வாழ்வியல்

எய்ட்ஸ் உள்ளவர்களின் ஆயுளை நீட்டிக்கும் புதிய ஹெச்.ஐ.வி மருந்து

எய்ட்ஸ் நோயாளியின் உடலில் ஹெச்.ஐ.வி வைரஸ் முதிர்வு அடைந்து பெருகுவதைத் தடுக்கும் மருந்தின் மெய்நிகர் மாதிரியை, (விர்ச்சுவல் மாடல்) உருவாக்கியுள்ளதாக சென்னை ஐஐடியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மருந்து ஹெச்.ஐ.வி வைரஸ் – வைரஸ் தொற்று உள்ளவர்களின் ஆயுளை நீட்டிக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த மருந்து முழுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அதன் வெற்றியை உறுதிப்படுத்த முடியும் என நிபுணர்கள் மாற்றுக் கருத்தை முன்வைக்கின்றனர். 16 ஆண்டு கால ஆய்வுக்குப் பின்னர், மருந்தின் விர்ச்சுவல் மாதிரியை உருவாக்கியுள்ளதாகக் கூறும் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள், மருந்து செயல்பாட்டுக்கு வந்தால் ஹெச்.ஐ.வி நோயாளிகளின் வாழ்நாள் நீட்டிக்கப்படும் என்கிறார்கள்.

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு வாரியத்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள், இதேபோல இதற்கு முன்னதாக வெளியான தடுப்பு மருந்துகள் பலவும் சில காலத்துக்குப் பின் செயல் இழந்துவிட்டன என்கின்றனர்.

இந்த மருந்து முதலில், நோய் தொற்று உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு, மருத்துவ சோதனைக்கு உட்படுத்தபட்ட பின், அதன் செயல்திறனை பொருத்துதான் வெற்றியைத் தீர்மானிக்கமுடியும் என்கிறார்கள் அவர்கள்.

பேராசிரியர் சஞ்சீப், ” இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் அளித்த நிதி மூலம் இந்த ஆய்வு நடைபெற்றது. தொடக்க காலத்தில் பல நாடுகளில் வெளியான தடுப்பு மருந்து ஏன் செயல் இழக்கின்றன என ஆராய்ந்தோம். தடுப்பு மருந்துகள் ஒரு சில ஆண்டுகளில் ஏன் வேலை செய்வதில்லை என்பதற்கு பல காரணிகளைக் கண்டறிந்தோம்.”

”வைரஸ் முதிர்ச்சி அடைவதைத் தடுப்பதில்தான் சிக்கல் இருக்கிறது என்பதைக் கண்டறிந்தோம். இதனைக் கவனித்து, வைரசின் முதிர்ச்சியைத் தடுத்துவிட்டால், பாதிக்கப்பட்ட நபரின் உடலில் அந்த வைரஸ் பெருகுவது குறையும் என்பதை உறுதி செய்தோம்”என்கிறார். தற்போது கண்டறிந்துள்ள மாதிரி மருந்து வடிவம் செயல்பாட்டுக்கு வருவதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டன என்றும் கூறுகிறார் சஞ்சீப்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *