அத்தனை சீக்கிரத்தில் கவிப்ரியனால் பெண்களுடன் பேச முடிவதில்லை .அத்தனை சீக்கிரம் பெண்களுடன் சிரிக்க முடிவதில்லை .தொடும் தூரத்தில் பெண்கள் இருந்தாலும் அவனால் உறவாட முடியவில்லை.இது சாபத்தின் வரமா? இல்லை வரத்தின் சாபமா? என்பது அவனுக்கே தெரியவில்லை. பெண்களுடனான நட்பு என்றால் அவனுக்கு வேப்பங்காயாய் கசக்கிறது. இது என்னவென்று அவனுக்குப் புரியவில்லை..
பெண் வாசமற்ற அவன் இதயத்திற்குள் தேவதையாய் நுழைந்தாள் ஒருத்தி. அவள் வரும் வரையில் வெறுமையாக இருந்த அவன் மன வானத்தில் இன்று கோடி கோடி நட்சத்திரங்கள் விரிந்து பரந்து ஒளி வெள்ளத்தில் அழகாய் ஒரு முழு நிலா. அவளுடன் பேசும்போது அவனுக்கு சிறகுகள் முளைப்பதாய் நினைத்தான். அவளுடன் சிரிக்கும்போது ஆகாயத்தில் மிதந்து திரிகிறான். தேவதைக்கு என்ன பெயர் வைக்கலாம் ? தேவதைக்கு தேவதை என்றே பெயர் வைக்கலாம் .
அந்தத் தேவதை அவனுக்குள் ஆனந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தினாள். இரவு முழுவதும் அவள் குரலால் நிறைந்தது. விடிந்ததும் அவளின் குரலால் பொழுது மலர்ந்தது.
பெண் வாசனையே இல்லாத அவனுக்குள் அவளின் உராய்வு ஒரு நயாகராவை உருவாக்கியது. ஒரு பூந்தோட்டத்துக்குள் போய் வந்த ஆனந்தம். பூப்போன்ற அந்தப் பெண்ணை கவிப்ரியன் ரொம்பவே காயப்படுத்தி இருக்கிறான். அவன் என்ன பேசுகிறான் ? எப்படிப் பேசுகிறான்? எதற்காகப் பேசுகிறான்? என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது .
சில நேரங்களில் பூவாய். சில நேரங்களில் முள்ளாய். சில நேரங்களில் காயாய் சில நேரங்களில் சருகாய் . ஆனால் , கவிப்ரியன் கடிந்து பேசும்போது, நிறைந்து சிரிப்பாள்; கோபமாகப் பார்க்கும்போது கனிவாகத் தலை கோதுவாள். இவளை எந்த வகையில் சேர்ப்பது? வேறொரு பெண்ணாக இருந்தால் அவனைப் போடா இவனே ? என்று அன்றே உதறி விட்டுச் சென்றிருப்பாள்.
இவளை அடைந்ததற்கு நான் என்ன தவம் செய்திருக்க வேண்டும்? அந்தத் தேவதை சிறுவயதில் இருந்து அறிமுகமா… இல்லை? கல்லூரியில் அறிமுகமா…. இல்லை? ஏதோ ஒரு திருப்பத்தில் அறிமுகமாகி, அவன் வாழ்க்கையின் திசையையே திருப்பி வைத்திருக்கிறாள். அவளை எவ்வளவோ காயப்படுத்தி இருக்கிறான் கவிப்ரியன்.
ஆனால் அவள் ஒரு நாள் கூட அவனைக் கஷ்டப் படுத்தியதில்லை. சிரித்துக் கொண்டே கடந்து செல்லும் இந்தப் பிம்பத்தை அவள் எப்படி வைத்திருக்கிறாள்? என்பது அவனுக்கே தெரியாது. எத்தனை கோபம் வந்தாலும் அத்தனையும் இயல்பாக துடைத்துவிட்டு, மறுநாள் காலை புத்தம் புதுப் பூ போல அவனுடன் பேசுவாள். அவனுக்கே அது அவமானமாக இருக்கும்.
என்ன என்ன பிறவியில் பிறந்திருக்கிறேன்? ஏன் எனக்கு இதுபோன்ற சிந்தனை வருகிறது? என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது. ஒரு வேளை தாயில்லாமல் வளர்ந்த காரணத்தினால் அன்பு என்றால் என்னவென்று தெரியாத வயதில் அன்னையை இழந்த அந்த சிறுவயதிலிருந்து பாசம் என்பதை பறிகொடுத்து விட்டு அன்பிற்கு அலையும் ஒரு அபலையாக திரிந்ததால் அவனுக்குள் அப்படி ஏற்பட்ட விரக்தியா ? என்பது கவிப்ரியனுக்குத் தெரியாது.
இயல்பாக அவனால் இருக்க முடியவில்லை .எதற்கு இந்த வேதனை, விரக்தி சூழ்ந்து இருக்கும் இந்த உலகத்தில் அவனுக்கான இன்ப நாட்களை எப்போது அவன் காணப் போகிறான் ? தொடரும் தோல்விகளை எது வந்து அவனுக்கு ஈடுகட்டும் .நடந்து செல்லும் பாதை எங்கும் கடந்து வந்த பாதைகள் முழுவதும் கண்ணீர். இந்தச் சென்னை மாநகரம் அவனுக்கு என்ன சொல்லித் தந்திருக்கிறது? எதற்காக இங்கு வந்தான்? என்று கேள்விகள் எல்லாம் அவனைத் துளைத்துத் துளைத்து எலும்புக்கூடாய் ஆனது தான் மிச்சம் . ஆனால் அவன் தேவதை மட்டும் இருந்தால் போதும். இந்த தேசம் அல்ல எந்த தேசத்தையும் ஜெயித்து விடுவான் என்ற ஒரு சந்தோஷம் அவனுக்குள் இருந்தது. ஆனால் எப்போதும் போல சிரித்துப் பேசி மகிழ்ந்திருக்கும் நேரத்தில் விக்கிரமாதித்தன் தோளை விட்டு இறங்காத வேதாளமாய் மறுபடியும் தேவதையைப் பேசியே திணற வைத்தான்.
ஏன் இப்படி பேசுறீங்க? இது தவறில்லையா? என்று அவள் கேட்டாலும் வாய் வழியாக வரும் வார்த்தைகளை அவனால் எந்த தடுப்பு கொண்டும் தடுக்க முடியவில்லை. முல்லை நதியாய் வாயை விட்டு வழுக்கி விழுந்தன சொற்கள்.
பேசும் போது தெரியாத அந்த வலி பேசி முடித்து உணரும்போது தான் ரணமாய் இருக்கிறது அவனுக்கு. பேசிய அவனுக்கே இப்படி இருந்தால் ? கேட்ட அவளுக்கு எப்படி இருக்கும்? இதை மாற்றிக் கொள்வதற்கு அவன் முயற்சி செய்கிறான். தியானம் செய்யலாம் என்று கண் மூடினால் அவன் உலகம் முழுவதும் அந்த தேவதையே தான் தெரிகிறாள். கோயிலுக்கு சென்று அமைதியைத் தேடலாம் என்றால் கருவறையில் இருந்து நடைபாதை வரை அந்த தேவதையே நிறைந்து நிற்கிறாள். அப்படி என்றால் அந்த அன்பின் அடி மனதில் குழிதோண்டி அவள் அவனுள் விதையாய் விழுந்திருக்கிறாள் என்பது மட்டும் தெரிந்தது .
எந்தப் பெண்ணையும் பிடிக்காத அவனுக்கு அந்தத் தேவதை மட்டும் எப்படி பிடித்தது? அவள் அன்பில் அன்னை தெரசாவா? ஆனால் அவளை கவிப்ரியன் நிறையக் காயப்படுத்தி இருக்கிறான். ஆனால், அவள் ஒருநாள் கூட அவனைத் திட்டியதில்லை. பேசிவிட்டு நிதானமாக என்ன பேசினான் ? என்று யோசித்துப் பார்க்கும்போது அவனுக்கே கேவலமாக இருக்கும் .இவ்வளவா பேசியிருக்கிறோம். இனியும் அவள் நம்முடன் பேச மாட்டாள். வேறொருவராக இருந்தால் தொடர்பைத் துண்டித்து தொலைதூரம் சென்றிருப்பார்கள். ஆனால் அவள் என்னை விட்டு விலகுவதில்லையே ?இது என்ன பந்தம் ? எதற்காக இந்த சொந்தம்? அவளைப் பற்றி கவிதை எழுதினாலோ ? கதை எழுதினாலோ ? இல்லை அவளுடன் பேசினாலோ ? ஆற்று நீர் – ஊற்றுநீராய் அவன் கண்களில் கண்ணீர் பெருகுகிறது.இது எதற்கு? இந்த உதிரம் முழுவதும் அவள் தான் நிறைந்திருக்கிறாளா? என்று கேள்விகள் எல்லாம் அவனுக்குள் அடிக்கடி வந்து வந்து விழும்.
