சிறுகதை

என்ன பார்வை | ராஜா செல்லமுத்து

நகரின் பிரதான பூங்கா இரவு 8 மணிக்கு மேல் அடைக்கப்பட்டு விட்டதால் பூங்காவை சுற்றி நடந்து கொண்டிருந்தார்கள் ஆட்கள். பூங்காவிற்குள் சுற்றுவதும் பூங்காவிற்கு வெளியே சுற்றுவதும் ஒன்றுதான் , நடைபயணம் என்பது கால்நடைக்கு தான் , எங்கு நடந்தால் என்ன என்பதுபோல் பூங்காவை விட்டு விட்டு பூங்காவிற்கு வெளியே சுற்றிக் கொண்டிருந்தான் ஆனந்த்.

அவனுடன் வந்த நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள் ஆனந்த் மட்டும் பூங்காவிற்கு வெளியே நடைபயிற்சி மேற்கொண்டிருந்தான்.

அவனைப் போலவே நிறைய பேர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்கள்.

அவனின் செல்போன் சிணுங்க யாரது? என்ற கேள்வியுடன் செல்போனை ஆன் செய்து

ஹலோ என்று கேட்டான்.

எதிர்திசையில் அவனது உறவினர்

எப்படி இருக்கீங்க மாப்ள? என்று குசலம் விசாரித்தனர்.

நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க ?சென்னையில் இருக்கீங்களா வெளியூரில் இருக்கீங்களா என்று கேள்வியை உறவினர் கேட்டனர்.

அதற்கு ஆனந்த் பதில் சொல்லிக் கொண்டே நடைபயிற்சி மேற்கொண்டான். ஆட்கள் நிறைய பேர் நடந்து கொண்டே இருந்தார்கள்.

ஆனந்தின் செல்போன் பேச்சு நின்று கொண்டிருந்ததால் அவனும் நிற்காமல் நடந்து கொண்டே இருந்தான் .

அவனின் நண்பர்கள் பூங்காவின் வெளியே ஒரு ஓரத்தில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி அப்படியே பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது ஒரு நண்பர் கேட்டார்.

என்ன ஆனந்த் ? இன்னும் முடியலையா?

இல்ல இன்னொரு ரவுண்ட் அடிச்சுட்டு அப்புறமா வரேன் என்று பதில் சொல்லிவிட்டு ஆனந்த் பூங்காவை சுற்றி கொண்டிருந்தான்.

அப்போது எதேச்சையாக அங்கு சுற்றும் பெண்களை பார்ப்பது சராசரியாக நடப்பதும் அவ்வளவு ஆணித்தரமாக ஆபாசமாக அவன் யாரையும் பார்க்கவில்லை.

சாதாரணமாக பார்த்து நடந்து கொண்டே இருந்தான்.

ஒருகட்டத்தில் உறவினரின் பேச்சு முடிவுக்கு வர செல்போனை ஆஃப் செய்துவிட்டு , இளையராஜாவின் பாடல் மூழ்கினான்.

1, 2 இளையராஜாவின் பாடல்கள் அவன் நடை பயணத்திற்கு உதவியாக இருந்தது.

நடை பயணத்தோடு இசைஞானியின் பாடலும் இதமாக இருக்க இன்னும் கொஞ்சம் நடக்கலாம் என்று தோன்றியது அவனுக்கு.

ஏனென்றால் நடப்பதை விட இளையராஜாவின் பாட்டு இரண்டு அதிகமாக கேட்கலாமே என்ற ஆவல் அவனுக்கு மிகுந்து இருந்ததால் நடை இன்னும் கொஞ்சம் நீண்டு இருந்தது.

நின்று பேசிக் கொண்டிருந்த நண்பர்கள் ஆனந்தை கேட்டார்கள்.

என்ன ஆனந்த் இன்னும் முடியலையா ?என்று கேட்டார்கள்.

இதோ முடிச்சுட்டேன் என்று ஆனந்த் சொல்லியபடியே நண்பர்களுடன் சேர்ந்து நின்று கொண்டான்.

அப்போது அவன் அருகே ஒரு நாய் படுத்துக் கிடந்தது.

அந்த நாய் தன்னை கடித்து விடுமோ? என்ற அச்சத்தில்

அந்த நாயைப் புறக்கணித்து விட்டு ஒரு டூவீலரில் பின்னால் போய் நின்று கொண்டான்.

என்ன நினைத்ததோ தெரியவில்லை அந்த நாய். எழுந்து வேகமாகப் போக அந்த நாயைப் பார்த்துவிட்டு அதன் எதிரே ஒரு பெண்ணைப் பார்த்தான்.

அந்தப் பெண் என்ன நினைத்தாளோ தெரியவில்லை சட்டென்று ஆனந்தை பார்த்து

என்ன பார்வை? என்று ஆனந்தை பார்த்துக் கேட்டாள்.

ஆனந்த் வெலவெலத்துப் போனான்.

ஆனந்தைச் சுற்றியிருந்த நண்பர்கள் ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.

அவர்களைப் பார்த்தான்,

அவங்கள என்ன பாக்குறீங்க உங்கள தான் கேட்கிறேன். என்ன பார்வை ? என்று மறுபடியும் கேட்டாள்.

என்ன சொல்வது ? என்று விழித்த ஆனந்த்,

நான் உங்களை பாக்களங்க நாயைப் பார்த்தேன் என்று பதில் சொன்னான்.

என்னது நாயே பார்த்தீர்களா? என்று அவள் எதிர் பதில் சொல்லிவிட்டு சென்றது ஆனந்திற்கு என்னவோ போல் ஆனது.

என்ன ஒரு தைரியம், என்ன ஒரு துணிவு , எத்தனை ஆண்கள் நின்று கொண்டு இருக்கும்போது, ஒரு ஆணை நேருக்கு நேராக கேள்வி கேட்கும் இந்த வீரம் இந்தப் பெண்ணுக்கு எங்கிருந்து வந்தது.

என்ன பார்வை? என்று அவள் கேட்கும் அர்த்தம் வேறு எதையோ அர்த்தப் படுத்துவதாக இருக்கிறதோ? உடன் நின்று இருக்கும் நண்பர்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் ? என்று ஆனந்த் தனக்குத்தானே யோசித்துக் கொண்டான்

அவமானப்படுத்தி விட்டாேளே என்று ஆனந்த் நினைத்துக் கொண்டிருக்க

அவள் மறுபடியும் அந்தப் பூங்காவை சுற்றிக் கொண்டிருந்தாள். அவன் அந்த பெண்ணைப் பார்க்கவே இல்லை

ஆனால் அந்தப் பெண் ஆனந்தைப் பார்த்துக்கொண்டே சென்றாள்.

என்ன பார்வை? என்று அந்தப் பெண் கேட்டதன் அர்த்தம் அவனுக்கு புரியவே இல்லை

அதைப்பற்றி உடனிருக்கும் நண்பர்கள் எதுவும் கேட்கவே இல்லை .

ஒன்று மட்டும் ஆனந்திற்குப் புரிந்தது.

ஏதோ அந்தப் பெண் நம்மை தவறாக நினைத்து விட்டாள். நாம் பார்ப்பதை தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டாள்.

அது தான் அவள் அப்படிக் கேட்டிருக்கிறாள் என்று அவன் உள்ளம் கொஞ்சம் நொந்து கொண்டது உண்மைதான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *