இந்தியர்கள் 7 பேர் பலி, 38 பேர் காயம்
புதுடெல்லி:
இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடர்ந்து, எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய குடிமக்கள் 7 பேர் உயிரிழந்தனர்; 38 பேர் படுகாயம் அடைந்தனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. நள்ளிரவு 1.30 மணியளவில் இத்தாக்குதல் நடந்தது. இதனை உறுதிப்படுத்திய இந்திய ராணுவம், “நீதி நிலைநிறுத்தப்பட்டது. ஜெய்ஹிந்த்.” எனப் பதிவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்தியாவின் தாக்குதலை போர் நடவடிக்கையாகவே பார்ப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். மேலும் இந்தத் தாக்குதலுக்கு உரிய நேரத்தில் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி தாக்குதலையும் பாகிஸ்தான் தொடங்கியுள்ளது.
இந்தியா – பாகிஸ்தானின் சர்வதேச எல்லைப் பகுதியான எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு (எல்ஓசி) அருகே பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்தியக் குடிமக்கள் ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 38 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய ராணுவம் தரப்பில் உறுதியான பதிலடி தரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 7 பேரும், காயமடைந்துள்ள 25 பேரும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ல பூஞ்ச் மாவட்டத்தை சேர்ந்வர்கள்.
மேலும், பாரமுல்லா மாவட்டத்தின் உரி செக்டரில் பத்து பேரும், ரஜோரி மாவட்டத்தில் மூன்று பேரும் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் தாக்குதலில் காயமடைந்தவர்கள் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.