அன்றும் சந்தோஷமாக ஆரம்பித்த பேச்சுக் கடைசியில் சண்டையில் போய் முடிந்தது. அவள் சொல்லுவாள்,
” சினிமா போல் இருக்கிறது உங்கள் பேச்சு “
” ஏன் ?எதற்கு ? “என்று கேட்டால் சினிமா பேச்சு கடைசியில் சண்டையில் தான் முடியும். அது மாதிரி தான் உங்களுக்கும் எனக்குமான நட்பு .முதல்ல மெதுவா ஆரம்பிக்குது. கடைசியில சண்டையில் தானே போய் முடியுது? என்று எவ்வளவு திட்டினாலும் வாய்க்கு வராத ஒவ்வாத வார்த்தைகளை அவன் எவ்வளவு பேசினாலும் அதையெல்லாம் அவள் சட்டை செய்யாமல் என்னுடன் அன்பாக பழகுகிறாளே? இவளை எக்காரணத்தைக் கொண்டும் விடக்கூடாது என்று அடி மனதுக்குள் அடிக்கோடிட்டு கொண்டான் கவிப்ரியன்.
வழக்கம் போல் அன்று இரவும் பேச்சு. ஆனால் அன்று அளவுக்கு அதிகமாக பேசிவிட்டான். தொடர்புகளைத் தொடர்புபடுத்தி ஒரு சராசரிப் பெண்ணை விட கீழே இறங்கிப் பேசிய அவன் வார்த்தைகளால் நிச்சயமாக அவள் காயப்பட்டு இருக்க வேண்டும் என்று அவன் மனது சொன்னது.
அவள் நான் பேசியதற்கெல்லாம் விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள். நிச்சயம் இன்றோடு முடிந்தது .அவளுக்கும் எனக்குமான உறவு . இனி என்னுடன் அவள் பேசப்போவதில்லை” என்று பேசி முடித்துத் தலையில் அடித்துக் கொண்டான் கவிப்ரியன்.
அந்த இரவு, அந்த ராத்திரி அவனுக்கு சிவராத்திரி. இரண்டு கண்களும் சிவக்கச் சிவக்கத் தரையில் படுத்துக் கிடந்தான். எல்லா நாட்களைப் போல இன்று இல்லை. நாம் நிறையப் பேசி விட்டோம். இனி கண்டிப்பாக அவள் நம்மை அழைக்க மாட்டாள் ” என்று நினைத்து கொண்டிருந்தபோது அவனையும் அறியாமல் இரு கண்களின் வழியே கண்ணீர் வழிந்து நிறைந்தது. அழுத கண்ணீருக்கு அளவில்லை. அப்போது செல்போன் சிணுங்கியது. யார் இது? செல்போனை எடுத்துப் பார்த்தபோது கண்ணீருக்கும் கவுரவம் வந்தது.
” ஹலோ நான் தேவதை பேசுறேன் என்றாள் .எதிர் திசையில் அவளின் குரல் கேட்டபோது அவனால் வாய் திறந்து பேச முடியவில்லை. வாய்விட்டுக் கதறிக் கதறி அழுதான்.
” ஹலோ என்ன ஆச்சு?’’
அழுது கொண்டே இருந்தான்.
இவள் என்ன பெண்? இவ்வளவு பேசியிருக்கிறேனே? மனதில் எதையும் வைக்காமல் மறுநாளே என்னை அழைக்கிறாளே ? இந்தத் தேவதை உண்மையில் எனக்கான தேவதை தான் என்று நினைத்தான்.
கவலையில் அழுது நிறைந்த கவிப்ரியன் கண்கள் இப்போது மகிழ்ச்சியில் அழுது நிறைந்தது.