சிறுகதை

என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே | ராஜா செல்லமுத்து

‘பாலு’

‘சொல்லுடா’

‘இப்ப என்ன பண்ணப் போற’

‘தெரியலையே’

‘ஏதாவது செய்யுடா’

‘பாப்போம்’

பாப்பமா?

‘ஆமா’

ம்ஹூம், நீ தேறவே மாட்ட

‘‘ஏன்?’

‘ஒன்னோட வார்த்தையில நம்பிக்கை இல்லையே’

‘வசந்த்’

‘சொல்லு’

நீ என்ன என்னைய இப்பிடியே சொல்லிட்டு இருக்க,

‘பெறகு என்ன சொல்லணும்னு நினைக்கிற, ஒனக்கு தான் எதுவும் தெரியலையேடா,

‘ஏன் இப்படி சொல்ற,’

நம்பிக்கையில்லாத வார்த்தைகள் தாண்டா என்கிட்ட இருந்து வருது, எதையும் சாதிக்கணும்னா எல்லாத்தையும் தாங்கித் தான் ஆகணும், இல்ல அத நோக்கி ஓடிட்டு தான் இருக்கணும், நீ சும்மாவே இருந்தா எப்பிடி?

‘இல்லையே வசந்த் நான் ஒழச்சிட்டு தான் இருக்கேன்,

‘இல்லையே’

‘நீ நெனைக்கிற மாதிரி இல்ல வசந்த் இந்த வாழ்க்கை ரொம்ப கஷ்டமாயிருக்கு அதான்–

‘டேய்… டேய்… முட்டாப்பயலே… எதுவுமே இங்க ஈஸி இல்ல, கஷ்டம் தான்– கஷ்டத்தப் பாத்தா கண்டிப்பா ஜெயிக்க முடியாது,

‘நானும் முட்டி மோதிட்டு தான் இருக்கேன் வசந்த், இப்ப எல்லாமே எனக்கு வெறுத்துப் போச்சு, இனியொரு முறை போராட சக்தியில்ல’ இருவரும் பேசியபடியே பிரதான சாலையில் நடந்த கொண்டிருந்தனர்.

‘‘மினுக்… மினுக்… மினுக் மின்னிக் கொண்டிருந்தன– தெரு விளக்குகள். அதில் ஒரே ஒரு டியூப் லைட்டும் பக்… பக்… பக் என போராடிப் போராடி எரிந்து கொண்டிருந்தது.

‘‘டேய்… பாலு’’

‘ம்’

அங்க பாத்தியா?

‘எங்க?’

‘அங்க’ என்று வசந்த் காட்டிய போதும் விளங்காமலே விழித்தான்,

பாலு…

‘டேய்… நீ நெனைக்கிற மாதிரி மனுசங்கள சொல்ல’

‘பெறகு’

‘‘அங்க பாரு… என்று ‘பக்… பக்… பக்’ என எரிந்து கொண்டிருந்த டியூப் லைட்டை காட்டினான் வசந்த்.

‘பாத்தியா… எரிய முடியாதுன்னு தெரிஞ்சும், அது விடாம எப்பிடியாவது எரிஞ்சுடணும்னு, இங்க வாழ்ந்திரணும்னு நெனைக்குது பாரு, அந்த டியூப்லைட்டு, அதுக்கு இருக்கிற போராட்டம் கூட நமக்கு இல்லையே பாலு, என்று வசந்த் சொன்ன போது, பாலுக்குச் சுரீரென்றது.

‘என்ன பாலு, எப்பிடி… ஆமா வசந்த், நீ சொல்றது சரி தான், எனக்குள்ள கொஞ்சம் நம்பிக்கைய ஊத்திக்கிறேன்.’ என்று பாலு சொன்ன போது, வசந்த் கொஞ்சம் சந்தோஷப்பட்டான்.

‘இப்ப என்ன செய்யலாம் பாலு’

‘மார்க்கெட் போவோம்…’’

‘ம்’

‘காய்கறி வாங்குவோம்’

‘சமச்சு சாப்பிடலாமே’

‘‘நல்ல ஐடியா,’

‘ஆமா பாலு, இப்பிடி சும்மா இருக்கிற நேரங்களில் சமச்சு சாப்பிட்டா நல்லதில்லையா?

ஆமாமா ஒடம்புக்கும், மனசுக்கும் கண்டிப்பா அது நல்லதா தான் இருக்கும்’ என்று பேசிக் கொண்டே இருவரும் மார்க்கெட் நோக்கி விரைந்தனர்.

கண்ணாடிப் பெட்டிக்குள்ள காய்கறிகள மறச்சு வச்சு, ஏசி போட்டு ஒக்காந்து காய்கறிகள வித்தா, அது பெரிய வியாபாரம், அங்க தான் அம்புட்டு ஆளுகளும் போவானுக, ஆனா தரையில காய்கறிகளப் போட்டு கூவிக் கூவி விக்கிற இந்த மாதிரி சாதாரண மார்க்கெட்டெல்லாம் பணக்காரனுகளுக்கு கேவலமா இருக்குல’ என்று இருவரும் பேசிக் கொண்டே சென்றனர்.

‘தக்காளி பீட்ரூட், பீன்ச், வெங்காயம்… வெங்காயம்’ என்ற சத்தத்தின் ஊடே’ என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’ என்ற பாடல் கேட்டுக் கொண்டிருந்தது. என்னது காய்கறிக் கடையில பாட்டுச் சத்தம் கேக்குதே’

‘ஆமால்ல, போய் பாக்கலாம் என்று இருவரும் போய்க் கொண்டிருந்தார்கள்.

அங்கே… அங்கே… இரண்டு கண்ணும் தெரியாதவர்கள் ஆர்மோனியப் பெட்டியை வைத்துக் கொண்டு பாட்டுப் பாடியபடியே இருந்தனர்.

‘டேய் பாலு… பாத்தியா… இதுதாண்டா நம்பிக்கை… எதுவும் இல்லன்னு சொல்லிட்டு பொலம்பிட்டு திரியுறதவிட, இருக்கிறத வச்சு, சரியா செஞ்சமுன்னா, இங்க கண்டிப்பா ஜெயிச்சிரலாம்’’ என்று வசந்த் சொன்ன போது, பாலுவுக்குள் ஒரு புயலே புறப்பட்டது–

‘என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே பாடல்’ ஒலித்துக் கொண்டிருக்க, காய்கறிகளை வாங்கிக் கொண்டு வெளியேறினர்.

‘‘பக்… பக்… பக்… பக்… பக்… பக்…என மீண்டும் உயிர் பிடிக்க எரிந்து கொண்டிருந்தது டியூப்லைட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *