செய்திகள்

என்ஜினீயரிங் கலந்தாய்வு 22–ந்தேதி துவங்குகிறது

அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை, ஜூலை 13–

என்ஜினீயரிங் கலந்தாய்வு இம்மாதம் 22–ந்தேதி தொடங்குகிறது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான அட்டவணையை சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:–

என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூலை 22ம் தேதி தொடங்குகிறது. அன்றும் 23–ந்தேதி அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெறுகிறது. 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜூலை 28ம் தேதியில் இருந்து 3 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற இருக்கிறது. ஜூலை 28ம் தேதியிலிருந்து தொடங்கி ஆகஸ்ட் 9–ந்தேதி வரை முதல் சுற்று கலந்தாய்வும், ஆகஸ்ட் 9ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 22–ந்தேதி வரை 2ம் சுற்று கலந்தாய்வும், ஆகஸ்ட் 22–ந்தேதியிலிருந்து செப்டம்பர் 3–ந்தேதி வரை 3ம் சுற்று கலந்தாய்வும் நடைபெறுகிறது. செப்டம்பர் 11–ந்தேதிக்குள் கலந்தாய்வு முடிக்கப்படும். 3 சுற்று கலந்தாய்வும் முடிந்த பிறகு காலியிடங்கள் இருக்கும் பட்சத்தில் சிறப்பு கலந்தாய்வு நடைபெறும். வழக்கமாக 4 சுற்றுகளாக நடத்தப்படும் கலந்தாய்வு, இந்த ஆண்டு 3 சுற்றுகளாக நடத்தப்பட உள்ளது.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் 11,804 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 236 பேர் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ளனர்.

தமிழகத்தில் 430 என்ஜினீயரிங் கல்லூரிகளில் 1 லட்சத்து 57 ஆயிரம் இடங்கள் உள்ளன. கடந்த ஆண்டை விட இந்தாண்டு 3,100 இடங்கள் கூடுதலாக உள்ளன.கலந்தாய்வில் பங்கேற்க 1 லட்சத்து 78 ஆயிரத்து 959 பேர் மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெற்றுள்ளனர்.

புதிதாக 2 படிப்புகள் துவக்கம்

காலியிடங்கள் இல்லாமல் அனைத்து இடங்களையும் நிரப்புவதற்கான வழிமுறைகளை கையாள, முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

மின்னணு தகவல் தொழில்நுட்ப துறையில் புதிதாக 2 படிப்புகள் துவங்கப்பட உள்ளது. அதாவது ECE Advanced Technology, ECE Design and Technology ஆகும்.

ஒரு கல்லூரியில் சேரும் மாணவர் விரும்பினால் வேறு கல்லூரி கல்லூரிக்கு மாறிக் கொள்ள முடியும். அவர்களுக்கான கட்டணத்தை கல்லூரிகள் திருப்பி வழங்க வேண்டும் என்ற உத்தரவு ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. வரும் 21–ந்தேதி அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல்கலைக்கழக பாடத்திட்டம் தொடர்பாக துணைவேந்தர்களுடன் ஆலோசிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஆன்லைனில் கடந்த மே 5–ந்தேதி தொடங்கி ஜூன் 4–ந்தேதி வரை நடந்தது. இதில் 2.29 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில் 1.88 லட்சம் பேர் விண்ணப்பக் கட்டணத்துடன் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தனர். இதில் தகுதியின்மை காரணமாக 3,828 விண்ணப்பங்களும், ஒன்றுக்கு மேற்பட்ட பதிவு காரணமாக 5,060 விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன.

இதனையடுத்து இவர்களுக்கான ரேண்டம் எண் கடந்த ஜூன் 6–ந்தேதி வெளியானது. தொடர்ந்து, ஜூன் 20–ந்தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது.

இதனைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 102 மாணவர்கள் 200க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்றனர் என்பது குறிப்பிடித்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *