அமைச்சர் கோவி.செழியன் துவக்கினார்
சென்னை, மே.8-
என்ஜினீயரிங், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவை அமைச்சர் கோவி.செழியன் நேற்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 450-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகளில் 2025-–26-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவை உயர்கல்வித் துறையின் கீழ் செயல்படும் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தொடங்கி உள்ளது.இந்த ஆன்லைன் விண்ணப்பப் பதிவை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று தொடங்கி வைத்தார்.
www.tneaonline.org என்ற இணையதளத்தில் சென்று மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் பதிவு கட்டணமாக எஸ்.சி., எஸ்.சி.ஏ, எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250-ம், மற்ற பிரிவினர்களுக்கு ரூ.500-ம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இணையதளவசதி இல்லாத மாணவர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்பப்பதிவு மற்றும் கலந்தாய்வில் கலந்துகொள்ள உதவுவதற்காக தமிழ்நாடு முழுவதும் சென்ற ஆண்டை போலவே 110 தமிழ்நாடு என்ஜினீயரிங் சேர்க்கை சேவை மையங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
விண்ணப்பப் பதிவு மேற்கொள்வதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூன்) 6-ந்தேதி ஆகும். அதேபோல், அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அடுத்த மாதம் 9-ந்தேதி என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதனைத்தொடர்ந்து ‘ரேண்டம்’ எண் 11-ந்தேதி வெளியிடப்படும். மேலும் அதே மாதம் 10-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை சான்றிதழ்கள் சரிசெய்யப்பட்டு, தரவரிசைப் பட்டியல் 27-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை குறித்த கலந்தாய்வு அறிவிப்பை வெளியிட்டதும், கலந்தாய்வு குறித்த அட்டவணையை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிடும் என அறிவித்திருக்கிறது. விண்ணப்பப்பதிவு தொடர்பான சந்தேகங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 1800-425-0110 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.
இதேபோல் பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவையும் அமைச்சர் நேற்று தொடங்கி வைத்தார். அதன்படி, 55 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு நேரடி, 2-ம் ஆண்டு மற்றும் பகுதிநேர டிப்ளமோ படிப்புகளுக்கு https://www.tnpoly.in என்ற இணையதளம் வாயிலாக வருகிற 23-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான பதிவு கட்டணமாக எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினரை தவிர மற்ற அனைவருக்கும் ரூ.150 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரி
இதுதவிர, தமிழ்நாட்டில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் உள்ள ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 345 இடங்களில் சேருவதற்கும் www.tngasa.in என்ற இணையதளத்தில் வருகிற 27-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.2-ம், இதர பிரிவினர்களுக்கு ரூ.50-ம் விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அரசு தெரிவித்துள்ளது.
விண்ணப்பப்பதிவு தொடக்க நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை செயலாளர் சமயமூர்த்தி, கல்லூரிக் கல்வி ஆணையர் சுந்தரவல்லி, தொழில்நுட்ப கல்வி ஆணையர் இன்னசென்ட் திவ்யா, தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் ஆகியோர் உடன் இருந்தனர்.
என்ஜினீயரிங், பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று மாலை 6 மணி வரையிலான நிலவரப்படி, என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்காக 14 ஆயிரத்து 462 பேர் விண்ணப்பித்து இருப்பதாகவும், அவர்களில் 2 ஆயிரத்து 413 பேர் கட்டணம் செலுத்தி, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருப்பதாக தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை அலுவலகம் தெரிவித்து உள்ளது.
இதேபோல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர 1,261 பேர் விண்ணப்பப்பதிவு செய்து உள்ளனர். ஆனால் பாலிடெக்னிக் கல்லூரிகளில் எத்தனை பேர்? என்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.