செய்திகள்

எல்பிஜி டேங்கர் லாரிகள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

Makkal Kural Official

நாமக்கல், மார்ச் 26–

தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நாளை (27–ந்தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

நாமக்கல்லில் அந்த சங்கத்தின் தலைவர் கே. சுந்தரராஜன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், தமிழகம், கேரளம், தெலுங்கானா, கர்நாடகம், ஆந்திரம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள சுமார் 4,000 லாரிகளை துறைமுகத்திலிருந்து எரிவாயு பாட்டிலிங் பிளான்டுக்கு டேங்கர்களில் எரிவாயுவை எடுத்துவரும் பணியை மேற்கொண்டு வருகின்றன.

2025–30ம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்த விதிகளை எண்ணெய் நிறுவனங்கள் அண்மையில் வெளியிட்டன. இதில் இரண்டு அச்சு லாரிகளை பயன்படுத்தக் கூடாது, மூன்று அச்சு லாரிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாற்று ஓட்டுநர் இல்லாத பட்சத்தில் ரூ.20 ஆயிரம் அபராதம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த விதிமுறைகளால் டேங்கர் லாரிகளை இயக்கமுடியாத நிலைக்கு லாரி உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மூன்று கட்டங்களாக எண்ணெய் நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. அதனால் தென்மண்டல அளவில் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் 6 மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும்.

தென் மண்டலம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள டேங்கர் லாரிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட முன்வந்துள்ளன. வருவாய் இழப்பைக் காட்டிலும் வேலை வாய்ப்பு பறிபோகக் கூடாது என்ற எண்ணத்திலேயே இந்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளோம். எண்ணெய் நிறுவனங்கள் தாமாக முன்வந்து பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை வேலைநிறுத்த போராட்டம் தொடரும் என்றார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *