செய்திகள்

என்.எல்.சி. வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

மதுரை, ஜூலை.29-–

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் யாராக இருந்தாலும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் எனவும், என்.எல்.சி.க்கு நிலம் அளித்த உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-–

கடலூர் மாவட்டம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சார்பில் பரவனாறு பகுதியில் மாற்றுப்பாதை அமைக்கக்கூடிய பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக என்.எல்.சி. நிறுவனம் அந்த பகுதியில் இருக்கக்கூடிய 6 கிராமங்களில் நில எடுப்பு பணிகளை செய்து வருகிறது. இந்த பணிகளுக்கு ஏற்கனவே 304 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் 273 ஹெக்டேர் நிலங்கள் என்.எல்.சி. நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டது. 30 ஹெக்டேர் மட்டும்தான் நில உரிமையாளர்கள் இன்னும் என்.எல்.சி. நிறுவனத்திற்கு ஒப்படைக்கவில்லை.

2006 முதல் 2013 வரை கையகப்படுத்தப்பட்ட 104 ஹெக்டேர் பரப்பளவு வரை உள்ள 382 நில உரிமையாளர்களுக்கு ஏற்கனவே ஒரு ஏக்கருக்கு ரூ.6 லட்சம் இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இது நீங்கலாக ரூ.10 லட்சம் கூடுதலாக கருணைத்தொகை வழங்கப்பட இருக்கிறது. அதே காலகட்டத்தில் கையகப்படுத்தப்பட்ட 83 ஹெக்டர் பரப்பளவில் உள்ள 405 நில உரிமையாளர்களுக்கு ஏக்கருக்கு ரூ.2.6 லட்சம் இழப்பீட்டுத்தொகை நீங்கலாக, மேலும் ரூ.14 லட்சம் கருணைத்தொகையாக வழங்கப்பட வுள்ளது.

2000-–2005-ம் ஆண்டு வரை கையகப்படுத்தப்பட்ட 77 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள 301 நில உரிமையாளர்களுக்கு ரூ.2.4 லட்சம் வழங்கப்பட்டது. அதுபோக ரூ.6 லட்சம் கருணைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மொத்தமாக 1,088 நில உரிமையாளர்களுக்கு ரூ.75 கோடி மதிப்பிலான இழப்பீட்டுத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 16-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நில உரிமையாளர்களுக்கான இழப்பீட்டுத்தொகை பெறுவது தொடர்பாக 10 நாட்கள் சிறப்பு முகாம் நடக்கிறது.

பரவனாறு மாற்று பாதை பகுதிகளில் பயிர் செய்யக்கூடிய விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் அளவிற்கு என்.எல்.சி. நிறுவனத்தின் மூலம் இழப்பீடுத்தொகை பெறுவதற்கான உறுதி அளித்துள்ளோம். ஏற்கனவே ஒரு ஏக்கருக்கு ரூ.23 லட்சம் வழங்கிய நிலையில் தற்போது ரூ.25 லட்சமாக கூட உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே தொடர்ச்சியாக பல்வேறு கால கட்டங்களில் என்.எல்.சி.க்கான நில எடுப்பு பணிகள் குறித்து உள்ளூரில் உள்ள விவசாயிகளுக்கு என்.எல்.சி. நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் பேசி வருகின்றனர்.

தூண்டுதலில் வன்முறை…

இந்தநிலையில் என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டத்தை சில அரசியல் கட்சி நடத்தியபோது அறவழி போராட்டத்தை மாற்றி வன்முறைக்களமாக வெடித்திருப்பது கண்டனத்திற்குரியது. விவசாயிகள் அங்கு உள்ள நில உரிமையாளர்கள் இந்த விவகாரத்தை அமைதியாக கையாண்டாலும், சிலர் தூண்டுதலில் இந்த வன்முறை அரங்கேறி உள்ளது. இந்த வன்முறையின் காரணமாக 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ஒரு பிரச்சினையை பேசி தீர்வு காண முடியும். விவசாயிகளை கேடயமாக வைத்து இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

வன்முறையை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.

கடந்த டிசம்பர் மாதமே அவர்களுக்கு பயிரிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. திடீரென நிலஎடுப்பு பணிகள் அங்கு நடக்கவில்லை. பயிர் இருப்பதால், அவர்களுக்கு அதற்கான இழப்பீட்டு தொகையும் வழங்கப்பட இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *