சிறுகதை

எப்படி எதிர்கொள்வது : மு.வெ.சம்பத்

கண்ணனும் ரங்கனும் சிறு வயது முதலே நண்பர்கள். இருவருக்கும் ஒரே நாளில் திருமணம் நடந்தது.

தற்போது இருவரும் தங்களது பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டனர்.

தினமும் மாலை நடைப்பயணம் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டனர். நடைப்பயணம் முடிந்ததும் இருவரும் பல தரப்பட்ட விஷயங்கள் பற்றி பேசுவார்கள்.

நாளாக நாளாக இவர்களுடன் இன்னும் இரண்டு பேர்கள் சேர்ந்து கொண்டனர். நடைப் பயணம் மிகவும் இனிமையாகவே சென்றது.

யாராவது ஒருவர் அன்று வரவில்லையென்றால் அவர் கூறிய கருத்துக்கள் அவர்களுக்குள் அலையாய் சுற்றி வருவது வாடிக்கை. அங்குள்ள சில இளைஞர்கள் இவர்களைப் பார்த்து என்ன ஆனந்தமாக இந்தப் பெரிசுகள் செட்டு சேர்ந்து வாழ்க்கையை அனுபவிக்கின்றது என்று இவர்கள் காது படவே கூறுவார்கள்.

அன்று வந்த ரங்கன் மிகவும் சோகமாக இருந்ததைக் கண்ட கண்ணன் என்ன மனதில் நிறைய விஷயங்கள் ஓடுகிறதோ, இந்த வயதில் மிகவும் யோசித்தால் நல்ல எதிர்பார்த்த பலன் கிடைக்காது என்றதும், ரங்கன் வயதானால் அதிக நாட்கள் இருக்கக் கூடாது, ஜடமாக வாழ எனக்கு விருப்பமில்லை என்றார். இதைக் கேட்ட கண்ணன் நாம் நமது வாழ்க்கையில் மட்டுமே ஆழ்ந்து இருக்கிறோம். அடுத்து நடக்கப் போவதைப் பற்றி நாம் நினைப்பதில்லை. அடுத்தவர் வாழ்க்கையை மேலோட்டமாகத் தான் பார்க்கிறோம்.

நமக்கு வரும் பிரச்னையே பெரிதென நினைக்கும் நாம் அடுத்தவருக்கும் பிரச்னை இருக்குமென நினைப்பதில்லை. மற்றவர் உயர்நிலையை மட்டும் பார்க்கும் நாம் அவர்கள் அதையடைய சந்தித்த கஷ்டங்களை அறிய முனைவதில்லை. நாம் நம் குணத்தை அடுத்தவர் குணங்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. அடுத்தவருக்கு கூறும் அறிவுரைகளின்படி நாம் நடக்கிறோமோ என்று நம்மை நாம் சோதிப்பதில்லை. அமைதியையும் கோபமின்மையும் கடைபிடித்தால் மனிதனுக்கு எல்லா இடமும் சுவர்க்கமே என்று ஒரு அறிஞன் கூறிய வார்த்தையை படித்ததுமில்லை. ஆயிரம் கவலைகள் எதிர் கொண்டாலும் அஞ்சாமல் தீர்வு கண்டு முன்னேறுபவனின் வாழ்க்கையே சிறப்பாக அமைகிறது என்பதில் ஐயமில்லை. நாம் அதை செய்கிறோமா இல்லையே. நம்மிடம் இல்லாத ஒன்றைத் தேடி பெறுவது தான் ஆனந்தம் என நினைக்கிறோம், நம்மிடம் இருப்பதைக் கொண்டு பெருமிதம் அடைவதில்லை. ஒருவருக்கொருவர் புரிந்து நடந்தால் நிறைய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைத்து விடும். ஒருவருக்கொருவர் எல்லா காலங்களிலும் உதவிட தயாராக இருந்தால் நிறைய விஷயங்கள் சாதிக்கலாம். நாம் அதற்கு முனைவதில்லை. நாம் நம்மால் உருவாக்கப்பட்ட சாதி, மதக் கொள்கைகயில் ஊறி தற்போது அழிந்து கொண்டிருக்கிறோம். ஒருவருக்கு மரியாதை கூடுவதும் குறைவதும் அவரைப் பற்றிய உண்மைகள் வெளி வரும் போது தான் வெளிப்படும். நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் நாம் நம்மை மறந்து விடுவோம். நடந்த சில எதிர் மறைவு எண்ணங்களையே நினைத்திருந்தால் என்றும் அமைதியில்லை என நாம் உணர்வதில்லை. வீட்டில் எடுக்கும் பல விஷயங்களில் தன்னைக் கலப்பதில்லை என்ற ஆதங்கத்தை முதலில் தூக்கியெறிய வேண்டும். முடிவு நல்ல படியாக அமைந்தால் நலமெனக் கொள்ள வேண்டும். செய்யும் காரியங்களில் ஏதாவது குறை சொன்னால் பதில் கூறாமல் அவர்கள் விருப்பத்திற்கேற்ற மாதிரி செய்ய நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். நாம் பணிக் காலத்தில் வகுத்த பதவிகள், நம்மைச் சுற்றி வந்த மக்கள் பற்றி தற்போது நினைப்பதில் அர்த்தமில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும். இந்தக் காலக் கட்டத்தில் ருசிக்குச் சாப்பிடாமல் உடம்பை பேணிக் காக்க சாப்பிட வேண்டும். உடலில் ஏதும் அடிபடதாவாறு பார்த்து நிதானமாக செயல்பட வேண்டிய கால கட்டமிது. வீட்டிற்குள் தனிமையாக விடப்பட்டோமென எண்ணாமல் நமக்கு என்று சில வேலைகளை எடுத்துக் கொண்டு அதில் கவனம் செலுத்த வேண்டும். காலை மாலை இரு வேளையும் முடிந்தால் நடைப் பயணம் மேற்கொண்டால் நலம். இல்லையெனில் ஒரு வேளையாவது நடைப்பயணம் மேற்கொள்ளுவது முக்கியம். சிறு சிறு உடற்பயிற்சிகள் உடலை திடமாக வைத்திருக்க உதவும். நல்ல சிறு கதைகள், இலக்கியங்கள், பக்தி நூல்கள் படிப்பது மனதில் ஏற்படும் இறுக்கத்தைக் குறைக்க வழி செய்யும். மருத்துவ சம்பந்தமான சந்தேகங்களை தங்கள் குடும்ப மருத்துவர்மூலம் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். அடிக்கடி கோபப் படாமல் மனதை திசை திருப்பி மகிழ்ச்சியான நிலைக்கு எடுத்துச் செல்லவதில் முனைந்தால் நலம். நட்பு வட்டம் குறைந்ததென வருந்தாமல் இருக்கும் நட்பு வளையத்தைக் கொண்டு மன அமைதியடைய வேண்டும். ஏதாவது சுப நிகழ்வுகளுக்குச் சென்றால் அங்கு வந்தவர்களுடன் சந்தோஷமாக கலந்து சில மகிழ்வான நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளுதல், கேலி கிண்டல் அங்கு நடந்தால் அதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுதல், வருங்கால சந்ததியினர் வந்து பேசினால் உறவு முறையை பலப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ளுதல், இளைஞர்களிடமிருந்து நவீன தொழிற்வளர்ச்சியைப் பற்றி அறிந்து கொள்ளுதல் வந்திருந்தவர்களுடன் அமர்ந்து உணவு உண்ணுதல் நிச்சயம் ஒரு மாற்றத்தைக் கொடுக்கும் என்பது நிதர்சனம். நாட்டில் நிலவும் சில ஆபத்தான நிகழ்வுகள் பற்றியும் அங்கு வந்துள்ள படித்தவர்களிடம் கலந்து வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும். யாராவது யாரைப் பற்றி தவறாகப் பேசினால், அந்தப் பேச்சைத் தவிர்த்து விடுங்கள் அல்லது அந்த இடத்தை விட்டு அகன்று விடுங்கள். வீட்டில் குழந்தைகளுடன் அவர்களுக்குச் சமமாக பழக ஆரம்பித்தால் அவர்கள் எப்போதும் உங்கள் பக்கம் சாய்ந்து விடுவார்கள். அவர்கள் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி அளவிட முடியாதது ஆகும். உங்களுக்கு ஏதாவது உடலில் அசௌகரியம் ஏற்பட்டால் வீட்டில் உடனே உங்களுக்கு உதவுபவர்களிடகூறுங்கள். சம்பாதித்த பணத்தில் ஒரு தொகையை கணக்கிட்டு உங்கள் காலத்திற்கு பிறகு உங்கள் காரியத்திற்கு பயன்படும்படி சேமித்து வையுங்கள். ஏதாவது பிரச்னையென்றால் உடனே தீர்வை நோக்கிச் செல்வதே சாலச் சிறந்தது. யாருக்குத் தான் பிரச்னையில்லை. எல்லோரும் ஒரு வகையில் ஏதோ ஒரு பிரச்னையில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

வாழ்க்கையில் மகிழ்ச்சி எட்டும் தூரத்தில் உள்ளது நாம் தான் விலகியிருக்கிறோம். பாரதியார் நிறைய பிரச்னைகளுக்கு நடுவிலும் காக்கை குருவிகளுக்கு உணவு கொடுத்து அவைகள் உண்ணும் அழகில் மகிழ்ந்து தனது மனதை திடப் படுத்திக் கொள்வாராம் என்று கண்ணன் சொன்னதும், ரங்கன் சிறிது மகிழ்வுடன் நன்றியெனக் கூறி விடை பெற்றார்.

அடுத்தடுத்த நாட்களில் ரங்கனின் போக்கில் ஒரு மாற்றம் ஏற்பட்டதைக் கண்ட கண்ணன் நாமும் நாம் சொன்னதற்கேற்ப நடக்க வேண்டுமென முடிவு செய்தார். அப்போது கண்ணன் நண்பர் வந்து ரங்கன் கொடுத்ததாக ஒரு கடிதத்தை நீட்டினார். அதைப் படித்த கண்ணன் ரங்கன் குறிப்பிட்டிருந்த விலாசத்தில் சென்ற போது அங்கு வாயிலில் ஒரு பலகையைக் கண்டார். அதில் வயோதிகர் ஆலோசனை மையம் என்று எழுதியிருந்தது. அங்கே நாலைந்து வயதானவர்கள் அமர்ந்திருந்தனர். உடனே உள்ளே சென்ற கண்ணன் அங்கு ரங்கனைக் கண்டார். ரங்கன் மிகவும் இன்முகத்துடன் வரவேற்று உனது அறிவுரை எப்படி செயல் பாட்டிற்கு வந்துள்ளது பார்த்தாயா என்றதும், கண்ணன் நீ வாழக் கற்றுக் கொண்டாய் என்றார். அங்கிருந்த ஒரு பேப்பரில் கண்ணண் கூறிய வாசகங்கள் எழுதியிருந்தன, உள்ளே உள்ள பலகையில் இந்த மையத்திற்கு வித்திட்டவர் கண்ணன் என்று எழுதியிருந்ததைக் கண்ட கண்ணண் சமுதாயச் சிந்தனை எதிலிருந்தும் தோன்றலாம் என மனதிற்குள் நினைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.