செய்திகள் முழு தகவல்

இன்சூரன்ஸ் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கும் எல்ஐசி பங்கு விற்பனை


இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச்செயலாளர் கே.துளசிதரன் பேட்டி


எல்ஐசி பங்கு விற்பனை விரைவில் துவக்கப்படும். பங்குகளை மதிப்பீடு செய்வதற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன என இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின் போது தெரிவித்து இருந்தார்.

எல்ஐசி விரைவில் பொதுப்பங்கு வெளியீடு (ஐபிஓ) மேற்கொள்வதற்கான ஆயத்தப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியிடம் பங்குகள் விற்பனை தொடர்பான வரைவு அறிக்கையை (டிஆர்எச்பி) எல்ஐசி தாக்கல் செய்து உள்ளது. பொதுப்பங்கு வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்பட வில்லை. எனினும் மார்ச் 31க்குள் ஐபிஓ மேற்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு !

எல்ஐசி பங்கு விற்பனை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எல்ஐசி நிறுவனம் பல்லாண்டுகளாகப் பலகோடி இந்தியர்களின் தேவைகளை நிறைவுசெய்து, அவர்களின் நன்னம்பிக்கையைச் சம்பாதித்து, தனது திறம்பட்ட செயல்பாட்டால் அவர்களுக்குச் சமூகப் பாதுகாப்பை வழங்கியுள்ளது. அத்தகைய நிறுவனத்தின் பங்குகளில் 5 விழுக்காட்டை விற்பனை செய்ய ஒன்றிய அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்திருப்பது தனியார்மயத்தை நோக்கிய -முற்றிலும் விரும்பத்தகாத செயலாகும்.

இம்முடிவு மக்களின் நலனையோ எல்ஐசி நிறுவனத்தின் நலனையோ கருதி மேற்கொள்ளப்பட்டதன்று. ஒரு நல்லரசு என்பது நிறுவனங்களைக் கட்டியமைக்க வேண்டுமேயன்றி; தொடர் விற்பனையில் ஈடுபடுவதில் மும்முரம் காட்டக்கூடாது. முறையான யோசனையின்றி எடுக்கப்பட்ட இம்முடிவை ஒன்றிய அரசு திரும்பப் பெற்று எல்ஐசி நிறுவனத்தைக் காக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.


எல்ஐசி தொடர்பான இந்திய அரசின் நடவடிக்கைக்கு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு குறித்து, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கோவை கோட்ட பொதுச்செயலாளர் கே.துளசிதரன் ‘மக்கள் குரல்’ நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:–

பங்கு விற்பனைக்கு எல்ஐசியை ஒன்றிய அரசு தேர்ந்தெடுப்பதற்கான காரணம்…

ஒரு நியாயமான காரணமும் இல்லை. இதுவரை பொதுத் துறை நிறுவனங்கள் தனியார் மயம் ஆகும் போதெல்லாம் நட்டத்தில் ஓடுகிறது. திறமையாக செயல்படுவதில்லை, மக்களுக்கு சேவை சரியாக போய்ச் சேரவில்லை என்று காரணம் கூறப்பட்டது. இது எதுவும் எல்ஐசிக்கு பொருந்தாது. பட்ஜெட்டில் விழும் பள்ளத்தை சரிக்கட்ட எல்ஐசி பங்குகளை விற்க முடிவு செய்துள்ளனர்.

எல்ஐசியின் கோடிக்கணக்கான சொத்துக்களை விற்பதில் என்ன பாதிப்பு ஏற்பட்டுவிட போகிறது…

எல்ஐசி சொத்துக்களை இவர்கள் விற்கவில்லை. முழு அரசுடமையாக உள்ள எல்ஐசியில் ஒரு பங்கை விற்கப் போகிறார்கள். இனி அரசு முழு அரசு நிறுவனமாக இருக்காது என்ற நிலையை உருவாக்கப் போகிறார்கள். அதற்கு என்ன அவசியம் என்பதே கேள்வி.

