செய்திகள்

எருது விடும் விழா: தயாராகும் காளைகள்

தைப்பொங்கல் பண்டிகையையொட்டி, வேலூர் மாவட்ட கிராமங்களில் எருது விடும் திருவிழா நடத்துவதற்காக ஆயிரக்கணக்கான காளைகளை தயார்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதேபோல், இவ்விழாவின்போது சீறிப்பாய்ந்து வரும் காளைகளை விரட்டிப்பிடிக்க வீரர்களும் தங்களது உடலை தயார்படுத்தி வருகின்றனர்.

தமிழர் திருநாளான தைப்பொங்கல் தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையைத் தொடர்ந்து ஒரு வார காலத்துக்கு நடத்துவது வழக்கம். இதில், மாட்டுப் பொங்கலையொட்டி, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வீர விளையாட்டுப் போட்டிகள் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது.

இதேபோல் வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் மஞ்சு விரட்டு எனும் காளை விடும் திருவிழா நடத்தப்படுகிறது. இதை எருது விடும் திருவிழா என்றும் அழைக்கின்றனர். வேலூர் மாவட்டம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆண்டுதோறும் இந்த எருது விடும் திருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டும் எருதுவிடும் விழாவை வெகு சிறப்பாக நடத்த மாவட்டம் முழுவதும் பல்வேறு கிராமங்களில் எருதுகளை தயார்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக, கணியம்பாடி, அடுக்கம்பாறை, காட்பாடி, லத்தேரி, குடியாத்தம், பேர்ணாம்பட்டு, ஊசூர், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்டற ம்பள்ளி, கந்திலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான காளைகள் எருதுவிடும் விழாவுக்காக தயார்படுத்தப்பட்டு வருகின்றன.

அடுக்கம்பாறை அருகே சோழவரம் கிராமத்தில் எருதுவிடும் விழாவுக்காக காளைகளை தயார்படுத்தும் ஜி.ஜெயப்பிரகாஷ் கூறியதாவது:

தைப்பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ளது. இதையொட்டி நடைபெறும் எருது விடும் திருவிழாவில் பங்கேற்பதற்காக 5 காளைகளை கடந்த ஒரு மாதத்துக்கு மேலாகவே தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். நாட்டு மாடுகளில் தேர்வு செய்யப்படும் காளைகள் இந்த எருதுவிடும் போட்டிக்காக தயார்படுத்துகிறோம். இந்தக் காளைகளை தினமும் அதிகாலையில் குளிப்பாட்டி நீச்சல், மண் குவியலைக் கிளறுதல், நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, சீறிப்பாயும் பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்படுகின்றன.

மேலும், காளைகளுக்கு நவதானிய கூழ், தவிடு, புண்ணாக்கு, பால், நாட்டுக்கோழி முட்டை உள்ளிட்ட சத்துள்ள உணவுகள் அளிக்கப்படுகின்றன. இதனால், எருதுகளின் உடல் வலிமை பெற்று சீறிப்பாயும்போது அதை வீரர்கள் எளிதில் பிடிக்க முடியாது. அத்துடன், காளைகளின் கொம்புகளை சீவி விடுதல், காலில் லாடம் அடித்தல் உள்ளிட்டவையும் மேற்கொள்ளப்படும். இந்த எருதுவிடும் திருவிழாவுக்காக தயார்படுத்தும் காளைகளை வேறு எந்தப் பணிகளுக்கும் பயன்படுத்துவதில்லை. இந்தக் காளைகளை வீட்டில் வளர்ப்பதும், அவை எருதுவிடும் விழாவில் சீறிப்பாய்வதும் குடும்ப கௌரவமாக நினைக்கிறோம் என்றார்.

எருதுவிடும் திருவிழாவுக்கு தயார்படுத்தும் காளைகள் சிறிய கன்றுக்குட்டியில் இருந்தே அதற்காகவே வளர்க்கப்படுகின்றன. குறிப்பிட்ட பருவத்தை எட்டிய பிறகு அவை விழாவில் பங்கேற்கின்றன. மிகச் சிறந்த முறையில் தயார்படுத்தப்பட்டுள்ள காளைகள் ரூ. 20 லட்சம் வரை விலைபோவதாகவும், இவற்றை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மட்டுமின்றி ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வீரர்கள் வாங்கிச்செல்வதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, எருதுவிடும் திருவிழாவில் சீறிப்பாயும் காளைகளைப் பிடிக்க வீரர்களும் தங்களது உடலை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தினமும் பல்வேறு உடற்பயிற்சிகள் மேற்கொண்டு வருவதுடன், ஓரிரு மாதங்களாக உடல் வலிமையைக் கூட்டும் உணவுகளை மட்டுமே எடுத்துக் கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

அந்த வகையில், இந்த ஆண்டு வேலூர் மாவட்ட கிராமங்களில் நடைபெற உள்ள எருதுவிடும் திருவிழாக்களை எதிர்பார்த்து காளைகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *