சென்னை, ஜூலை19-
என்ஜினீயரிங் கல்லூரிகளில் இந்த ஆண்டு 20 ஆயிரம் இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்தவர்களில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 868 பேருக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இவர்களுக்கான கலந்தாய்வு வருகிற 22-ம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் மாதம் 11-ம் தேதி வரை நடைபெற இருப்பதாக தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே 2024–25-ம் கல்வியாண்டுக்கு 476 என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள பல்வேறு தொழில்நுட்ப பாடப்பிரிவுகளில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 376 காலி இடங்கள் இருக்கின்றன. இது கடந்த ஆண்டைவிட 20 ஆயிரத்து 140 இடங்கள் கூடுதலாகும்.
இதில் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம், தகவல் அறிவியல் உள்ளிட்ட பிற படிப்புகளில் 2 ஆயிரத்து 965 இடங்களும், கட்டிடக்கலை படிப்புகளில் 390 இடங்களும் குறைக்கப்பட்டுள்ளன.