செய்திகள்

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மனு : விசாரணையை வீடியோவில் லைவ் செய்த இளைஞர் கைது

Makkal Kural Official

கரூர், ஜூலை 6–

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை கரூர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தபோது, அதனை வாட்ஸ்ஆப் மூலம் லைவ் வீடியோ அனுப்பிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போலியான ஆவணம் கொடுத்து அபகரித்துக் கொண்டார் என, கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ், கரூர் நகர காவல் நிலையத்தில், கடந்த மாதம் புகார் அளித்தார். இந்நிலையில், தன்மீது இப்படி ஒரு புகார் கொடுக்கப்பட இருப்பதை உணர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவானார். அதோடு, இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களும் தலைமறைவானார்கள்.

இந்தச் சூழலில் கடந்த 12ஆம் தேதி கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்திருந்தார். 3 முறை இந்த மனு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கடந்த 25-ஆம் தேதி முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு தற்போது சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லைவ் செய்த இளைஞர்

இதனையடுத்து வாங்கல் காவல் நிலையத்தில் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் உள்ளிட்டோர் மீது மீது 6 பிரிவுகளில் வாங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது தமிழினியன் (வயது 29) என்ற இளைஞர், நீதிமன்றத்தில் நடந்த விவாதங்களை, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் உறவினருக்கு வாட்ஸ்ஆப் மூலம் லைவ் வீடியோ அனுப்பிக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து தமிழினியனை பிடித்து மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் முன்பு ஆஜர்படுத்தினர். பின்னர் அந்த இளைஞரை காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, தமிழினியனை தாந்தோன்றிமலை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *