‘‘டீ, பிஸ்கெட்டுடன் காத்திருக்கிறேன்’’
புதுடெல்லி, ஆக. 2–
தன் மீது அமலாக்கத்துறையை ஏவி விட மத்திய அரசு சதித் திட்டம் தீட்டியிருப்பதாக எதிர்கட்சி தலைவர் ராகுல் புகார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ராகுல்காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–
‘‘பாராளுமன்றத்தில் சக்கர வியூகம் குறித்த எனது பேச்சு சிலருக்குப் பிடிக்கவில்லை. பட்ஜெட் கூட்டத்தில் இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகள், பழங்குடி நலன் தொடர்பான திட்டங்கள் ஏதுமில்லை என்றும் எடுத்துரைத்தேன். இது மத்திய அரசுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே எனது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஆகையால் அமலாக்கத்துறையினரின் வருகைக்காகத் திறந்த கரங்களுடனும், தேனீர் மற்றும் பிஸ்கட்டுடன் காத்திருக்கிறேன்’’.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் பாரதீய ஜனதா கட்சி தரப்பில் இது மறுக்கப்பட்டுள்ளது. இது ஆதாரமற்றது என்று கூறியுள்ளது.
மக்களவை எதிர்க் கட்சித் தலைவராக ஆனது முதல் நாடாளுமன்றத்தில் ராகுல் பேச்சு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஜூலை 29ம் தேதி நடந்த பட்ஜெட் மீதான விவாதத்தின்போது ராகுல் காந்தி பேசுகையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு குருஷேத்திரத்தில் அபிமன்யூ என்ற இளம் வீரர் 6 பேர் கொண்ட சக்கர வியூகத்தால் கொல்லப்பட்டான். சக்கர வியூகம் என்பது வன்முறையும், பயமும் நிரம்பியது. தாமரை போன்று இருப்பதால் சக்கர வியூகத்தை பத்ம வியூகம் என்றும் சொல்வதுண்டு. இந்த 21-ம் நூற்றாண்டிலும், இதேபோன்ற சக்கர வியூகம் உருவாக்கப்பட்டுள்ளது. அதுவும் தாமரை வடிவில் உள்ளது. அதை பிரதமர் மோடி தனது நெஞ்சில் தாங்கி உள்ளார் என்று விமர்சித்தார்..
‘‘அன்று சக்கர வியூகத்தை கொண்டு அபிமன்யூவை என்ன செய்தார்களோ அதையே இன்று இந்தியாவுக்கும், இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும், சிறு, நடுத்தர தொழில்களுக்கும் செய்கிறார்கள். இந்த சக்கர வியூகத்தின் மையத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா, மோகன்பகவத், அஜித்தோவல், அம்பானி, அதானி ஆகிய 6 பேர் உள்ளனர் என்று கூறினார்’’.
அவரது இந்தப் பேச்சுக்கு பாஜக எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் சக்கர வியூகம் பற்றிய தனது பேச்சுக்காக அமலாக்கத்துறை தனது வீட்டில் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக ராகுல்காந்தி தனது சமுக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.