சென்னை, ஆக.28-
எரிபொருள் மிச்சமாகும் வகையில் இந்தியன் ஆயில் நிறுவனம் புதிய வகை கியாஸ் சிலிண்டரை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘இன்டேன்’ எனப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர், வர்த்தக சிலிண்டர் என 2 வகையாக விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது, ‘இன்டேன் எக்ஸ்ட்ராடெஜ்’ எனப்படும் புதிய வகை கியாஸ் சிலிண்டரை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
மேம்படுத்தப்பட்ட செயல்திறன் மூலம் இந்த கியாஸ் சிலிண்டரில் வழக்கமான கியாஸ் சிலிண்டரை விட குறைந்தபட்சம் 5 சதவீதம் எரிபொருளை சேமிக்க முடியும் என்றும், அதேவேளையில் சமையலுக்கான நேரம் மிச்சமாகும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
எக்ஸ்ட்ராடெஜ் எனப்படும் இந்த புதிய வகை கியாஸ் சிலிண்டரின் அறிமுக விழா பெங்களூருவில் நடந்தது.
சமையல் கலைஞர்
சஞ்சீவ்கபூர்
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குனர் (எல்.பி.ஜி.) சைலேந்திரா, இதை அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ‘இந்த புதிய வகை சிலிண்டர் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். எரிபொருளை மேலும் மிச்சப்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்ட ரெகுலேட்டர், சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு கியாசை எடுத்து செல்லும் குழாய் ஆகியவற்றை உருவாக்கி உள்ளோம். விரைவில் இவை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்’ என்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரபல சமையல் கலைஞர் சஞ்சீவ்கபூர், புதிய வகையிலான இந்த கியாஸ் சிலிண்டர் மூலம் வாடிக்கையாளர்கள் மத்தியில் இன்டேன் நிறுவனம் அசைக்க முடியாத நம்பிக்கையை பெற்றுள்ளதாக பாராட்டு தெரிவித்தார்.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இயக்குனர் (மார்க்கெட்டிங்) சதீஷ்குமார், செயல் இயக்குனர் மற்றும் கர்நாடக மாநிலத்தில் தலைமை அதிகாரி குருபிரசாத், செயல் இயக்குனர் (பெருநிறுவன தொடர்பு மற்றும் விளம்பரப்படுத்துதல்) சந்தீப் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.