சிறுகதை

எம்ஜிஆர் ஷீல்டு | ராஜா செல்லமுத்து

ஜெயப்பிரகாஷ் வீட்டு அலமாரியில் எம்ஜிஆர் படத்துடன் கூடிய அந்த கேடயத்தை கவனித்த சரவணன் ஜெயபிரகாஷிடம் கேட்டு விட்டான்

சார் 1986 – இந்த வருஷம் நீங்க பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வாங்கி இருக்கீங்க .எவ்வளவு பெரிய விஷயம். அதுவும் இவ்வளவு பெரிய ஷீல்டு. பெரிய விஷயம் சார். நீங்க பரிசு வாங்கும்போது யார் யார் கூட இருந்தாங்க. இந்த பரிசு யார் கொடுத்தது என்று சரவணன் வியப்பாக கேட்டபோது அந்த எம்ஜிஆர் படம் போட்ட பெரிய கேடயத்தைப் பார்த்த ஜெயபிரகாஷ் ஒரே பார்வையில் 1986ம் வருடத்திற்கு பறந்தார்

அவர் முகத்தில் புன்னகை முகாமிட்டிருந்தது . அவர் சிரிப்பில் சந்தோசம் தெரிந்தது.

இந்த ஷீல்ட்டை பார்க்கும்போதெல்லாம், எனக்கு ரொம்ப வியப்பா இருக்கும் . என்னுடைய சின்ன வயசு ஞாபகம். என்னுடைய கல்லூரி கால ஞாபகம் என்னோட மனசுக்குள்ள வந்துரும். அந்த வருஷம் பேச்சுப் போட்டியில முதல் பரிசு வாங்கின என்ன முதல் வரிசையில் உட்கார வச்சிருந்தாங்க. அந்த வருடம் சினிமா துறையில் ஜெயித்த பிரபலமானவங்களும் வந்தாங்க. அப்போ நான் எம்.ஏ., முதல் வருஷம் படிச்சிட்டு இருக்கேன். ரொம்ப பிரமிப்பா இருந்தது. அந்தக் கூட்டத்திலேயே நான்தான் சின்ன பையன். பெரிய பெரிய ஜாம்பவான்களுக்கு மத்தியில நான் அமர்ந்து இருந்தத பார்க்கும்போது, எனக்கே பெருமையா இருந்தது

இந்தப் பெருமையை சினிமா துறையை தொழில்துறை சார்ந்த பெரிய மனுஷங்க உட்கார்ந்திருக்கிற அதே வரிசையில் நானும் உட்கார்ந்து இருக்கிற அந்தத் தகுதி எனக்கு வாங்கி கொடுத்தது தமிழ் தான். அப்படி நினைக்கும் போது ரொம்பவே எனக்கு ஒரு பிரமிப்பை ஏற்படுத்துச்சு.. அதைவிட இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா, இந்த ஷீல்டு கொடுத்தவர் மக்கள் திலகம் எம் ஜி ராமச்சந்திரன் அவர்கள்தான் இந்த ஷீல்டை கொடுத்தார்

அந்த வயசுல, அவ்வளவு பெரிய மாமனிதரிடம் அந்த ஷீல்டு வாங்கும்போது, எனக்கு உச்சி குளிர்ந்து போச்சு. மேடையில என் பெயரைச் சொல்லி கூப்பிட்டதும் என்னையே மறைக்கிற அளவுக்கு எம்ஜிஆர் படம் போட்ட ஷீல்டு கொடுத்தாங்க. அத வாங்கிட்டு கீழே இறங்கவும் ,என்னோட காலேஜ் பையன்கள் காலேஜ் பிரெண்ட்ஸ் எல்லாரும் என்னை அவ்வளவு சந்தோஷமா கட்டிப்புடிச்சு, கைகொடுத்து ரொம்ப பெருமையா பேசினாங்க. ஏதோ பெரிய சாதனை செஞ்சிட்டம் அப்படிங்கற நினைப்பு எனக்குள்ள ஓடிட்டு இருந்துச்சு.

இந்த ஷீல்டு எனக்குள்ள ஒரு பெரிய உத்வேகத்தை ஏற்படுத்துச்சுன்னு சொல்லலாம். விழா முடிஞ்சுச்சு.

இந்த ஷீல்ட எடுத்துட்டு, நான் பஸ்ல போக முடியாது. பஸ்ல பயங்கர கூட்டம் இருக்கும். ஏதாவது உடைஞ்சு போய்ரும். நிக்க முடியாது .கஷ்டமா இருக்குன்னு நினைச்சேன்.

ஆட்டோல போகலாம்ன்னு முடிவு பண்ணினேன். அப்போ என்ன பார்த்த ஒரு ஆட்டோக்காரர் நான் கூப்பிடாமல

அவரு என்ன ஆட்டோல ஏத்திட்டார். எங்க போகணும்னு மட்டும்தான் கேட்டாரு. நான் என்னோட வீட்டு அட்ரஸ் சொன்னேன். அந்த ஆட்டோவில எம்ஜிஆரை பற்றிய நினைவுகளையும் எம்ஜிஆரை பற்றிய செய்திகளையும் அந்த ஆட்டோக்காரர் சொல்லிட்டே வந்தார்.

அந்த சின்ன வயசுல இருந்தே எனக்கு எம்ஜிஆரை பற்றியான அவ்வளவா தெரியாம இருந்துச்சு. ஆனா,அந்த ஆட்டோக்காரர் சொல்லச் சொல்ல அவர் மேல இன்னும் மரியாதை கூடுச்சு. என்னோட வீடு வந்தது. நாஆட்டோ விட்டு கீழே இறங்கினேன். ஆட்டோகாரட்ட எவ்வளவு வேணுங்க அப்படின்னு நான் கேட்டேன்.

ஆனா, அவர் என்ன பார்த்து சிரிச்சுட்டு

என்ன தம்பி, இப்படி கேட்டுட்ட? நம்ம வாத்தியார் படம் போட்ட கேடயத்தை கொண்டு வந்திருக்கிற, அப்படிப்பட்ட ஆள நான் ஏத்திட்டு வந்து இருக்கிறேன். உன் கிட்ட போய் நான் காசு கேட்டா, எப்படி தம்பி. வேண்டாம் . ஆட்டோல வந்தது என் தலைவன் படம் போட்ட கேடயத்தை தூக்கிட்டு நீ ஆட்டோல வந்தது, என் தலைவன நீ கூட்டிட்டு வர்றது, மாதிரி இருந்துச்சு. ரொம்ப நன்றி தம்பி என்று என்னை தட்டிக் கொடுத்துவிட்டு,

அந்த ஆட்டோக்காரர் சென்றார். ஜெயப்பிரகாசுக்கு நிலை கொள்ளவில்லை. ஒரு மனிதன் இவ்வளவு பெரிய மரியாதையை மக்களிடம் எப்படி சம்பாதித்திருக்கிறார். வியப்பு மேலிட்டது.

அந்த ஆட்டோ ஓட்டுனர் ஒன்றும் பெரிய பணக்காரர் இல்லை. ஆனால், அவருடைய மனதிலும் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய எம்ஜிஆரை நினைத்து, ஜெயப்பிரகாஷ்க்கு பிரமிப்பு மேலிட்டது .

எம்ஜிஆர் படம் போட்ட கேடயம் பற்றி ஜெயபிரகாஷ் சொன்னபோது, இப்படியும் ஒரு மனிதரா? என்று

அந்த ஆளுயர எம்ஜிஆர் படம் பொறித்த கேடயம் சரவணனுக்கும் வியப்பைத் தந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *