செய்திகள் முழு தகவல்

என் இனிய புத்தகமே ! வாசகர்களால் கலைகட்டும் சென்னை புத்தக கண்காட்சி

ஒரு எழுத்தாளன்

ஒரு புத்தகத்தைத்

தொடங்கி வைக்கிறான்..

வாசகன் அதனை

முடித்து வைக்கிறான்

சாமுவேல்  ஜான்சன்

இந்த வரிகள் எழுத்தாளர் சாமுவேல்  ஜான்சனால் பரிசளிக்கப்பட்டவை .

கொரோனா காலத்தில், பலருக்கு புத்தகமே நண்பர்கள் ஆகின. இந்நிலையில் வாழ்க்கையை புத்துணர்ச்சியாக்க புத்தகத்தைப் புரட்டும் வாசகர்களுக்கும், அந்த வாசகர்களையும் வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கும் நூல் ஆசிரியர்களையும் இணைக்கும் பாலமாய் அமைந்துள்ளது இந்த புத்தகக் கண்காட்சி.

சென்னை தனது 45வது புத்தகக் கண்காட்சியை சிறப்பாக கொண்டாடி வருகிறது. இந்த  புத்தகக் கண்காட்சி சென்னை நந்தனம் ஒய். எம். சி. ஏ மைதானத்தில் பிப்ரவரி 16 தொடங்கி மார்ச் 6 வரை நடைபெறுகிறது. புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் இந்த புத்தகக் கண்காட்சி தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கத்தினரால்(பபாசி) நடத்தப்படுகிறது.

மக்களால் அதிகம் விரும்பப்பட்ட நூல்களும், துளிர்க்கின்ற புதிய வகை நூல்களும் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. காலை 11 மணிமுதல் இரவு 8 மணிவரை நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் அறிவு, அழகு, சிந்தனை, வரலாறு, போட்டி தேர்வு , விளையாட்டு , அரசியல்,மொழிப்பெயர்ப்பு என பல்வேறு துறைகள் சார்ந்த புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கொரோனா பரவல் எதிரொலியாக ,  இணையதளம் வாயிலாகவும் கண்காட்சியின் நுழைவாயிலிலும் நுழைவுச்சீட்டு வழங்கப்படுகிறது. தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த புத்தக கண்காட்சியில், வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் நுழைவுச்சீட்டு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

கண்காட்சியின் அமைப்பு :

தமிழக அரசின் வழிகாட்டுதல்கள் பின்பற்றி ,800க்கும் மேற்பட்ட புத்தக விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 8 நுழைவாயில் கொண்ட இந்த புத்தகக் கண்காட்சியில்,500 பதிப்பகங்கள் மூலம் ,2 கோடி புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அனைத்து வயதினரின் விருப்பத்திற்கேற்ப , ஏறத்தாழ 1 லட்சம் தலைப்புகளின் கீழ் புத்தகங்கள் இங்கு உள்ளன. புகழ்ப்பெற்ற எழுத்தாளர்களான சுஜாதா , வைரமுத்து, கண்ணதாசன் , கலைஞர் கருணாநிதி உள்ளிட்ட நூல்களும் புதிய எழுத்தாளர்களின்  நூல்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா, மும்பை, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் புத்தக அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ‘ரிச் டாட்,புவர் டாட் ‘போன்ற பிரபலமான புத்தகங்களின் மொழிப்பெயர்ப்பு புத்தகங்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. நீட் , டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு வழிகாட்டு புத்தகங்கள் விற்பனைக்கு வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு விளையாட்டுடன் வரலாறு , பொது அறிவு என டேப்லாய்டு புத்தகங்களுடன், ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தின் சிந்தனை வரைவு தமிழ்நாடு அரசு சார்பாக  காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மற்றும் விழிப்புணர்வை பற்றி நூல்களை பதிப்பிக்கும் ‘பூவுலகின் நண்பர்கள்’ செயலாளர் சுந்தர்ராஜன் , “ பருவமழை மாற்றம், இயற்கை விவசாயம், உணவு போன்ற தலைப்புகளின் புத்தகங்களை நடுவயதினர் ஆர்வமாக வாசிக்கின்றனர் “ என்றார். அமைதிக்கான நோபல் பரிசை வென்ற முதல் ஆப்ரிக்கப் பெண்ணான ‘ வங்காரி மாத்தாய் ‘ பற்றிய புத்தகத்தை, தான் விரும்பி வாசிப்பதாக சுந்தர்ராஜன் தெரிவித்தார்.

‘ திரைத்துறையின் நுணுக்கங்கள் அடங்கும்  புத்தகங்கள், இயக்குனர் களின் திரைத்துறை பார்வை  உள்ளிட்டவை இந்த துறைசார் படிக்கும் மாணவர்களை அதிகம் ஈர்த்துள்ளதாக டிஸ்கவரி பதிப்பகத்தின் உரிமையாளர் பொன். சி கூறினார்.

பெற்றோர்களுடன் புத்தகக் கண்காட்சிக்கு வந்த குழந்தைகள், தங்களை கவர்ந்த கதை , நகைச்சுவை , கார்ட்டூன் புத்தகங்களை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர். இணையவழியாகவே இரண்டு ஆண்டுகளாக படித்த தங்கள் குழந்தைகளை,புத்தகம் வாசிக்க ஊக்குவிப்பதாக பெற்றோர்கள் தெரிவித்தனர். புத்தகக் கண்காட்சிக்கு வருவதன் மூலம் குடும்பத்துடன்  பயனுள்ள வகையில்  நேரத்தைச் செலவிடுவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், கல்லூரி மாணவர்கள் பலர் நண்பர்களுடன் குழுவாக வந்து  சமூக சீர்திருத்த நூல்களையும், கவிதைகளையும் வாங்கிச் சென்றனர்.

வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புத்தக கண்காட்சியை காண மக்கள் ஆர்வத்துடன் வருகின்றார்கள். மேலும், கண்காட்சியைப் பார்த்துவிட்டு வெளியேறும் மக்களுக்கு ,   அரங்கின் வெளியில் சிற்றுண்டிகளும் விற்கப்படுகின்றன. இயந்திரம்போல் இயங்கும் மனித  வாழ்க்கையில் , புத்தக  வாசிப்பு  பழக்கம் வருங்கால இந்தியாவின்   வளர்ச்சிக்கு தூணாக இருக்கும் .


ராகவி ஹரி


Leave a Reply

Your email address will not be published.