போஸ்டர் செய்தி

எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை அத்துமீறலை சமாளிக்க இந்திய போர் விமானங்கள் தீவிர பயிற்சி

புதுடெல்லி, மார்ச். 15–

எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் விமானப்படை அத்துமீறலை சமாளிப்பதற்கு ஏதுவாக, பாகிஸ்தானை ஒட்டிய நமது எல்லை பகுதிகளில், இந்திய விமானப்படை போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டன.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி அளிக்கும் வகையில், பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயஙகரவாத அமைப்பின் முகாம் மீது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தின. தொடர்ந்து, பாகிஸ்தான் விமானப்படை இந்திய பகுதிகளுக்குள் ஊடுருவலாம் என இந்திய விமானப்படை கணித்தது. தொடர்ந்து முழு உஷார் நிலையிலும் இருந்தது. இந்திய பகுதிக்குள் ஊடுருவிய பாகிஸ்தானின் அதிநவீன போர் விமானமான எப் – 16 விமானத்தை, இந்தியாவின் பழைய வகையை சேர்ந்த மிக் 21 விமானம் மூலம் விங் கமாண்டர் அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார்.

இந்நிலையில், பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் இந்திய பகுதிக்குள் ஊடுருவி அத்துமீறலில் ஈடுபட்டால், பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானை ஒட்டிய நமது எல்லை பகுதியில், இந்திய போர் விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டன. பஞ்சாபின் அமிர்தசரஸ், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லை பகுதிகளில், இந்திய விமானப்படை விமானங்கள் அதிவேகத்தில் சென்று பயிற்சியில் ஈடுபட்டன. நேற்று (மார்ச்14) இரவு இந்த பயிற்சி நடந்தது.

இந்திய விமானப்படை நேற்று இரவு பஞ்சாப் மற்றும் ஜம்முவை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியில் மிகப்பெரிய தயார் நிலை ஒத்திகையில் ஈடுபட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த ஒத்திகைப் பயிற்சியில் பெரிய எண்ணிக்கையில் போர் விமானங்கள் ஈடுபட்டன.

இந்த பயிற்சியில், அதிக வேகத்தில் விமானங்கள் பறந்து பயிற்சியில் ஈடுபட்டதாக விமானப்படை வட்டார தகவல்கள் கூறுகின்றன. பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்தால் பதிலடி கொடுப்பதற்கான தயார் நிலைக்காக இந்த பிரம்மாண்ட பயிற்சி நடைபெற்றதாக தெரிகிறது.

ஜெய்ஷ் இ முகம்மது இயக்க முகாம் மீது இந்திய விமானப் படைகள் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு பிறகு, இந்திய விமானப்படை உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *