செய்திகள்

எம்ஜிஎம் மாறனுக்கு சொந்தமான ரூ.216 கோடி: சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை

சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ய மறுப்பு

சென்னை, டிச. 20–

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் தொழிலதிபர் எம்.ஜி.எம். மாறனுக்கு சொந்தமான 216 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை உத்தரவை எதிர்த்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சென்னையை சேர்ந்த தொழிலதிபரும், தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவருமான நேசமணி மாறன் முத்து என்ற எம்.ஜி.எம். மாறன், கடந்த 2005-2006 மற்றும் 2006-2007 ஆகிய நிதியாண்டுகளில் சிங்கப்பூரில் உள்ள இரு நிறுவனங்களில் சிங்கப்பூர் டாலராக, 5 கோடியே 29 லட்சத்து 86,250 முதலீடு செய்தார்.

அந்நிய செலாவணி மேலாண்மை சட்டப்படி, இந்தியாவில் வசிக்கும் ஒருவர், இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி, வெளிநாட்டில் சொத்துகளைப் பெற்றாலோ அல்லது இந்தியாவுக்கு வெளியே முதலீடு செய்தாலோ அவரது இந்தியச் சொத்தை பறிமுதல் செய்யும் அதிகாரம் அமலாக்கத் துறைக்கு உள்ளது.

முடக்கிய அமலாக்கத்துறை

இந்திய ரிசா்வ் வங்கியிடம் அனுமதி பெறாமல் சிங்கப்பூர் நிறுவனங்களில் எம்.ஜி.எம். மாறன் முதலீடு செய்துள்ளதாகவும், இது அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் மோசடி என அவருக்கு சொந்தமான சுமார் 216.40 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.

அனுமதி பெறாமல் வெளிநாட்டில் மூதலீடு செய்ததன் அடிப்படையிலேயே மாறனுக்கு சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கியதாக அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்தும் முடக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.ஜி.எம் மாறன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என். ரமேஷ், மோசடிக்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளதாகவும், மனுதாரர் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் புலன் விசாரணை இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதிகள், அமலாக்கத்துறையால் நடத்தப்படும் விசாரணையில் முட்டுக்கட்டை போட முடியாது என்றும், மனுதரார் அவரின் தரப்பு அனைத்து ஆதார ஆவணங்களுடனும் அமலாக்கத்துறையிடம் தங்கள் விளக்கத்தை சமர்ப்பிக்கலாம் என கூறி முடக்கத்தை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *