டம் அதிகரித்துள்ளது. இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என பாகிஸ்தானியர்கள் கருதுகின்றனர்.

போர் பதட்டத்தை தணிக்க அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடனும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடனும் தொலைபேசியில் பேசியதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

பதட்டத்தை தணிக்க..

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஆகியோருடன் பேசினார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்ததுடன், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவுக்கு தனது ஆதரவையும் தெரிவித்தது.

மேலும், தெற்காசியாவில் பதட்டங்களைத் தணிக்கவும் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரிக்கவும் பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுமாறு அமெரிக்கா இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்புடனான தொலைபேசி உரையாடலின்போது மார்கோ ரூபியோ, இந்த நியாயமற்ற தாக்குதலை விசாரிப்பதில் பாகிஸ்தான் அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும், பதட்டங்களைத் தணிக்க பாகிஸ்தான் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் கூறினார்.

வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ், ஷெபாஸ் ஷெரீப் உடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, பயங்கரவாதிகளை அவர்களின் கொடூரமான வன்முறைச் செயல்களுக்குப் பொறுப்பேற்க வைப்பதில் தங்கள் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி உரையாடல்

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ உடனான தொலைபேசி உரையாடல் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் இன்று தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து நேற்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன் விவாதித்தேன். அதன் குற்றவாளிகள், ஆதரவாளர்கள் மற்றும் திட்டமிடுபவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ், “தெற்காசிய பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்களை நாங்கள் கண்காணித்து வருகிறோம். மேலும் பல மட்டங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். பொறுப்பான தீர்வுக்காக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட நாங்கள் ஊக்குவிக்கிறோம். உலகம் இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறது,” என்று கூறினார்.

பாகிஸ்தான் “அமெரிக்காவுக்காக இந்த மோசமான வேலையைச் செய்து வருகிறது” என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த டாமி புரூஸ், “இங்கு விவாதிக்க நான் உண்மையில் தயாராக உள்ள ஒரே விஷயம், வெளியுறவு அமைச்சர் இரு நாடுகளின் வெளியுறவுச் செயலாளர்களுடனும் பேசுவது குறித்துத்தான் என கூறினார்.

7வது நாளாக பாகிஸ்தான்

அத்துமீறி துப்பாக்கி சூடு

இந்த நிலையில், 7வது நாளாக நேற்று இரவும் ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி இருக்கிறது. பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான்

விமானங்கள் பறக்க தடை

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசு தரப்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் தரப்பில் இந்திய விமானங்கள் அந்த நாட்டின் வான்வெளியில் பறக்க அண்மையில் தடை பிறப்பிக்கப்பட்டது. அதற்கு பதிலடி தரும் வகையில் இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

வரும் மே 24-ம் தேதி இந்திய நேரப்படி காலை 5.29 வரை பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ‘பாகிஸ்தான் நாட்டு விமானங்கள், அந்த நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் இயக்கும் விமானங்கள், ராணுவ விமானங்கள் என எந்தவிதமான விமானமும் இந்திய வான் எல்லையை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது’ என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே நிதி நெருக்கடியால் பாகிஸ்தான் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் இந்த நடவடிக்கை பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு மேலும் நெருக்கடியை தரும் எனவும், பயண நேரத்தை அதிகரிக்க செய்யும் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக பாகிஸ்தானில் இருந்து தென்கிழக்கு ஆசியாவுக்கு செல்லும் விமானங்கள் இந்திய வான்வெளியை தவிர்க்க வேண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *