செய்திகள்

‘எய்ம்ஸ்’ செல்போன் செயலிக்கான கையேடு: பொன்னையன் வெளியிட்டார்

வளங்களின் இருப்பை பகுப்பாய்வு செய்ய உதவியாக

‘எய்ம்ஸ்’ செல்போன் செயலிக்கான கையேடு: பொன்னையன் வெளியிட்டார்

சென்னை, செப்.15–

திட்டமிடுதலில் தற்போதுள்ள வளங்களின் இருப்புக்கும் தேவைக்கும் இடையேயுள்ள இடைவெளியை அறிந்து பகுப்பாய்வு செய்வது முக்கிய செயல்முறையாகும். இதற்கென மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு (முன்னாள் மாநில திட்டக் குழு) பணிகளில் தரவுகளை நேரடியாக பெற்று ஆய்வு செய்திட வசதியாக எய்ம்ஸ் என்ற கைபேசி செயலியை இன்ஃபோ மேப்ஸ் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இச்செயலிக்கான கையேட்டினை மாநில வளர்ச்சிக்கொள்கை குழு துணைத்தலைவர் சி.பொன்னையன் வெளியிட முதல் நகலை முதன்மை தலைமை வன பாதுகாவலர் பி.துரைராசு பெற்றுக்கொண்டார். மாநில வளர்ச்சிக்கொள்கைக் குழு உறுப்பினர் செயலர் அனில் மேஷ்ராம் இச்செயலியை துவக்கி வைத்தார். இச்செயலியின் செயல்பாடுகளை மாநில வளர்ச்சிக் கொள்கைக்குழு நில பயன்பாட்டு குழுமத்தலைவர் பு.செ. அர்ச்சனா கல்யாணி விவரித்தார்.

இச்செயலியானது நேரடியான கள ஆய்வின் போது ஆய்வுப் பகுதிகளில் உள்ள அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மற்றும் இயற்கை வளங்களை சேகரித்து காட்சிப்படுத்தி தரவுகளை புவித் தகவலமைப்பு தளத்தில் நேரடியாக உள்ளீடு செய்வதுடன் பகுப்பாய்வு செய்து முடிவுகளை வழங்கும். இதன் வழியாக குடியிருப்புகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், பொருளாதாரநிலை ஆகியவற்றை கண்டறிந்து பகுப்பாய்வு செய்ய முடியும். வேளாண்மை, வனவிலங்குகள், மீன் வளம் மற்றும் இயற்கை பேரிடர் சார்ந்த தரவுகளையும் நேரடியாக பெற்று பகுப்பாய்வு செய்து வழங்கும்.

இதன் மூலமாக வேளாண்மை, பொருளாதார முன்னேற்றம், சமுதாய மேம்பாடு மற்றும் மனித வனவிலங்கு மோதல்களை தவிர்த்தல் ஆகிய பணிகளுக்கான தரவுகளை நேரடியாக பெற்று முன்னமே உள்ள இரண்டாம் நிலை தரவுகளையும் இணைத்து பகுப்பாய்வு செய்து முடிவுகளை வழங்கும். மேலும் வளர்ச்சி திட்ட உருவாக்கத்தின் போது சமூக, சூழியியல் மற்றும் பொருளாதார கண்ணோட்டத்தில் சிக்கல்கள் ஏற்படா வண்ணம் முழுமையான தீர்வை கண்டறிய துணை புரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *