நவ. 19–
இஸ்ரோ தயாரித்த 4,700 கிலோ எடை கொண்ட ஜிசாட்–20 செயற்கைக்கோளை, அமெரிக்காவின் ப்ளோரிடாவில் இருந்து எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
விண்வெளி துறையில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஆண்டுதோறும் பல செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. இவை அனைத்துமே ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட்டுகள் மூலம் ஏவப்பட்டு வந்தன.
இந்நிலையில் விண்வெளி ஆராய்ச்சி, விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புதல் உள்ளிட்டவற்றில் உலக நாடுகள் மட்டுமல்லாது தனியார் நிறுவனங்களோடும் இஸ்ரோ ஒப்பந்தம் செய்து இயங்குகிறது.
தகவல் தொடர்பை மேம்படுத்துவதற்காக ஜிசாட்–20 (ஜிசாட்–என் 2 என்று மறுபெயரிடப்பட்டுள்ளது) செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. பாகுபலி என்று அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோளின் எடை 4,700 கிலோ கொண்டது. இந்த செயற்கைக்கோள் 14 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது. இதன் மூலம் இந்தியாவில் தொலைதூரப் பகுதிகளில் வேகமான இணைய இணைப்பை செயல்படுத்த முடியும்.
ஜிசாட்–20 செயற்கைக்கோளை இஸ்ரோவுக்கு சொந்தமான ராக்கெட்டுகளால் விண்ணில் செலுத்துவது கடினமானது. இதனால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உதவியை இஸ்ரோ நாடியது. அதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஒத்துகொண்டது.
இந்நிலையில் அமெரிக்காவின் ப்ளோரிடாவில் கேப் கேனரவல் ஏவுதளத்தில் இருந்து, இஸ்ரோவின் ஜிசாட்–20 செயற்கைக்கோளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 12.01 மணியளவில் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. ‘ஜியோஸ்டேஷனரி டிரான்ஸ்பர் ஆர்பிட்’ என்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
இஸ்ரோவுக்கும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கும் இடையே வர்த்தக ரீதியில் செயற்கைக்கோள் ஏவப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரோவின் வர்த்தக பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்டின் தலைவரும், நிர்வாக மேலாளருமான ராதாகிருஷ்ணன் துரைராஜ், ஜிசாட்–20 செயற்கைக்கோள் அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதை உறுதி செய்தார்.
அடுத்த தலைமுறை ராக்கெட்
ஜிசாட்–20 மூலம் எதிர்கொண்ட பிரச்சினையை சமாளிக்க, இஸ்ரோ தனது அடுத்த தலைமுறை ராக்கெட் ஆன என்.ஜி.எல்.வி.யை உருவாக்கி வருகிறது. தற்போதைய எல்.வி.எம்.3-ன் 4 டன் திறனை 3 மடங்கு அதிகரிக்கும் வகையில் இந்த சக்திவாய்ந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ராக்கெட் இஸ்ரோவின் பயன்பாட்டு அட்டவணையில் சேர்ந்தால் ‘ஸ்பேஸ்எக்ஸ்’ உதவியை நாடவேண்டிய அவசியம் இருக்காது. இஸ்ரோ சொந்தமாக அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த முடியும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.