செய்திகள்

எர்ணாகுளம் – பெங்களூரு உள்பட ‘வந்தே பாரத்’ 4 புதிய ரெயில் சேவை மோடி துவக்கி வைத்தார்

Makkal Kural Official

* ரெயிலில் பயணித்தார்: பயணிகளோடு கலந்துரையாடினார்

* குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்து மகிழ்ந்தார்

வாரணாசி, நவ.8–

‘‘எர்ணாகுளம் – பெங்களூரு உள்பட ‘வந்தே பாரத்’ 4 புதிய ரெயில்களின் சேவையை பிரதமர் மோடி வாரணாசியில் கொடியசைத்து தொடங்கி வைத்து, ‘‘இந்தியா வளர்ச்சி பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது’’ என தெரிவித்தார்.

நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்கள் மூலம் பயண நேரம் கணிசமாக குறைகிறது. இந்த வந்தே பாரத் ரெயில் சேவைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடந்த நிகழ்ச்சியில் லக்னோ – சஹாரன்பூர், பனாரஸ் – கஜுராஹோ, பிரோஸ்பூர் – டெல்லி மற்றும் எர்ணாகுளம் – பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் ரெயில் சேவைகளை மோடி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எர்ணாகுளம் – பெங்களூரு வந்தே பாரத் ரெயில் தமிழகத்தின் கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகள் வழியாக இயக்கப்பட உள்ளது. புதன்கிழமை தவிர வாரத்தின் மற்ற நாட்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகாவை இணைக்கும் முதல் ரெயிலாக இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.

பயண நேரம் 2 மணிநேரம்

குறையும்

தென்னிந்தியாவில் எர்ணாகுளம்–பெங்களூர் வந்தே பாரத் பயண நேரத்தை 2 மணி நேரத்திற்கும் மேலாகக் குறைத்து, பயணத்தை 8 மணி நேரம் 40 நிமிடங்களில் முடிக்கும். இந்த ரெயில் முக்கிய தகவல் தொழில்நுட்ப மற்றும் வணிக மையங்களை இணைக்கும். இது தொழில் வல்லுநர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு விரைவான மற்றும் வசதியான பயண விருப்பத்தை வழங்கும். இந்த பாதை கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம் இடையே அதிக பொருளாதார செயல்பாடு மற்றும் சுற்றுலாவை ஊக்குவிக்கும், பிராந்திய வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பை ஆதரிக்கும்.

இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, ‘‘புதிய 4 வந்தே பாரத் ரெயில் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு நகரின் வளர்ச்சி என்பது சிறந்த போக்குவரத்து தொடர்பு கிடைத்ததும் தொடங்குகிறது. உள்கட்டமைப்பு என்பது பெரிய பாலங்கள் நெடுஞ்சாலைகளுடன் நின்று விடுவதில்லை. புதிய வந்தே பாரத் ரெயில் சேவைகள் தொடர்புகளை மேம்படுத்தி மக்களுக்கு கூடுதல் வசதியை தரும்’’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

உலகெங்கிலும் உள்ள வளர்ந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் உள்கட்டமைப்பு ஒரு முக்கிய காரணியாகும். இந்தியாவும் வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகிறது. வந்தே பாரத், நமோ பாரத் என்றார்.

அம்ரித் பாரத் போன்ற ரெயில்கள் புதிய தலைமுறை இந்திய ரெயில்வேக்கு அடித்தளமிடுகின்றன. கடந்த 11 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் அவற்றை புதிய நிலைக்கு கொண்டு சென்றுள்ளன. வாரணாசியில் உள்ள புனித யாத்திரைத் தலங்களுக்குச் செல்லும் பக்தர்கள் உ.பி.யின் பொருளாதாரத்திற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பங்களித்துள்ளனர் என்றும் கூறினார்.

வாரணாசிக்குச் செல்வதையும், இங்கு தங்குவதையும் அனைவருக்கும் ஒரு சிறப்பு அனுபவமாக மாற்றுவதே எங்கள் முயற்சியாக இருக்கிறது. புதிய ரெயில் சேவைகள் சுற்றுலா துறையில் வளர்ச்சியை உருவாக்கும். உள்ளூர் பொருளாதாரங்களை ஊக்குவிக்கும் என்றும் மோடி கூறினார்.

குழந்தைகளுக்கு சாக்லேட்

எர்ணாகுளத்தில் நடந்த நிகழ்ச்சியில் எர்ணாகுளம்–பெங்களூரு வந்தே பாரத் ரெயிலில் மத்திய அமைச்சரும், பா.ஜ.க. எம்.பி.யுமான சுரேஷ் கோபி பயணித்து குழந்தைகளுடன் கலந்துரையாடி சாக்லேட்டுகளை வழங்கினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *