போஸ்டர் செய்தி

எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் மத்திய குழு ஆய்வு

Spread the love

மதுரை,ஜூன்.10–

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தினை மத்திய குழு மற்றும் ஜப்பான் நிதிக்குழு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததது.

குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு வசதிகளை இக்குழுவினர் கேட்டறிந்தனர்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்ற பிறகு கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28 ந் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அருண் ஜெட்லி தாக்கல் செய்தார்.

இந்தநிலையில் கடந்த ஆண்டு ஜூன் 18ந்தேதி டெல்லியில் இதுதொடர்பாக நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட இருப்பதாக முடிவு செய்து, அதற்கான அறிவிப்பாணையை தமிழக அரசுக்கு, மத்திய அரசு அனுப்பியது.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கு 224.24 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் 750 படுக்கை வசதிகள், ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்ட கட்டமைப்புகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. 100 எம்.பி.பி.எஸ். இடங்கள், 60 செவிலியர்கள் பயிற்சி பெறும் விதமாகவும், படிப்பதற்கான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக மத்திய அரசு 1,264 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. இதைத்தொடர்ந்து மருத்துவமனை அமையும் இடத்தில் கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில் சஞ்சய் ராய் தலைமையிலான மத்திய குழுவும், ஜப்பான் குழுவும் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தது.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் தண்ணீர், மின்சாரம், சாலை வசதி போன்றவைகள் குறித்தும் அங்கிருந்து விமான நிலையம் எவ்வளவு தூரம் உள்ளது என்பது குறித்தும் ஜப்பான் நிதிக்குழுவும் மத்திய குழுவும் ஆய்வு செய்தது.

இந்த ஆய்வின் போது தமிழ்நாடு மருத்துவக்கல்வி இயக்குநரக துணை இயக்குநர் சபீதா, மதுரை அரசு மருத்துவக்கல்லூரி டீன் வனிதா, வட்டாட்சியர் நாகராஜன், வருவாய் ஆய்வாளர் தனபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய மற்றும் ஜப்பான் நிதிக்குழுவினரின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர். தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரக துணை இயக்குநர் சபீதா நிருபர்களிடம் கூறியதாவது:–

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை தமிழக அரசு முழுமையாக ஒப்படைத்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் எந்தவித தொய்வும் இல்லை. இங்கு ஜப்பான் நிதிக்குழு மற்றும் மத்திய குழு இன்று ஆய்வு செய்தது. சாலை, தண்ணீர், மின்சாரம் என அனைத்து வசதிகளும் ஒருங்கே கிடைக்கப்பெற்றது குறித்து ஜப்பான் நிதிக்குழுவினர் சந்தோசமடைந்து பாராட்டு தெரிவித்தனர். எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் இன்னும் சில தினங்களில் தடுப்பு சுற்றுச்சுவர் கட்டும் பணி தொடங்க உள்ளது என்று கூறினார்.

நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி துவங்கியது

எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தேர்வு செய்யப்பட்ட பகுதியான ஆஸ்டின்பட்டி – கரடிக்கல் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆஸ்டின்பட்டி முதல் கரடிக்கல் சாலை எல்லை வரை உள்ள ரோட்டை நான்கு வழிச்சாலையாக மாற்ற திட்டம் தயாரிக்கப்பட்டது. அதற்காக மத்திய சாலை திட்டத்தின் கீழ் 21 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆஸ்டின்பட்டி – கரடிக்கல் இடையே 3.5 கிலோ மீட்டர் தூரம் நான்கு வழிச்சாலையாகவும் 6.4 கிலோ மீட்டர் தூரம் இருவழிச்சாலையாகவும் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு அதற்கான பணிகள் துவங்கி உள்ளது. ஆஸ்டின்பட்டி – கரடிக்கல் இடையே பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு காங்கீரிட் பாலம் அமைப்பதற்காக வானம் தோண்டப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *