செய்திகள்

எமர்ஜென்சி காலத்தில் மன்னிப்பு கடிதம் எழுதியவர்கள் ஆர்எஸ்எஸ் தலைவர்கள்

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி சாடல்

டெல்லி, ஜூன் 26–

அவசர நிலை காலத்தில், ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்டோர் இந்திரா காந்திக்கு மன்னிப்பு கடிதங்களை எழுதியவர்கள் என பாரதீய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி நாட்டில் இந்திரா காந்தி அவசரநிலையை பிரகடனம் செய்தார். ஒட்டுமொத்த ஜனநாயகமும் காலில் மிதிக்கப்பட்டு தலைவர்கள் அடக்குமுறைகளை எதிர்கொண்டனர். எமர்ஜென்சியை எதிர்த்ததால், தமிழ்நாட்டில் 1976-ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எண்ணற்ற தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைகளை எதிர்கொண்டனர்.

இந்த அவசர நிலை காலத்தை நினைவு கூர்ந்து பிரதமர் மோடி தமது டுவிட்டர் பக்கத்தில், அவசர நிலையை எதிர்த்துப் போராடி, நமது ஜனநாயக உணர்வை வலுப்படுத்துவதற்காகப் பாடுபட்ட துணிச்சல் மிக்க தலைவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். ஜனநாயகத்தின் கறுப்பு நாட்கள் (#DarkDaysOfEmergency) என்பது நமது வரலாற்றில் மறக்க முடியாத காலகட்டமாக உள்ளது. நமது அரசியலமைப்புச் சட்டம் கொண்டாடும் மதிப்புகளுக்கு அது முற்றிலும் எதிரானது என மோடி பதிவிட்டிருந்தார்.

அம்பலப்படுத்திய சு.சாமி

ஆனால் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவராக இருக்கும் டாக்டர் சுப்பிரமணியசாமி 23 ஆண்டுகளுக்கு முன்னர் தி இந்து, பிரண்ட்லைன் இதழ்களில் அவசர நிலை காலத்தில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் செயல்பட்ட விதம் குறித்து எழுதி இருந்ததாவது:–

1975-77 ஆம் ஆண்டு காலத்தில் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் பெரும்பாலான தலைவர்கள் அவசரநிலை பிரகடனத்துக்கு எதிரான போராட்டத்தை காட்டிக் கொடுத்த துரோகிகளாகத்தான் இருந்தார்கள். மகாராஷ்டிராவின் புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் தலைவர் பாலாசாகேப் தியோரஸ், இந்திரா காந்திக்கு எண்ணற்ற மன்னிப்பு கடிதங்களை அனுப்பியிருந்தார். அக்கடிதத்தில் ஜெய்பிரகாஷ் நாராயணுடன் ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் இணைந்து செயல்படாது; இந்திரா காந்தியின் 20 அம்ச திட்டத்தை ஆதரிக்கிறோம் எனவும் தியோரஸ் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அப்போது இந்திரா காந்தி ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவரான வாஜ்பாய் பங்கேற்கவில்லை. இதற்கு வாஜ்பாய் எழுதித் தந்த மன்னிப்பு கடிதம்தான் எனவும் குறிப்பிட்டிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி. மேலும் மகாராஷ்டிரா மாநில சட்டசபை குறிப்புகளில் இப்படி எழுதப்பட்டிருக்கிறது எனவும் சுப்பிரமணியசாமி பதிவு செய்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *