செய்திகள்

எம்.எஸ். வாழ்த்துகிறார்… எழுச்சியுடன் ‘‘மக்கள் குரல்’’!

னது தந்தையார் கார்ட்டூனிஸ்ட் ‘ராகி’ (எ) ராமகிருஷ்ணன் ஒரு தீவிர இடதுசாரி சிந்தனையாளர். எனவே பெரும்பாலும் அத்தகைய தோழர்களிடம் பேசுவதையும் பழகுவதையுமே அவர் விருப்பமாக வைத்திருந்தார்.

சில நேரங்களில் சென்னை அண்ணா சாலையில் அமைந்திருக்கும் சிம்சன் தொழிற்சாலைக்குப் பின்புறம் இருந்த எம்.யூ.ஜே (சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம்) அலுவலகத்துக்கு ராகி செல்வார். அங்கே தோழர்கள் வி. பி. சிந்தன், அரிபட் போன்ற தொழிற்சங்க தலைவர்கள் வருவார்கள்.

மேலும் எம்.சண்முகவேல் (எம்.எஸ்), டி.ஆர்.ராமசாமி (டி.ஆர்.ஆர்.), சோலை, ஜெயகாந்தன், அறந்தை நாராயணன் உட்பட பல இடதுசாரி சிந்தனையாளர்கள் ஒன்று கூடுவார்கள். அங்கே நாட்டு நிலவரங்கள் பற்றிய காரசாரமான கருத்துக்கள் பரிமாறப்படும்.

இப்படி நிகழ்ந்த சந்திப்புகள் 60களின் இறுதியில் அடிக்கடி நிகழ்ந்தன. அன்றிலிருந்து தோழர் எம். சண்முகவேல் ராகிக்கு மிகவும் நெருக்கமானார். பின்னர் சண்முகவேல், டி.ஆர்.ஆர்., சோலை ஆகியோர் தொழிலாளர்களுடன் இணைந்து ஆரம்பித்த “நவமணி ” நாளேடு அன்றைய காலக்கட்டத்தில் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பத்திரிகைகள் விற்கும் அளவுக்கு ‘சர்க்குலேஷன்’ உயர்ந்தது.

பின்னர் சில காரணங்களால் “நவமணி” வெளிவருவது தடைப்பட்டது. அப்போது தான் அப்பத்திரிகையில் வேலை செய்த தொழிலாளர்கள் ஒன்றிணைந்து, எம்.எஸ்., சோலை, டி.ஆர்.ஆர் ஆகியோரை முன்னிறுத்தி 1973 ஆம் ஆண்டில் “மக்கள் குரல்” நாளேட்டினை ஆரம்பித்தார்கள். மிகவும் புதுமையான முறையில் செய்திகளை வெளியிட்டமை, அழகான லே-அவுட், அர்த்தமுள்ள கட்டுரைகள் என்று அந்த நாளேடு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது!

நேற்று ஆரம்பித்தது போல் இருக்கிறது… இப்போது 49 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டது. ‘‘மக்கள்குரலின்’’ 50 ஆவது பொன்விழா ஆண்டு இன்று துவக்கம்.

இந்த குடும்பத்தில் கொஞ்ச காலம் பணியாற்றிய பெருமை எனக்கும் உண்டு. ஆம் 1977ஆம் ஆண்டு “மக்கள் குரலின்’’ சகோதரப் பத்திரிகையாக “அலிபாபா” வார இதழ் உருவானது. அப் பத்திரிகையின் பொறுப்பாசிரியராக இருந்த அறந்தை நாராயணனின் அழைப்பினை ஏற்று நானும் அதில் இணைந்தேன்.

‘லே-அவுட்’ ஓவியராக “அலிபாபா’’வில் சேர்ந்த நான், அதில் படக்கதைகள், கதைப்படங்கள், கார்ட்டூன்கள் என்று எனது இளமைக் காலத்தை அங்கே ஆரம்பித்து திறமையை வளர்த்துக் கொண்டதற்கு இன்றைக்கும் என் மனதில் பெருமையும், வணக்கமும் நிரம்பியிருக்கின்றன. அறந்தையார் என்னை அங்கே சேர்த்தாலும் அதன் பின்னர் எம்.எஸ். தந்த ஊக்கம், பெருந்தன்மை போன்றவை என்னை பண்படுத்தின.

ஒரு முழுமையான பத்திரிக்கையாளர் என்றாலே அது எம்.எஸ். ஆகத்தான் இருக்க முடியும். பணி நேரங்களில் அவர் ஒரு அசுரன் போல செயல்படுவார்! அவர் எழுதும், பேசும் செய்திகளுக்கு தந்த தலைப்புகள், ‘ வால் –- போஸ்டர்களில் ‘ போட்ட தலைப்புகளை பார்த்துவிட்டு மக்கள் குரலை” ஆவலுடன் வாங்கிச் சென்றதை நாங்கள் கண்டு வியந்து இருக்கிறோம்!

ஆனால் தன் பணி அன்று முடிந்ததும், ‘‘ஃபிரஷ் லைம்’’ (குளிர்ந்த எலுமிச்சைச் சாறு) வரவழைத்து நிம்மதியுடன் அருந்தும் எம்.எஸ்.சின் முகத்தில் அப்போது தான் ஒரு வித நிம்மதி தோன்றும்.

‘மக்கள்குரலில்’ நான் பணியாற்றியது 3 ஆண்டுகள் தான்! ஆனால், எம்.எஸ். வழிகாட்டுதலின்படி ‘அலிபாபா’வின் பொறுப்பாசிரியராக அறந்தைக்குப் பிறது வந்த பத்மநாபன் சிறப்பாக பத்திரிகையை நடத்தினார். பொன்னீலன், நீல.பத்மநாபன், போன்ற பல எழுத்தாளர்களின் பாசறை தான் ‘அலிபாபா’!

திருநாவுக்கரசு என்னும் ‘சரஸ்’ தனது ஆரம்பக்கால ஓவியங்களை அரங்கேற்றியது அங்கே தான்! எனது தந்தை ‘ராகி’யும், ஒவ்வொரு அரசியல்வாதியைப் பற்றியும் விமர்சிக்கும் ‘எக்ஸ்–ரே’ என்ற பகுதியை ஆரம்பித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஜீவானந்தம், சித்தரஞ்சன், முத்துக்குமார், தனபால், ராம்ஜீ, குணசேகரன், சுப்பிரமணியன் போன்ற பல அருமையான நண்பர்கள் ‘மக்கள்குரலின்’ தான் எனக்குக் கிடைத்தார்கள்!

இன்றைக்கு எத்தனையோ செய்தித்தாள்கள் போஸ்டர் தலைப்புகளைப் பரபரப்புடன் போடுகின்றன! ஆனால் ‘மக்கள்குரல்’ அன்று ஏற்படுத்திய ‘புரட்சி’யின் தொடர்ச்சி தான் இவை என்பதை எவரும் மறுக்க முடியாது!

இதோ ‘மக்கள்குரல்’ ஆரம்பித்து 50 வருட பொன்விழா இன்று துவக்கம். நம்ப முடியவில்லை என்றாலும் அது தானே உண்மை! ஆசிரியர் ‘எம்.எஸ்.’ பிண்ணிலிருந்து வாழ்த்து கூட்டுக் குடும்பத்தின் தோழர்கள், ‘மக்கள்குரலை’த் தொடர்ந்து வெற்றி நடை போட வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வெற்றி தொடரட்டும் என்று

இதயப்பூர்வமாக வாழ்த்துகிறேன்!

– ஓவியர் ராகி.பாரி

Leave a Reply

Your email address will not be published.