செய்திகள்

என்ஜினீயரிங் படிப்புகளில் சேர பொதுப்பிரிவு கலந்தாய்வு துவங்கியது

சென்னை, ஜூலை 28–

தமிழகத்தில் என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 430 என்ஜினீயரிங் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.57 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு இணையவழியில் கடந்த ஜூலை 22ம் தேதி தொடங்கியது.

முதல்கட்டமாக முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுப் பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 22 முதல் 26ம் தேதி வரை நடைபெற்றது. சிறப்புப் பிரிவில் மொத்தம் 8,764 இடங்கள் இருந்த நிலையில், அவற்றில் 775 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இதில் 90 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் நிரம்பின.

இதையடுத்து, பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று முதல் ஆன்லைனில் 3 சுற்றுகளாக நடைபெறுகிறது. முதல் சுற்று பொது கலந்தாய்வு இன்று முதல் ஆகஸ்ட் 9–ந்தேதி வரை நடத்தப்படுகிறது. இதில் தரவரிசையில் 22 ஆயிரத்து 761 இடம் வரையுள்ள மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கிறார்கள். முதல் சுற்றில் மாணவர்கள் இன்று காலை 10 மணி முதல் ஜூலை 30–ந்தேதி மாலை 5 மணி வரை விருப்ப கல்லூரிகள் மற்றும் விருப்ப பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம். வரும் 31–ந்தேதி காலை 10 மணிக்குள் மாணவர்களின் விருப்ப தேர்வு அடிப்படையில் அவர்களுக்கான தற்காலிக இடம் ஒதுக்கப்படும் என மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான கூடுதல் விவரங்களை www.tneaonline.org என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். கலந்தாய்வின் 3 சுற்றுகளுடன் செப்டம்பர் 3-ம் தேதியுடன் நிறைவுபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *