திருவெண்ணெய்நல்லூர், செப் 2
எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்தார்.
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏனாதிமங்கலம் தென்பெண்ணை யாற்றில் உள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் வலதுபுறத்தில் அமைந்துள்ள எரளூர், ரெட்டி ஆகிய வாய்க்கால் மூலம் விவசாய பாசனத்திற்காக 12 ஏரிகளுக்கும், இடதுபுறமுள்ள ஆழங்கால், மரகதபுரம், கண்டம்பாக்கம் ஆகிய 3 வாய்க்கால்கள் மூலம் 14 ஏரிகளுக்கும் தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பழனி தலைமை தாங்கினார்.
அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாவட்ட கவுன்சிலர் விசுவநாதன், ஒன்றியக்குழு தலைவர் ஓம்சிவசக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு அணைக்கட்டில் இருந்து தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவினார்.
ஏனாதிமங்கலம் மற்றும் கப்பூர் கிராமங்களுக்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கடந்த 1949-–1950-ம் ஆண்டில் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு கட்டப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு பெய்த கனமழையின்போது ஏற்பட்ட வெள்ள பெருக்கில் அணைக்கட்டு சேதமடைந்தது.
ரூ.86¼ கோடியில் புதிய அணை
இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய அணை கட்ட ரூ.86 கோடியை 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து புதிய அணை கட்டப்பட்டு முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டின் மொத்த நீர் மட்டம் 5 அடியாகும், தற்போது நீர்மட்டம் 4 அடியாக உள்ளது.
இந்த அணைக்கட்டில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 13,100 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் அணைக்கட்டை சுற்றியுள்ள 36 கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இதனால் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரம் மேம்படும். தடுப்பணையை யொட்டி பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அப்போது மாவட்ட ஊராட்சிக் குழுதலைவர் ஜெயச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.புஷ்பராஜ், நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஷோபனா, உதவி செயற்பொறியாளர் அய்யப்பன், தாசில்தார் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், ரவி, ஊராட்சி மன்ற தலைவர் விஜயன் உள்பட பலர் உடன் இருந்தனர்.