செய்திகள்

என்னை கேட்காமல் வரவு செலவு கணக்கு கையாளக்கூடாது, ‘‘நான் தான் பொருளாளர்’’: வங்கிக்கு ஓ.பி.எஸ். கடிதம்

சென்னை,ஜூலை 12–

நான் தான் பொருளாளர், என்னை கேட்காமல் வரவு செலவு கணக்குகளை கையாள கூடாது, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வங்கிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

அண்ணா தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசனும் நியமிக்கப்பட்டனர். இதனிடையே அண்ணா தி.மு.க. புதிய பொருளாளர் நியமனம் தொடர்பாக கரூர் வைஸ்யா, இந்தியன் வங்கி மேலாளருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். அதில் அண்ணா தி.மு.க.வின் வரவு செலவு கணக்குகளை திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார் என குறிப்பிட்டிருந்தார். காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தையும் இனி திண்டுக்கல் சீனிவாசன் மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அண்ணா தி.மு.க. வரவு, செலவு கணக்குகளை தன்னை கேட்காமல் மேற்கொள்ள கூடாது என கரூர் வைஸ்யா வங்கிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:–

இந்திய தேர்தல் ஆணைய சட்டப்படி இன்று வரை நானே பொருளாளர். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் என்னை கேட்காமல் எந்த வரவு – செலவு கணக்கையும் மேற்கொள்ள கூடாது. மீறி வரவு – செலவு கணக்கை மேற்கொண்டால் வங்கி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அண்ணா தி.மு.க. பொருளாளர் பதவி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் எழுதிய போட்டி கடிதத்தால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பும் அதிமுக வங்கிக் கணக்குக்கு உரிமை கொண்டாடுவதால் யாரை அனுமதிப்பது என வங்கிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.