சென்னை, மே.13-
என்ஜினீயரிங் பட்டப்படிப்புக்கு 6 நாட்களில் ஒரு லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 450-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகளில், 2 லட்சத்துக்கும் அதிகமான என்ஜினீயரிங் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான 2025–26ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவை கடந்த 6-ந்தேதி தொடங்கியது. விண்ணப்பப்பதிவு தொடங்கிய முதல் நாளில், சுமார் 14 ஆயிரத்து 462 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதன்பிறகு மே 8-ந்தேதி பிளஸ்–2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதும், என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை வேகமெடுத்தது.
அந்த வகையில், நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, என்ஜினீயரிங் பட்டப்படிப்புக்கு 1 லட்சத்து 5 ஆயிரத்து 314 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 48 ஆயிரத்து 323 மாணவர்கள் விண்ணப்ப கட்டணங்களை செலுத்தி உள்ளனர். அவர்களில் 20 ஆயிரத்து 941 மாணவர்கள் அசல் சான்றிதழ்களை சமர்பித்துள்ளனர்.
விண்ணப்பப்பதிவு மேற்கொள்ள அடுத்த மாதம் (ஜூன்) 6-ந்தேதி கடைசி நாளாகும். அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய ஜூன் 9-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, சம வாய்ப்பு எண் ஜூன் 11-ந்தேதியும், தரவரிசை பட்டியல் ஜூன் 27-ந்தேதியும் வெளியிடப்படுகின்றன.