செய்திகள்

என்ஜினீயரிங் படிப்புக்கான 3 சுற்று கலந்தாய்வு நிறைவு:1 லட்சத்து 6 ஆயிரம் இடங்கள் நிரம்பின

சென்னை, ஆக.28-

என்ஜினீயரிங் படிப்புக்கான 3 சுற்று கலந்தாய்வு நிறைவில் 1 லட்சத்து 6 ஆயிரம் இடங்கள் நிரம்பி உள்ளன. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை சற்று அதிகரித்து இருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 442 என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள பல்வேறு படிப்புகளில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 378 இடங்கள் இருக்கின்றன. இதற்கான இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. ஏற்கனவே சிறப்பு பிரிவு மாணவ-மாணவிகளுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்ற நிலையில், பொது பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவு ஆகியவற்றுக்கான பொது கலந்தாய்வு கடந்த மாதம் (ஜூலை) 28-ந் தேதி தொடங்கியது.

மொத்தம் 3 சுற்றுகளாக கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் சுற்று கலந்தாய்வு நிறைவில் 16 ஆயிரத்து 96 இடங்கள் நிரம்பின. 2-வது சுற்று கலந்தாய்வு நிறைவில் 40 ஆயிரத்து 741 இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன.

இதனைத் தொடர்ந்து 3-வது சுற்று கலந்தாய்வு கடந்த 22ந்தேதி தொடங்கியது. இந்த கலந்தாய்வில் விருப்ப இடங்களை தேர்வு செய்தவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டு உள்ளன.

அதன்படி, 3-வது சுற்று கலந்தாய்வில் பொதுப் பிரிவில் 44 ஆயிரத்து 932 இடங்களும், அரசு பள்ளி மாணவ–மாணவிகளுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவில் 4 ஆயிரத்து 97 இடங்களும் என 49 ஆயிரத்து 29 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த கலந்தாய்வில் ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்கள், அந்தந்த கல்லூரிகளில் சேருவதற்கு வருகிற 31ந்தேதி கடைசி நாள் ஆகும்.

கடந்த ஆண்டைவிட அதிகம்

3 சுற்றுகளையும் சேர்த்து, மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 378 இடங்களில், பொதுப் பிரிவில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 866 இடங்களும், சிறப்பு பிரிவில் 775 இடங்களும் என 1 லட்சத்து 6 ஆயிரத்து 641 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன. அதனையடுத்து வருகிற 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை துணை கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதிலும் சில இடங்கள் நிரப்பப்படும்.

இதன் மூலம் பார்க்கையில் என்ஜினீயரிங் படிப்பு மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு சற்று அதிகரித்து இருப்பதை பார்க்க முடிகிறது. கடந்த ஆண்டில் 92 ஆயிரம் இடங்கள் மட்டுமே நிரம்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், கலந்தாய்வு முழுவதுமாக நிறைவு பெற்றதும், அதாவது அடுத்த மாதம் (செப்டம்பர்) 11ந்தேதிக்கு பிறகு பெறப்படும் புள்ளி விவரங்களின் அடிப்படையில் தான் முழு விவரங்கள் தெரிய வரும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *