அந்த சலவைத் தொழிலாளி இரண்டு கழுதைகள் வளர்த்து வந்தான். ஆற்றங்கரைக்கு துணிகளை எடுத்தச் செல்ல அவைகளை பயன்படுத்தவான். இரண்டு கழுதைகளும் பக்கத்துக்குப் பக்கமாகச் செல்லும். காலையில் அவைகளுக்கு தீனி போட்டு விட்டுத் தான் அழுக்குத் துணிகளை அதன் மேல் ஏற்றுவான். சில சமயம் அதிகமாகவும். சில சமயம் மிதமாகவும் துணிகள் ஏற்றபட்டு இருக்கும். ஆற்றங்கரை வந்ததும் அவற்றை இறக்கி வைத்து விட்டு கழுதைகளை அங்கு சுதந்திரமாக திரிய விடுவான். கழுதைகள் எல்லைக் கோட்டைத் தாண்டாத வண்ணம் அடிக்கடி பார்த்துக் கொள்வான்.
மறுபடியும் மாலை துணிகளை தோய்த்து காய வைத்து மடித்து அவைகளை கழுதைகள் முதுகில் ஏற்றி வைத்து அவற்றுடன் வீடு வந்து சேருவான்.
கழுதைகளுக்கு மாலை வரும் போது முதுகில் எடை குறைந்த மாதிரி அவைகள் உணரும். வீடு வந்ததும் முட்டைகளை இறக்கி வைத்து விட்டு அவைகளை அருகருகில் கட்டி வைத்து விடுவான். அப்போது அவைகள் அப்பாடி இன்று வேலை முடிந்தது என்று இரண்டு கழுதைகளும் பேசிக் கொள்ளுமாம். அடுத்து இரவு உணவை எதிர் பார்த்து நிற்குமாம் இரண்டு கழுதைகளும். சிறிது தாமதமானால் ஒரு கழுதை மற்றதைப் பார்த்து இன்று உன் முறை நீ கத்து என்று சொல்லுமாம். அவைகளுக்குள் அப்படி ஒரு கொள்கை உடன்படிக்கை. வெய்யிலோ. மழையோ அவைகள் வெட்ட வெளியில் தான் நிற்க வேண்டும். இது ஒன்று தான் அவைகளுக்கு பிடிக்காத ஒன்றாக உணர்த்தும். சின்ன ஓலைகளை வைத்து மேற் கூரை மாதிர் அமைத்திருந்தால் ஒதுங்கலாம் என்ற எண்ணம் பல நாட்களாக இரண்டு கழுதைகளுக்கும் இருந்தது. சலவைத் தொழிலாளி கோல் கொண்டு வருவதைப் பார்த்தால் இரண்டும் பயந்து நடுங்கி விடும்.
நாட்கள் செல்லச் செல்ல இரண்டு கழுதைகளும் வளர்ச்சி அடைய சலவைத் தொழிலாளி இன்னும் நிறைய பொதிகளை ஏத்தி சுமக்கச் செய்தான். இரண்டும் சில சமயம் திணறும் போது அவன் கோல் கொண்டு அடிக்கும் போது வேதனைகள் இரண்டு மடங்காகி விட்டிருப்பதாக அவைகள் உணரும்.
சலவைத் தொழிலாளி மனைவி என்னங்க. அவைகளுக்கு உணவு தரவில்லையே என்றால்….
குடுப்போம் குடுப்போம் என்பான்.
சொல்லி அரை மணி நேரத்தில் அவன் மனைவி தான் வந்து தருவாள். இரண்டும் தாயுள்ளத்தை மனதிற்குள் பாராட்டும்.
அன்று வந்த பண்ணையார் வீட்டு ஆள் பண்ணையார் உன்னை அழைத்தார் என்ற கூற. சலவைத் தொழிலாளி உடனே வருகிறேன் என்று கூறி விட்டு அங்கு சென்றான். பண்ணையார் இந்தாப்பா வீட்டில் சுப நிகழ்ச்சி வரவுள்ளது. ஆதலால் நீ எல்லா வேலைகளையும் நிறுத்தி நம் வீட்டுத் துணிமணிகளை முதலில் துவைத்து தயார் பண்ணிக் கொடு என்றார். அடுத்த நாள் துணியை எட்டு மூட்டைகளாக் கட்டி கமுதை மீது ஏத்தி கொணர்ந்தான் சலவைத் தொழிலாளி. சரியான கணம் என அவன் மனைவி கூறினாள்.
பேச நேரமில்லை வா ஆற்றங்கரைக்குப் போவோம் என்றான். சலவைத் தொழிலாளி கொஞ்சம் வாடிக்கைக்காரர் துணியையும் துவைப்போம் என்றான்.
சரியான வேலை தான் என்றாள் அவன் மனைவி.
சும்மா வருமா பணம் என்றான் அவள் கணவன்.
மறு நாள் எல்லா துணிகளும் ஆற்றங்கரைக்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்தான் சலவைத் தொழிலாளி. அதிகாலை 5 மணிக்கே துணிகளை கழுதைகளின் மீது ஏத்தினான். அவைகள் மிகவும் சிரமப்பட்டன பாரம் தாங்காமல். அதை உணரும் நிலையில் அவனில்லை. அப்போது அங்கு சென்ற ஒருவன் பக்கத்து ஊருக்கு வியாபாரம் செய்ய பல பொருட்களை கொண்டு சென்றான். அதில் ஒன்று கழுதைப் படம் போட்டு என்னைப் பார் யோகம் வரும் என்பது தான். அவன் மனைவி இதை அவனிடம் கூற. இதுகள் முகத்தை தான் பார்த்துக்கொண்டே இருக்கிறோமே என்று அங்கலாயித்தான்.
அப்போது பாரம் தாங்காமல் முக்கி முணங்கி வந்த கழுதைகள் இரண்டும் பேசின. நாம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்க்கிறோமே என்ன யோகம் வந்தது. பாரம் தான் கூடுகிறது. இன்னும் உண்ண நமக்கு எதுவும் தரவில்லை. என்ன யோகமோ இன்று. மனிதர்கள் நமது படத்தை வைத்து சம்பாதிக்கிறார்கள் என்பது தான் மிச்சம் என்று பேசிக் கொண்டன. இப்படி ஏமாற்றுகிறார்களே என்று ஒரு கழுதை கூற. மற்றது ஏமாறுபவர்கள் இருக்கும் வரை இதெல்லாம் நடை முறை சாத்தியமே என்றது.
பசி காதை அடைத்தது இரு கழுதைகளுக்கும்.
அப்போது அங்கு வந்த மனைவி சீக்கிரம் வீட்டிற்கு வாருங்கள் உணவு தயார் பண்ணனும் என்றதும் இரு கழுதைகளும் யாருக்கு என்று தங்களுக்குள் கேட்டுக் கொண்டன.