பொதுமக்களிடம் தானே பங்குகள் விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு தானே லாபம் செல்கிறது… இதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது…

நாளை பங்குகள் சந்தைக்கு வரும் போது பாருங்கள். எந்த பொது மக்களுக்கு விற்க போகிறார்கள் என்று. எல்ஐசி பங்குகளை வாங்க டி மேட் வங்கிக்கணக்கு வேண்டும். இந்தியாவில் 7 கோடி பேர்தான் வைத்திருக்கிறார்கள். அதில் 4 கோடி பேர் தான் முனைப்போடு இருப்பவர்கள். ஏதோ ரோட்டில் சைக்கிளில், ஆட்டோவில் செல்பவர்களுக்கு எல்லாம் கிடைக்கப் போவது போல பேசுகிறார்கள். உயர் நடுத்தர வர்க்கத்தில் ஒரு பகுதிக்கு கிடைக்கலாம்.

அவர்கள் கைகளிலும் பங்குகள் தங்காது. நிறுவன முதலீட்டாளர்கள் கைகளில் போய் விடும். இதுதான் ஏற்கெனவே பங்கு விற்பனை ஆன அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களான நியூ இந்தியா அஸ்யூரன்ஸ், ஜிஐசி அனுபவம். அங்கே எல்லாம் சில்லறை முதலீட்டாளர் கைகளில் ஒன்றரை சதவீத பங்குகள் கூட இப்போது இல்லை. ஆகவே இது மாயமான். சீதையை கடத்தியது போல இன்று பொதுத் துறை நிறுவனங்களை கடத்தப் பார்க்கிறார்கள்.

எல்ஐசியின் பங்குகளை விற்பதன் மூலம் அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி கிடைக்கும் தானே…

தங்க முட்டை வாத்தை அறுத்தவனுக்கு ஒரு தங்க முட்டை கிடைத்த கதைதான். முழுமையான அரசு நிறுவனமாக இருந்தால் எல்ஐசி இடமிருந்து அரசு பத்திரங்களுக்கு முதலீடுகளை எதிர்பார்க்க முடியும். இன்று ரூ.23 லட்சம் கோடி ஒன்றிய, மாநில அரசு பத்திரங்களில் எல்ஐசி முதலீடு செய்திருக்கிறது. அது மக்கள் நலத் திட்டங்களுக்கு அரசுகளால் பயன்படுத்தப்படுகிறது.

ரெயில்வே நிதி கேட்டால் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வரை கூட தரத் தயாராக இருந்தது. அரசுதான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பட்ஜெட் பற்றாக்குறையை நிறைவு செய்ய அரசு திரட்டப் போகும் 60,000 கோடியோ, 80,000 கோடியோ அதை விட அதிகமாக எல்ஐசி அரசுக்கு ஆண்டுதோறும் தந்து கொண்டிருக்கிறது. அவ்வளவு பெரிய தொகையில் எல்ஐசியின் அரசுடமையில் எந்த மாற்றமும் வந்து விடவில்லை. அதை விட குறைவான தொகைக்கு அரசு ஏன் முழு உடமை என்ற தகுதியை இழக்க வேண்டும் என்பதே கேள்வி.

எல்ஐசியின் சொத்துக்கள் விற்கப்படும்போது பாலிசி தாரர்களுக்கு எல்ஐசியின் மீதான நம்பகத்தன்மை குறைந்து விட வாய்ப்புள்ளதா…

பாலிசிதாரர்களிடம் கேள்விகள் எழும். இப்போதே எல்ஐசிக்கு என்ன ஆகும் என்ற கவலையுடன் கேட்கிறார்கள்.

அரசு விற்கப்போவது 5 சதவீதம்தான். ஆனால் இது தனியார் மயத்தின் முதற் படி. அரசின் ஆசை இன்னும் 49 சதவீதம் வரை விற்க வேண்டும். பின்னர் 50 சதவீதத்திற்கும் அதிகமாக கூட தனியார்க்கு தரலாம் என்பதே. இதை நாங்கள் கற்பனையாக சொல்லவில்லை. இதுதான் வங்கி, பொது இன்சூரன்ஸ் துறைகளின் அனுபவம். ஆகவேதான் பங்கு விற்பனையை எதிர்க்கிறோம். அரசு அவ்வளவு வேகமாக தனியார்மயம் நோக்கி போக முடியாது.

இந்த நிறுவனத்தின் உடமையாளர் என்று சொல்லிக் கொள்ளும் அரசாங்கம் நம்பிக்கையை உடைக்கிறது. ஆனால் ஊழியர்கள் நிறுவனத்தின் மீதான அக்கறையால் நம்பிக்கை தந்து வருகிறோம்.

எல்ஐசி பங்குகள் விற்கப்படும் போது விதிமுறைகளில் மாற்றம் வர வாய்ப்புள்ளதா?

ஆமாம். இப்போது நிறுவனம் ஈட்டும் உபரியில் 95% ஐ பாலிசிதாரர்களுக்கு எல்ஐசி கொடுத்து வந்துள்ளது. இது 90 சதவீதம் வரை குறையலாம். பாலிசிதாரர்களுக்கான போனஸ் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது.

எல்ஐசி பணியாளர்கள், முகவர்கள் எந்த விதத்தில் பாதிக்கப்படுவார்கள்?

பணியாளர்களுக்கு பாதிப்பு, மக்களுக்கு நன்மை என்றால் கூட ஏற்கலாம். ஆனால் எல்லோருக்கும் பாதிப்பு என்பதே. இன்று எல்ஐசி யின் பெரும்பகுதி வணிகம் முகவர்கள் மூலமே வருகிறது. 13 லட்சம் முகவர்கள் இருக்கிறார்கள். தனியார்கள் உள்ளே வந்தால் அவர்கள் ஆன்லைன் வணிகம், பன்னாட்டு நிறுவன முகவர்கள், வங்கி வாயிலாக வணிகம் என, இப்போது தனியார் நிறுவனங்கள் செய்வது போல செய்யுமாறு வற்புறுத்துவார்கள். இது முகவர்களை பாதிக்கும். வேலை வாய்ப்புகளை பாதிக்கும். பணியாளர்களும் குடி மக்கள் என்ற வகையில் மக்களுக்கு ஏற்படுகிற பாதிப்புகளை அனுபவிப்பார்கள்.

எல்ஐசி பங்கு விற்பனை என்ற இந்திய ஒன்றிய அரசின் நோக்கத்தில் எங்கு நீங்கள் மாறுபடுகிறீர்கள்?

உள் நோக்கத்தில் மாறுபடுகிறோம். 2008 இல் இதே முடிவு காங்கிரஸ் கட்சியால் எடுக்கப்பட்ட போது இன்றைய ஆளும் கட்சி எதிர்த்தது. காங்கிரசும் கைவிட்டது. இன்று அதே முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் என்ன?

இவர்களின் உள் நோக்கம் இரண்டு. ஒன்று குறுகிய கால நோக்கம். நிதிப் பற்றாக்குறையை ஈடு கட்ட பங்கு விற்பனையை வழியாக கையாள்வது. இரண்டாவது நீண்ட கால நோக்கம், இவ்வளவு பெரிய நிறுவனத்தை அரசின் கைகளில் இருந்து தனியாருக்கு படிப்படியாக மாற்றுவது. இந்த இரண்டு நோக்கங்களிலும் மாறுபடுகிறோம்.

எல்ஐசி–யின் பங்குகளை தனியாருக்கு விற்பது;
விதை நெல்லை விற்றுச் சாப்பிடுவதற்குச் சமம்!


17 ந்தேதி வெளியான முரசொலி நாளிதழில், “எல்ஐசி–ஆயுள் பறிப்பு!” என்ற தலைப்பில் எழுதியுள்ள தலையங்கத்தில் இருந்து சில பகுதிகள் வருமாறு:–


ஆயுள் காப்பீட்டுக் கழகமான, எல்.ஐ.சி.யின் ஆயுளைப் பறிக்கும் காரியங்கள்தான் இப்போது நடக்கத் தொடங்கியது. எதையும் உருவாக்கத் தெரியாதவர்களுக்கு உருக்குலைக்கத்தான் தெரியும் என்பதன் எடுத்துக் காட்டாக மாறிவிட்டது ஆயுள் காப்பீட்டுக் கழகம்.


2021 பிப்ரவரி 1 ஆம் நாள் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசிடம் உள்ள எல்.ஐ.சி.யின் 100 சதவிகிதப் பங்குகளின் ஒரு பகுதியை தனியாருக்கு விற்கப் போவதாகச் சொன்னார். இதற்கான பொதுக்காப்பீட்டுத் திட்ட மசோதாவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2 அன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றிக் கொண்டார்கள். கடந்த ஆண்டு டிசம்பருக்குள் விற்பனை செய்து விடுவதாகச் சொன்னார்கள். ஆனாலும் கணக்கீடு முடியாததால் இந்த ஆண்டு மார்ச் வரைக்கும் என்று தேதியை தள்ளிப் போட்டுள்ளார்கள். இப்படி விற்பதற்கு இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி கொடுத்துவிட்டது.
32 கோடி பங்கு விற்பனை

தற்போது 632 கோடியே 49 லட்சத்து 97 ஆயிரத்து 701 பங்குகள் ஒன்றிய அரசிடம் உள்ளன. இதில் 4.99 சதவிகிதத்தை அதாவது 31 கோடியே 62 லட்சத்து 49 ஆயிரத்து 885 பங்குகள் தனியாருக்கு விற்கப்பட இருக்கின்றன. இதன் மூலமாக 62 ஆயிரம் கோடி ரூபாய் பணம் திரட்டலாம் என்று கணக்கிட்டுள்ளார்கள். இப்படி கிடைக்கும் பணம், எல்.ஐ.சி.க்கு வராது. ஒன்றிய அரசுக்குத்தான் போகும். இதன் மூலமாக எல்.ஐ.சி.யின் கட்டுமானம் மெல்ல இறுக்கம் குறையப் போகிறது.


19.01.1956 இரவு 8.30 மணிக்கு அப்போதைய நிதியமைச்சர் தேஷ்முக், வானொலி மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிட்டார். ‘மறுநாள் காலையிலேயே அனைத்து தனியார் காப்பீடு நிறுவனங்களும் அரசுடைமை ஆக்கப்படும்’ என்பதுதான் அந்த அறிவிப்பு. அதைத் தொடர்ந்து இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் தொடங்கப்பட்டது. தனியார் நிறுவனங்களை ஆயுள் காப்பீட்டில் அனுமதிப்பதில்லை என்று அரசு முடிவெடுத்தது.ரூ.38 லட்சம் கோடியான ரூ.5 கோடி

1956-ல் ரூ.5 கோடி மூலதனத்தில் உருவாக்கப்பட்ட எல்.ஐ.சி. கடந்த 2020-21ஆம் நிதியாண்டில் மட்டும் மொத்த வருமானமாக ரூ.6,82,205 கோடியை ஈட்டியுள்ளது. இதில் பிரிமியம் வருவாயாக ரூ.4,02,844.81 கோடியைப் பெற்றுள்ளது. எல்.ஐ.சி.யின் இன்றைய மொத்த சொத்து ரூ.38,04,610 கோடி. இதன் காரணமாகத்தான் இந்திய நிதிச் சந்தையில் எல்.ஐ.சி. விசுவரூபம் எடுத்திருக்கிறது.


இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் புள்ளிவிபரங்களைப் பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது. இன்று எல்.ஐ.சி.யில் தனிநபர் காப்பீடு பெற்றிருப்பவர்களின் எண்ணிக்கை 28.62 கோடி. குழுக் காப்பீடு பெற்றிருப்பவர்கள் 12 கோடி என மொத்தம் 40.62 கோடி பாலிசிகளை விற்பனை செய்து, உலகிலேயே மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாக எல்.ஐ.சி.அபாரமான வளர்ச்சியில் உள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
32 கோடிக் குடும்பங்கள் உடைய நாட்டில் 40 கோடி பாலிசிகளைக் கொண்ட நிறுவனமாக அது இருக்கிறது.எல்.ஐ.சி.க்கு நாடு முழுவதும் 8 மண்டல அலுவலகங்கள், 113 கோட்ட அலுவலகங்கள், 2,048 கிளை அலுவலகங்கள், 1,546 துணை அலுவலகங்கள், 1,08,987 ஊழியர்கள், 13,53,808 முகவர்கள் என விரிந்த, பரந்த கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
98.62% உரிமம் வழங்கி சாதனை

இந்த நிறுவனத்தின் நம்பகத் தன்மை குறித்து ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. 2020-21-ம் நிதியாண்டில் கொரோனா காலத்தில்கூட இறப்பு உரிமம் 98.62 சதவிகிதமும், முதிர்வுத் தொகை 89.78 சதவீதமும் வழங்கி இருக்கிறது. எத்தனையோ தனியார் நிறுவனங்கள் வந்தாலும் ஆயுள் காப்பீட்டுச் சந்தையில் இதன் மதிப்பு குறையாமல் உள்ளது. போட்டிக் கதவுகள் திறந்து விடப்பட்டாலும் தனது சந்தை மதிப்பை தக்க வைத்துள்ளது. அதுதான் சிலரது கண்ணை உறுத்துகிறது.ஒன்றிய அரசுக்கு எப்போதெல்லாம் பணம் வேண்டுமோ அப்போதெல்லாம் எல்.ஐ.சி. கை கொடுக்கும். ஐ.டி.பி.ஐ. வங்கிக் கடனில் மூழ்கஇருந்தபோது கூட எல்.ஐ.சி.யே அதைக் காப்பாற்றியது. பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு என்று வந்தால் எல்.ஐ.சி. அதில் அதிக முதலீடு செய்யும். சராசரியாக அரசு பத்திரங்களிலும், பங்குச் சந்தைகளிலும் எல்.ஐ.சி. வருடத்திற்கு 55 முதல் 65 ஆயிரம் கோடி முதலீடுகளைச் செய்கிறது. 2009ஆம் ஆண்டிலிருந்து வருவாய் பற்றாக்குறையைக் குறைக்க அரசு பொதுத்துறை நிறுவனங்களை விற்றபோதெல்லாம் எல்.ஐ.சி.தான் அதை வாங்க முன்வரும் முதல் நிறுவனமாக இருந்தது.


ஆனால் இன்று எல்.ஐ.சி.க்கே அந்த நிலைமை வந்துவிட்டது. இவைஅனைத்தும் நல்லதுக்கு அல்ல. நல்லதன் அடையாளம் அல்ல! இதன் மூலமாக எல்.ஐ.சி.யின் கட்டுமானம் கேள்விக் குறியாக்கப்படுகிறதுஎன்பதை விட ஒன்றிய அரசு எத்தகைய நிதிநிலைமையில் இருக்கிறதுஎன்றே தெரிகிறது. விதை நெல்லை விற்றுச் சாப்பிடுவதற்குச் சமம் இது!


–நன்றி:முரசொலி நாளிதழ்

எல்ஐசி பங்குகளை பொதுமக்களும் வாங்கலாம் என்றும், இதனால் எல்ஐசியின் செயல்பாடுகள் மேலும் வெளிப்படையாகும். பங்குச் சந்தை வணிகம் மேலும் விரிவடையும்” என இந்திய அரசு சார்பில் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து தங்களுடைய கருத்து…

செபி கட்டுப்பாட்டிற்குள் போனால் கண்காணிப்பு வலுப்படும் என்கிறார்கள். குளோபல் ட்ரஸ்ட் பாங்க்கில் துவங்கி டிஎச்எப்எல் வரை தனியார் நிதி நிறுவனங்கள் திவாலாகி உள்ளதே…

எல்ஐசி நிறுவன தகவல் அறிக்கை அதாவது முன்னேற்ற அறிக்கையை (Prospctus filing) விட இன்னொரு செய்தி இன்று தலைப்பு செய்தியாகி உள்ளதே. நேஷனல் ஸ்டாக் மார்க்கெட் முன்னாள் சிஇஒ சித்ரா ராமகிருஷ்ணா, இமயமலை யோகி ஒருவரிடம் ஆலோசனை பெற்று ஸ்டாக் எக்சேஞ்ச் முடிவுகளை எடுத்தார் என்று அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிற செய்தி. எங்கே கண்காணிப்பு?

அரசு பங்கு விற்பனைக்கான முடிவையே வெளிப்படையாக எடுக்கவில்லை. தனி மசோதாவாக கொண்டு வராமல் நிதி மசோதாவுக்குள் நுழைத்து கொண்டு வந்தார்கள். இப்போது எல்ஐசியின் உள்ளார்ந்த மதிப்பை தீர்மானிப்பதில் என்ன வெளிப்படைத் தன்மையை கடைப்பிடித்தார்கள்?

எல்ஐசியின் செயல்பாடுகள் மேலும் வெளிப்படையாகும் என அரசு தெரிவிப்பதன் பொருள்…

இப்போது இல்லை என்ற பொய்யான தோற்றம் கொடுப்பதை தவிர வேறு ஒன்றுமில்லை. எல்ஐசி கணக்குகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றன. இணைய தளத்தில் வணிக விவரங்கள் வெளியிடப்படுகின்றன. வேறு என்ன வேண்டும் வெளிப்படைத் தன்மைக்கு?

“எல்ஐசியின் 100 சதவீத பங்கும் ஒன்றிய அரசின் வசம் தற்போது உள்ளது. இதில் குறைந்த அளவு மட்டுமே விற்கப்பட உள்ளது. இதனால் எல்ஐசியின் நிர்வாக அதிகாரம் தொடர்ந்து அரசின் வசமே இருக்கும் என இந்திய அரசு தெரிவிப்பது பற்றி…

இது கூடாரத்தில் ஒட்டகம் மூக்கை நுழைக்கும் கதைதான். இப்படித்தான் வங்கியில், அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தில் சொன்னார்கள். ஆனால் வார்த்தையை காப்பாற்றினார்களா? இன்று இரண்டு வங்கிகள் தனியார்மயம் ஆகும், ஒரு அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனம் தனியார்மயம் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதே… இதை விட சாட்சியம் என்ன வேண்டும்?

உலக நாடுகளில் எல்ஐசி போல் காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளதா… அங்கு இதுபோல் அரசு தனியார் பொதுமக்கள் பங்களிப்பை அனுமதித்து உள்ளதா என்பது பற்றி…

பல நாடுகளில் 1990 களுக்கு பின்பு தனியார் மயம் நடந்துள்ளது. தனியார் நிறுவனங்கள் போட்டிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. அண்டை நாடான இலங்கையில் கூட நடந்துள்ளது. இரண்டு தகவல்கள் முக்கியமானவை.

ஒன்று எல்ஐசிக்கு எதிராக 23 தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் களத்தில் உள்ளன. இருந்தாலும் எல்ஐசி புதிய பாலிசி வணிகத்தில் 74 சதவீத சந்தைப் பங்கை வைத்திருக்கிறது. இது உலகில் தனிப் பெரும் சாதனை.

இரண்டாவது அமெரிக்காவின் மிகப் பெரிய, இந்தியாவில் டாடா வுடன் சேர்ந்து கூட்டாண்மையில் உள்ள ஏஐஜி என்கிற தனியார் பன்னாட்டு நிறுவனம் திவாலின் விளிம்பிற்கு 2008 இல் சென்ற போது அமெரிக்க அரசாங்கம் 80 சதவீத பங்குகளை வாங்கி காப்பாற்றியது. ஆனால் அதை யாரும் தேசிய மயம், அரசு நிறுவனமாக மாற்றம் என்று சொல்லவில்லை.

மத்திய அரசு இதனுடைய சாதகம் பாதகம் இரண்டையும் ஆலோசித்த பின்னர்தானே முடிவு எடுத்திருக்கும்…

ஆமாம். எது சாதகம், எது பாதகம் என்று அரசுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் தேசத்திற்கு எது சாதகம் என்பதை விட பன்னாட்டு நிறுவனங்களுக்கு எது சாதகம் என்பதை வைத்து முடிவெடுக்கிறார்கள்.

எல்ஐசி பங்கு விற்பனைக்கு மாற்றாக நீங்கள் முன் வைக்கும் வழிகள்…

அரசுக்கு நிதி பற்றாக்குறையை ஈடு கட்ட நிதி வேண்டுமெனில் பன்னாட்டு நிறுவனங்களின் வரிகளை உயர்த்தலாம். கோவிட் காலத்தில் கூட 40 புதிய பில்லியனர்கள் உருவாகி உள்ளார்களே. செல்வ வரி போடலாம். மார்ச் 2020 இல் 23 லட்சம் கோடியாக இருந்த 100 பணக்காரர்கள் செல்வ மதிப்பு இன்று 56 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வாரிசுரிமை வரி போடலாம். எத்தனையோ நாடுகளில் அது அமலில் உள்ளது. அரசுக்கு உண்மையிலேயே எல்ஐசி இடம் இருந்து அதிகமாக ஏதேனும் எதிர்பார்த்தால் விவாதிக்கலாம்.


தொகுப்பு: ஷீலா பாலச்சந்திரன்


Leave a Reply

Your email address will not be published.